‘‘நூறு கோடீஸ்வரர்களை உருவாக்குவேன்!’’

கலக்கும் கோவை கண்ணன்ஆகாஷ்

நீண்ட காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நல்ல லாபம் கொடுக்க வல்லது என்பது குறித்து நாணயம்  விகடனில் தொடர்ந்து எழுதி வருகிறோம். மியூச்சுவல் ஃபண்டுகளை முதலீட்டாளர்களிடம் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகிக்கும் இண்டிபென்டன்ட் ஃபைனான்ஸியல் ஆலோசகர்கள். தமிழகம் முழுக்க பல ஐ.எஃப்.ஏ.க்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகித்து வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் கோவையைச் சேர்ந்த கண்ணன்.

 கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இவரது தொடர்ந்து உழைப்பின் பலனாக   ஏறக்குறைய 2700 எஸ்.ஐ.பி. மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகள் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார் கண்ணன். இத்தனைக்கும் இவர் தனக்கென உதவியாளர் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. காலையில் இருந்து இரவு வரை வாரத்துக்கு ஏழு நாளும் முதலீட்டாளர்களை தேடிச் சென்று சந்திக்கும் கண்ணனை சந்தித்தோம்.

எனக்குக் கிடைக்காத வாய்ப்பு!

‘‘நான் விமானப் படையில்  இருந்தபோதும், பிற்பாடு சவுதி அரேபியாவில் வேலை பார்த்த போதும், மேட்டூரில் நகைக்கடை நடத்தியபோதும் எனக்கு செலவுக்குப் போக நிறையவே பணம் மிச்சமானது. இந்தப் பணத்தை பெரும்பாலும் வங்கி எஃப்.டி.யிலும் இன்ஷூரன்ஸ் திட்டங்களிலும்தான் போட்டேன். ஆனால், கஷ்டம்  வந்தபோது இதிலிருந்து கிடைத்த பணத்தை எடுத்து என்னால் சமாளிக்கிற அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை.  மியூச்சுவல் ஃபண்ட் மாதிரி நல்ல லாபம் தரும் முதலீட்டை நான் பிற்பாடு தெரிந்துகொண்டபோது மிகவும் வருத்தப்பட்டேன். என்னைப் போலத்தானே பலரும் எஃப்.டி. யிலும், இன்ஷூரன்ஸிலும்   மிகக் குறைந்த லாபத்தையே பார்த்திருப் பார்கள். நமக்கு வந்த நிலை மற்றவர்களுக்கு வரக்கூடாது. மியூச்சுவல் ஃபண்டைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்து நான் இதில் இறங்கினேன்.

2005-ல் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி யாருக்கும் தெரியாது. இருபது பேரை சந்தித்தால், ஒருவர் மட்டும் முதலீடு செய்வார். இருந்தாலும் நான் தொடர்ந்து பலரையும் சந்தித்து அவர்களின் மனதை மாற்றினேன். என்னைப் பொறுத்தவரை, ஒருவர் முதலீடு செய்ய பணமில்லை என்றால் விட்டுவிடுவேன். ஆனால், மனமில்லை என்றால் விடவே  மாட்டேன். அவரிடம் எப்படியாவது பேசி முதலீடு செய்ய வைத்துவிடுவேன்’’ என்றார் கண்ணன். இதற்காக அவர் தரும் புள்ளிவிவரங்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவை.

சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்!

‘‘மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதற்கு என்ன நிச்சயம் என்று கேட்பார்கள் பலர். அவர்களிடம் நான் சில புள்ளிவிவரங்களை சொல்வேன். 1978-ல் சென்செக்ஸ் 100 புள்ளி களாக இருந்தது. இன்றைக்கு அது சுமார் 28000 புள்ளிகளாக உயர்ந்திருக்கிறது. அதாவது, 40 ஆண்டு காலத்தில் 280 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது எதிர்காலத்தில் 50000-ஆக, 100000 புள்ளிகளாக உயரத்தான் போகிறது. 1991-ல் நம்மிடம் இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு ஏறக்குறைய ஜீரோதான். இப்போது நம்மிடம் 362 பில்லியன் டாலர்  இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இது 500 பில்லியன் டாலராக உயரும். 1991-ல் ஒன்றிரண்டு சதவிகிதமே இருந்த நம்முடைய ஜி.டி.பி. இப்போது 8 சதவிகிதத்தைத் தொடப் போகிறது.

நம் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை  புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொல்லும்போது நீண்ட காலத்தில் பங்குச் சந்தை நல்ல லாபம் தரும் அதில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்டும் நல்ல லாபம் தரும்  என்பதை பலரும் ஒப்புக் கொள்வார்கள். அதன்பிறகு அவர்களே எனது முதலீட்டாளர் களாக மாறிவிடுவார்கள்’’ என்றார் கண்ணன்.

10 முதல் 15 வருஷத்துக்கு மேல்..!

‘‘ஆரம்ப காலத்தில் நான் ஒருமுறை முதலீடு (One time investment) மட்டுமே வாங்கினேன். 2007 - 08-ல் பொருளாதார நெருக்கடி வந்தபோது என்னிடம் முதலீடு செய்தவர்களின் முதலீட்டுத் தொகை 70% கரைந்தது. இரவும் பகலும் தினமும் வருகிற மாதிரி, பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் வரத்தான் செய்யும். சந்தை இறங்கும்போது நாம் முதலீடு செய்ய வேண்டும். காரணம், குறைந்த விலையில் அதிக ஃபண்ட் யூனிட்களை நம்மால் வாங்க முடியும். இதனால் சந்தை மீண்டும் உயரும்போது நமக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதை உணர்ந்த நான், ஒருமுறை செய்யும் முதலீட்டை விட்டு விட்டு, எஸ்.ஐ.பி.யில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

இதையும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும் என்கிற வர்களிடம் மட்டுமே முதலீட்டை வாங்குவேன். காரணம், மூன்று ஆண்டுகளுக்குள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நிச்சயம் லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.   குறைந்த பட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்தால் கூட்டு வட்டி அடிப்படையில் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்வேன்.

முதலீடு செய்ய முடியும் என்கிற நிலையில் இருப்பவர் களிடம், குறைந்தபட்சம் ரூ.5,000-ஆவது முதலீடு செய்யச் சொல்வேன். ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு கிடைக்கும்போதும் கூடுதல் தொகையை எஸ்.ஐ.பி.யில் முதலீடு செய்யச் சொல்வேன். அப்படி செய்ததால்தான் என் வாடிக்கையாளர்களில் பலர் இன்றைக்குக் கோடீஸ்வரர்களாக உயர்ந்திருக்கிறார்கள்’’ என்று பெருமை பொங்கச் சொல்கிறார் கண்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்