வீட்டுக் கடன்... அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!

சா.ராஜசேகரன், www.wisdomwealthplanners.com, நிதி ஆலோசகர், புதுச்சேரி. ஹோம் லோன் ஸ்பெஷல்!

வீட்டுக் கடன் வாங்குவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் அடிக்கடி வந்து போவதுண்டு. அடிக்கடி வரும் அந்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்ன பதில் என்பதை பார்ப்போமா?

முழுத் தொகைக்கும் கடன் கிடைக்குமா?

பொதுவாக, வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வீட்டின் மதிப்பில் சுமார் 80 முதல் 85% மட்டுமே கடனாக வழங்கும். மீதமுள்ள 15 - 20 சதவிகிதத் தொகையை கடன் வாங்குபவர் கையிலிருந்து போட வேண்டியிருக்கும். இதனை ஆங்கிலத்தில் டவுன் பேமென்ட் (Down Payment) என்பார்கள்.

 வீட்டுக் கடன் பெற அடிப்படைத் தகுதிகள் என்ன?

வீட்டுக் கடன் பெறும் நபர் இந்தியராக அல்லது வெளிநாடு வாழ் இந்தியராக இருக்க வேண்டும். அவர் நிரந்தர வருமானம் பெறுவது மிக முக்கியம். மாதச் சம்பளம் வாங்குபவர், சுய தொழில் செய்பவராக இருக்கலாம்.

வீட்டுக் கடன் வாங்க எத்தனை வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்?

பொதுவாக, கடன் பெறும்போது 21 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும். கடன் முடியும் தருவாயில் 65 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

பத்திரப் பதிவுக்கு கடன் கிடைக்குமா?


இப்போதெல்லாம் சொத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால், பத்திரப் பதிவுக்கு என்றே சில லட்சம் ரூபாயை செலவிட வேண்டி இருக்கிறது. தேவையின் அடிப்படை மற்றும் கடன் வாங்குபவரின் வேலையின் தன்மையைப் பொறுத்து (அரசு ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள்) பதிவு மற்றும் முத்திரைக்  கட்டணச் செலவுக்கு சில வங்கிகள் கடன் வழங்குகின்றன. 

எவ்வளவு தொகை கடனாக கிடைக்கும்?

ஒருவரின் மாத வருமானத்தில் 40 முதல் 50 சதவிகிதம் வரை மாதத் தவணை கட்டும் விதமாக கடன் கிடைக்கும். சம்பளம் அதிகமாக இருப்பின் (சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல்) சம்பளத் தொகையில் 60 சதவிகிதம் மாதத் தவணையைக் கட்டும் விதமாக கடன் கிடைக்கும். ஒருவரின் நிகர மாத சம்பளத்தைப் போல் அதிகபட்சமாக 60 மடங்கு தொகை வீட்டுக் கடனாக கிடைக்கும். உதாரணத்துக்கு ஒருவரின் நிகர மாதச் சம்பளம் (பிடித்தங்கள் எல்லாம் போக) ரூ.40,000 என்றால் அவருக்கு சுமார் ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் கிடைக்கும்.

இன்னொரு நபருடன் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்க முடியுமா?

உங்களின் சம்பளம் குறைவாக இருக்கும்போது வேலை பார்க்கும் இன்னொருவருடன் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கினால் அதிக தொகை கடனாக கிடைக்கும். பொதுவாக, கணவன் - மனைவி, மகன் - தந்தை சேர்ந்து கூடுதலாக தொகையை வீட்டுக் கடனாக பெற முடியும்.
இஎம்ஐ என்றால் என்ன?

சம மாதத் தவணை (EMI - Equated Monthly Installment) என்பதன் சுருக்கம்தான் இஎம்ஐ. கடன் தொகை மற்றும் அதற்கான வட்டியை தவணைக் காலம் முடியும் வரை கணக்கிட்டு, சம தொகையை மாதம் தோறும் ஓர் குறிப்பிட்ட தேதியில் செலுத்தி வருவதுதான் இஎம்ஐ. இந்த சம மாதத் தவணை முறையால் கடன் பெற்றவர், தனது கடனைத் திட்டமிட்டு சிரமுமின்றி திரும்ப செலுத்த உதவும். இஎம்ஐ தொகை, கடன் தொகை, கடனைத் திரும்பச் செலுத்த வேண்டிய ஆண்டுகள், வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்