கொழுப்பு வரி... ஏன் அவசியம்?

ந.ஆசிபா பாத்திமா பாவா

கேரள மாநில அரசு, பர்கர்கள், பீட்சாக்கள், டோனட்ஸ், சாண்ட் விட்ச்கள் மற்றும் பாஸ்தா ஆகியவற்றுக்கு 14.5% “கொழுப்பு வரி” விதித்துள்ளது. அது என்ன ‘‘கொழுப்பு வரி’’? தமிழகத்தில் இந்த ‘‘கொழுப்பு வரி’’ வருமா என பலரும் கேட்கத் தொடங்கி உள்ளனர்.  

முதலில், கொழுப்பு வரி என்றால் என்ன, எதற்காக  கேரள அரசு  இதை நடைமுறைப்படுத்தி உள்ளது என்பதை பார்ப்போம். ஆரோக்கியமற்ற, அதிக கொழுப்புள்ள உணவு வகைகள் மற்றும் பானங்கள், நம் உடலுக்கு கேடு விளைவிப்பவை எனக் கருதப்படும் உணவு வகைகள் மீது விதிக்கப்படும் வரிக்கு, கொழுப்பு வரி (Fat tax) என்று பெயர். ‘சாச்சு ரேட்டட் ஃபேட்’ என்றழைக்கப் படும், உடலில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருட்களை அதிக அளவில் கொண்ட உணவுப் பொருட்களே இந்த புதிய வரி விதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இந்த வரி முதன்முதலில் டென்மார்க்கில் அறிமுகப் படுத்தப்பட்டது. கேரளா தவிர நம் நாட்டில் வேறு எந்த மாநிலத்தி லும் இந்த  வரி இல்லை. கேரள அரசின் பட்ஜெட்டில், சாதாரண பாக்கெட் உணவுகளுக்கு 5% வரியும், பெரிய உணவகங்களில் வழங்கப்படும் வெளிநாட்டு உணவு வகைகளுக்கு 14.5% வரியும் விதிக்கப்படும் எனத் தெரிவித்து உள்ளது. மேலும், அந்த மாநிலத்துக்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் கிடைக்கும்.

கேரளத்தில் உள்ள 140 தொகுதி களிலும் உள்ள அரசுப் பள்ளிகளை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே, இந்த வரியை விதித்திருப்பதாக சொல்கிறது கேரள அரசு.

‘‘கொழுப்பு வரி’’ தவிர்த்து, “பசுமை வரி”யும் விதிக்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் பழமை யான தனியார் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களின் பதிவைப் புதுப்பிக்கும்போது “பசுமை வரி” கட்ட வேண்டும். மேலும், துணிவகைகளுக்கு 2% கூடுதல் வரி. டூரிஸ்ட் பஸ்களுக்கு கூடுதல் வரியும் விதித்துள்ளது கேரள அரசாங்கம்.

டென்மார்க், ஃபிரான்ஸ், ஹங்கேரி, யூ.கே, ஃபின்லாந்து போன்ற நாடுகளில் “சர்க்கரை வரி” அல்லது “கொழுப்பு வரி” நடைமுறையில் உள்ளது. இந்தியா வில் இந்த வரி இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் மற்றும் வரி ஆலோசகர் வைத்தீஸ்வரனிடம் கேட்டோம். “இந்த வரி முழுக்க முழுக்க மக்கள் நலன் கருதி பிறப்பிக்கப் பட்ட வரியாகும். ஆரோக்கியத் துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கொழுப்பு அதிகம் அடங்கிய உணவு வகைகளான பீட்சா, பர்கர் ஆகிய உணவுகளுக்கே இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.  இதே அளவு கொழுப்புள்ள உள்ளூர் உணவுகளுக்கு இந்த வரி கிடையாது. வெளிநாட்டு உணவுகளான “ஜங்க் ஃபுட்” வகைகளுக்கு மட்டுமே இந்த வரி வசூலிக்கப்படும். இதற்கு முக்கிய காரணம், பொதுமக்களிடம் இந்த உணவை உண்டால் உடலுக்கு தீங்கு எனக் கூறினால் கேட்பது கடினம். மாறாக, விலை அதிகரித்தால் தானாகவே இந்த உணவுகளை உண்ண மாட்டார் கள். சிகரெட்டுக்கு  வரி விதித்தது போலத்தான் இதுவும்.

இந்த வரி தமிழகத்தில் விதிக்கப்பட வாய்ப்பு குறைவு. காரணம், நாம் ஏற்கெனவே வாட் வரியே 14.5% செலுத்துகிறோம். பெரும்பாலான மாநிலங்களிலும் 14.5% என்ற அளவில்தான் வாட் வரி உள்ளது. அதனால், இந்த ‘‘கொழுப்பு வரி’’ தனியாக விதிக்கப்பட வாய்ப்பு குறைவே.  இந்த வரி விதிப்பினால், இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த நிலையில், இந்த புதிய வரியினால் பல நிறுவனங்கள் மூடப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும், இந்த வரி நேரடியாக பொது மக்களைத் தாக்கவில்லை. இது குறிப்பிட்ட சில பொருட்களுக்கு அதுவும் ஆரோக்கியமற்ற உணவு களுக்கு மேல் போடப்பட்ட வரி. அதனால், மக்களுக்கு எதிர்க்க வில்லை’’ என்றார்.

“கொழுப்பு வரி” வரவேற்கப் பட வேண்டிய ஒன்று. பல குழந்தைகள் இந்த உணவு வகை களுக்கு அடிமையாகி இருப்ப தால், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால், இவர்கள் வாழ்க்கைமுறையே மாறிவிட்டது. நோயில்லா இளைய சமுதாயத்தை நோக்கிய முதல் அடியாக இந்த கொழுப்பு வரியை பார்க்க முடிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்