ஜிஎஸ்டி எதிர்ப்பு... ஜெயலலிதா நடவடிக்கை அரசியலா, அவசியமா?

சோ.கார்த்திகேயன்

நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து வரி விதிப்பில் மிகப் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. நாட்டில் தற்போது பல்வேறு வரி விதிப்பு முறைகள் நடைமுறையில் உள்ளது. இதனை மாற்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்த மத்திய அரசு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. இதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

ஜெயலலிதா எதிர்ப்பு!

ஜிஎஸ்டி மசோதாவுக்கு தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் ஆதரவு அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சொல்லி இருக்கிறார்.  இந்தியாவில்  உள்ள எல்லா மாநில அரசுகளும் இந்த மசோதாவை ஆதரிக்கும்போது தமிழக அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது  ஏன்   இந்த மசோதாவை முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பதற்கு நிர்வாக ரீதியாக என்ன காரணம் என்பதை அறிய வரித் துறை நிபுணர் மற்றும் வழக்கறிஞர் வைத்தீஸ்வரனிடம் பேசினோம். 

“ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, அதற்குக் கிடைக்கும் வரி வருவாய் என்பது, இப்போது அந்தப் பொருள் எந்த மாநிலத்தில் விற்பனை செய்யப்படு கிறதோ, அந்த மாநிலத்துக்கு மட்டுமே  கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டைப் போல தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அதிகள வில் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் அந்த பொருள் எந்த மாநிலத்தில் விற்பனையாகிறதோ, அந்த மாநிலத்துக்குத்தான் வரி வருவாய் கிடைக்கும். இதனால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் கிடைக்காமல் போய்விடும். இதனால் தமிழகத்தின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்படும். இதனால்தான் முதல்வர் ஜெயலலிதா ஜிஎஸ்டி-ஐ தமிழகத்தில் அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தமிழகத்தின் வரி வருமானம் குறையும்பட்சத்தில் தமிழக அரசு, பல்வேறு நலத்திட்ட செலவுகளை குறைக்க நேரிடும்.

தமிழக அரசுக்கு நஷ்டம் வராது!

ஆனால், மத்திய அரசு இது குறித்து கூறுகையில், ‘‘இதனால் தமிழக அரசுக்கு நஷ்டம் வராது; சரக்குகளுக்கு மட்டும்தான் வாட் வரியை விதிக்கிறீர்கள்; ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்பட்சத்தில் சேவை வரி வருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். சேவை வரியைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசுக்கு நஷ்டம் வராது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏனெனில் இதுவரை சேவை வரியை மத்திய அரசு மட்டுமே வசூலித்து வந்தது. ஆனால், ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படும்பட்சத்தில் சேவை வரி  மூலம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வருவாய் கிடைக்கும். இதன் காரணமாக தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது என மத்திய அரசு கூறி வருகிறது.

சேவை வரி, கலால் வரி, சிறப்பு கூடுதல் வரி போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு மத்திய ஜிஎஸ்டி(CGST) என மாற்றியமைக்கப்பட உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, நுழைவு வரி, கொள்முதல், மாநில விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப் பட்டு, ஸ்டேட் ஜிஎஸ்டி (SGST) என கொண்டுவரப்பட உள்ளது.

விலை குறையும்!

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியபின் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படுவதற்கான செலவு குறையும். உற்பத்திச் செலவு குறைவதினால் அந்தப் பொருளின் விற்பனை விலை குறையும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபின் பொருட்களின் விலை ஒரு ஆண்டுக்குள் குறையும். அதே சமயத்தில், சேவை வரி வசூல் அதிகரிக்கும். ஏனெனில் இன்று சேவை வரி 15% என்ற அளவில்தான் உள்ளது. ஜிஎஸ்டி வந்தால் இது 18 சதவிகிதமாக அதிகரிக்கும்.

வணிகர்களுக்கு வரி மேல் வரி என்று இருந்த நிலை மாறிவிடும். பல விதமான வரிகள் என்று இருந்த நிலை மறையும். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் கொள்முதல் செய்யலாம் என்ற நிலை ஏற்படும். இதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை குறையும்; சந்தையில் பொருட்களின் விலை குறையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்