விடுதலைப் பத்திரம் பதிவு செய்வது எப்படி?

?அப்பாவின் பெயரில் கிராமத்தில் ஒரு வீடு உள்ளது. அதில் என் அம்மா வசித்து வருகிறார். எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். வீட்டில் பங்கு எதுவும் வேண்டாம் என என் அக்கா சொல்கிறார். இதை எவ்வாறு பதிவு செய்வது, எவ்வளவு செலவாகும், எங்கு பதிவு செய்ய வேண்டும்?

ராமச்சந்திரன்,

கே.அழகுராமன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“உங்களது அக்கா, சொத்தில் தனக்கு பங்கு வேண்டாம் என்பதை ஆவணம் மூலம் உறுதி செய்தல் அவசியம். அதற்கு விடுதலைப் பத்திரம் (release deed) எழுதி பதிவு செய்துகொள்ள வேண்டும். உங்கள் அக்கா தனக்குள்ள பாகத்தை உங்கள் மீதுள்ள பாசத்தினால் பிரதிபலன் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் உங்களுக்கு விட்டுக் கொடுக்கிறார். உங்கள் அம்மாவும் அவருக்குள்ள பாகத்தை உங்களுக்கு விட்டுக் கொடுப்பதாக இருப்பின், மேற்படி விடுதலைப் பத்திரத்திலேயே சேர்த்து உங்களுக்கு எழுதிக் கொடுக்கலாம்.

உங்கள் அம்மா அந்த வீட்டில் அவரது காலம் வரை வசித்துக் கொள்ளும் விதமாகவும் ஷரத்து ஒன்று சேர்த்து எழுதிக் கொள்ளலாம். இந்த விடுதலைப் பத்திரம் ரத்த உறவுகளுக்குள் எழுதிக்கொள்வதால், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச முத்திரைத் தீர்வை 25,000 ரூபாய். பதிவுக் கட்டணம் 10,000 ரூபாய். மார்க்கெட் மதிப்புக்கோ, வழிகாட்டி மதிப்புக்கோ, முத்திரைத் தீர்வை கட்டத் தேவையில்லை.  சொத்து அமைந்துள்ள கிராமத்தில் சம்பந்தப் பட்ட சார் பதிவகம் சென்று இந்த விடுதலைப் பத்திரத்தை பதிவு செய்தல் அவசியம்.

இதற்கு இரண்டு சாட்சிகள் தேவை. நீங்கள் மூவர்தான் அப்பாவின் வாரிசுகள் என காட்டக்கூடிய வாரிசு சான்றிதழ் மற்றும் உங்கள் அப்பாவின் பெயரில் உள்ள மூல ஆவணங்கள் அனைத்தையும் சார் பதிவாளரிடம் பதிவின்போது காட்டுதல் அவசியம்.” 

?மூத்த குடிமக்களுக்காக வருமான வரித் துறையில் என்னென்ன சலுகைகள் அளிக்கப்படுகிறது? மூத்த குடிமக்கள் வாங்கும் பென்ஷன் தொகை வருமான வரிக்கு உட்பட்டதா?

ராஜா ராம்,

ச.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்.

“வருமான வரிச் சட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் (60 வயது முதல் 80  வயது வரை) மற்றும் மிகவும் மூத்த குடிமக்களுக்கு (80 வயதுக்கு மேல்) பின்வரும் வரிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

அ) மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சம் வரையும், மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரையும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆ) பிரிவு 80டி- ன் கீழ் மருத்துவக் காப்பீடு பிரீமியம் ரூ.30,000 வரை வருமானத்திலிருந்து கழிவு பெறலாம்

இ) பிரிவு 80டிடிபி-ன் கீழ் குறிப்பிட்ட சில வியாதிகளுக்கான (உதாரணமாக, நரம்பு மற்றும் மூளை சம்பந்தப்பட்ட வியாதிகள்) மருத்துவச் செலவு ரூ.60,000 வரை கழிவு பெற முடியும்.

ஈ) வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்த வருமானம் இல்லாத மூத்த குடிமக்கள் முன்கூட்டிய வரி (advance tax) கட்ட வேண்டிய அவசியமில்லை.

உ) வரிக்கு உட்பட்ட வருமானம் இல்லாத மூத்த குடிமக்கள் படிவம் 15 H சமர்பித்து வரிப்பிடித்தம் (டிடிஎஸ்) இல்லாமல் சலுகை பெறலாம்.

மூத்த குடிமக்கள் பெறும் ஓய்வூதியம் வரி விதிப்புக்கு உட்பட்டதாகும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்