ஷேர்லக்: தீபாவளிக்குள் புதிய உச்சம்!

பிரெக்ஸிட் முடிவுக்குப் பிறகு சரசரவென இறங்கிய சந்தை, பிற்பாடு வீறுகொண்டு எழுந்தது. இப்போது மீண்டும் சரியத் தொடங்கி இருக்கிறது. இந்தச் சரிவு இன்னும் எதுவரை செல்லுமோ என்கிற கவலை நாணயம் விகடன் வாசகர்களுக்கு இருப்பது போல நமக்கும் இருந்தது. ஷேர்லக் நம்மை சந்திக்க வந்தவுடன் நாம் அவரிடம் கேட்ட கேள்வியும் அதுதான்.

‘‘பட்ஜெட்டுக்குமுன் 6800 புள்ளிகளாக இருந்த நிஃப்டி 20 சதவிகிதம் உயர்ந்து தற்போது 8300 புள்ளிகளாக உள்ளது. 2017 மார்ச்சுக்குள் நிஃப்டி அதன் பழைய உச்சமான 9119 புள்ளிகளை எட்டவும் வாய்ப்பு இருக்கிறது. டிரேடிங் மனப்பான்மையிலிருந்து முதலீட்டாளர் மனப்பான்மைக்கு பெரும்பாலானோர் மாறியிருப்ப தால், பங்குகளை விற்கும் போக்கு குறைந்திருக்கிறது. இதனால் சந்தை தொடர்ந்து கணிசமான ஏற்றமடைந்து வருவதோடு, டெக்னிக்கல்படி சந்தை காளையின் போக்கில்தான் தொடர்கிறது. இந்த மாதத்தி லேயேகூட நிஃப்டியானது அதன் புதிய 52 வார உச்சத்தை தொடலாம் என்றும் அனலிஸ்ட்டுகள் சொல்கிறார்கள். காரணம், டிரேடர்கள் நிஃப்டி கால் ஆப்ஷன்களை ஜூலை சீரிஸ்-ல் 8700 நிலையில் மிக அதிகமாக வாங்கி வருவதாகும். இதனால் குறுகிய காலத்தில் நிஃப்டி 8600-க்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அடுத்த சில வாரங்களுக்கு 8200-8400 என்கிற ரேஞ்ச் பவுண்டுக்குள் வர்த்தக மாகும். நிஃப்டி 8400 புள்ளிகளைத் தாண்டும்போது, அடுத்தக் கட்டமாக வேகமாக 8650-க்கு அதிகரிக்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள். இதெல்லாம் நடக்கவில்லை எனில் தீபாவளிக்குள் சந்தை புதிய உச்சத்தை தொடலாம் என்கிறார்கள்’’ என்றவருக்கு  சூடான சுக்கு மல்லி காப்பி கொடுத்தோம்.  

‘‘ஜூன் காலாண்டு முடிவுகள் கம்பெனிகளுக்கு சாதகமாக வருமா என்று கேட்டோம் கொஞ்சம் கவலையுடன்.

“ஜூன் காலாண்டு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் கடந்த வருடத்தைக் காட்டிலும் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலையில் இருப்பதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கம்பெனிகளின் விற்பனை மற்றும் வருமானம் குறித்த புரோக்கிங் நிறுவனங்களின் கணிப்புகளை புளூம்பர்க் நிறுவனம் தொகுத்து வெளியிட்டு உள்ளது. அந்த புள்ளிவிவரங்கள் முன்னணி இந்திய நிறுவனங்கள் பலவற்றின் வருமானம் குறைய வாய்ப்புள்ளது என்றும், நிஃப்டி 50-ல் உள்ள கம்பெனிகளின் லாப வளர்ச்சி கடந்த வருடத்தைக் காட்டிலும் 5.25% குறையும் என்றும் கூறுகிறது. ஆனால், அவற்றின் விற்பனை 8.46%  அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

முக்கியமாக வங்கி, எரிசக்தி போன்ற துறை நிறுவனங்கள் நஷ்டமடைய வாய்ப்புள்ள தாகவும், சிமென்ட், நுகர்வோர் பொருட்கள், பார்மா மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறை நிறுவனங்கள் லாபமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

அதே நேரத்தில், கிரிஸில் நிறுவனத்தின் அறிக்கையில், ஒட்டுமொத்தமாக இந்திய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி ஜூன் மாத காலாண்டில் இரண்டு வருட உச்சத்தை எட்டும் என்றும், அப்போதும்கூட நீண்ட கால சராசரி வருமான வளர்ச்சி யான 12-15 சதவிகிதத்தைவிட குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது’’ என்றார்.  

‘‘ஆக்ஸிஸ் வங்கிக்கு வெளி நாட்டு முதலீடுகளை அதிகரித்துக் கொள்ள அரசின் அனுமதி கிடைத்துள்ளதே?’’ என்றோம்.

“ஆக்ஸிஸ் வங்கி மத்திய அரசிடம் அதன் வெளிநாட்டு முதலீடுகளின் வரம்பை உயர்த்திக் கொள்ள அனுமதி கேட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் அதன் வெளிநாட்டு முதலீடுகளை 62 சதவிகிதத்தி லிருந்து 74 சதவிகிதமாக உயர்த்தும். இதனால், ரூ.13,000 கோடி கூடுதல் முதலீடு கிடைக்கும்” என்றார்.

‘‘கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது...’’ என்று இழுத்தோம். 

‘‘இறக்கம் வரும்போது, பேங்க் ஆஃப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கேஸ்ட்ரால் இண்டியா, மெர்கடர் லைன்ஸ், ஹெச்டிஎஃப்சி போன்ற பங்குகளை கவனிக்கலாம்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்