மோடி ஆட்சி: குறைகளைவிட நிறைகளே அதிகம்!

ஏ.ஆர்.குமார்

ண்மையில் சென்னைக்கு வந்திருந்தார் சர்வதேச பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன். உலகப் பொருளாதார நிலைமை குறித்து தமிழ் வாசகர்களுக்கு தொடர்ந்து சொல்லி வருவதில் இவரது பங்கு முக்கியமானது. க்ரெடிட் சூஸ், ஜூலியஸ் பேயர் பேங்க், ஏசியானமிக்ஸ் ஆகிய புகழ் பெற்ற நிறுவனங்களில் பணியாற்றியவர், தற்போது எம்.பி.ஏ. மாணவர்களுக்கு நிதி மேலாண்மை குறித்தும் பொருளாதாரம் குறித்தும் கற்றுத் தருகிறார். இதோ அவர் நமக்குக் கொடுத்த பேட்டி:

மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நரேந்திர மோடியின் ஆட்சி பற்றி உங்கள் கருத்து என்ன?

‘‘இந்த ஆட்சி திறமையாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, நம் நாட்டில் கச்சா எண்ணெய் எங்கெல்லாம் கிடைக்குமோ, அங்கெல்லாம் தேடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொரிஷியஸ் நாட்டுடன் ஏற்கெனவே இருந்த வரி ஒப்பந்தம் பல குழப்பங்களை விளைவிப்பதாக இருந்தது. அதையும் சீர்படுத்தி இருக்கிறார்கள். உஜ்வல் டிஸ்கம் அஷ்யூரன்ஸ் யோஜனா (Uday) திட்டம், மின்மயமாக்கல் என பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இவற்றின் விளைவு, நமது பொருளாதாரத்தில் உடனே தெரிய ஆரம்பிக்காது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தெரியவரும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பணவீக்கம் மிக அதிகமாக இருந்தது. அதைக் கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்ததில் ரிசர்வ் வங்கிக்கு குறிப்பிட்ட பங்கு இருக்கிற அதே நேரத்தில், இந்த ஆட்சிக்கும் உண்டு. அரிசி, கோதுமை போன்ற வற்றை கொள்முதல் செய்வதில் நிதானமான போக்கை இந்த ஆட்சி கடைபிடித்திருக்கிறது. விவசாய விளைபொருட்களுக்கான ஆதார விலையை மிதமாக உயர்த்தியதன் மூலம் பணவீக்கம் மேலும் அதிகரிப்பதைத் தடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட்டில் துண்டு விழுவது அதிகமாக இருந்தது. அதையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதே சமயம், சில முக்கியமான விஷயங்களை செய்யவும் தவறி இருக்கிறார்கள். உதாரணமாக, அரசு வங்கிகளில் முதலீட்டை கொஞ்சம் சீக்கிரமாகவே அதிகப்படுத்தி இருக்க வேண்டும். இன்றைக்கு ​இந்திய நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய இயலாமல் இருக்க காரணம், வங்கிகளின் கடன் சுமை அதிகமாக இருப்பதே.  முதலீட்டுக்கான கடனை அரசு வங்கிகள்தான் தரமுடியும். ஆனால், அவர்களால் நிறைய கடன் தரமுடியாமல் போவதற்குக் காரணம், வாராக் கடன் அதிகமாக இருப்பதே. இந்தப் பிரச்னைக்கு கூடிய விரைவில் ஒரு நல்ல தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் அரசாங்கம் மெத்தனமாக செயல்படுவதாக தோன்றுகிறது. ​ஆக மொத்தத்தில், இந்த ஆட்சியில் குறைகளைவிட நிறைகளையே அதிகமாக பார்க்க முடிகிறது!’’

நமது ஜி.டி.பி. குறித்து கணக்கீடு செய்வதில் குறைபாடு இருப்பதாக சர்ச்சை கிளம்பி இருக்கிறதே!  

‘‘இந்தக் கணக்கீட்டை எதன் அடிப்படையில் செய்தார்கள் என்பது எனக்கும் புரிபடவில்லை. மத்திய புள்ளியியல் துறை, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் துறை போன்றவை எந்த அடிப்படையில் இந்தக் கணக்கீட்டை செய்தது என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நம் பொருளாதாரம் 7.9% வளர்கிறது எனில், அதன் தாக்கம் பல இடங்களில் தெரியும். உதாரண மாக, கார், டூவிலர், மொபைல் போன் விற்பனை அதிகரிக்கும். ரயிலில் கொண்டு செல்லும் சரக்குகளின் அளவு அதிகரிக்கும். இது மாதிரி எதுவும் குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு நடக்காத போது, இப்போது நாம் அடைந்து வருவதாக சொல்லப்படும் வளர்ச்சி மீது சந்தேகம் வரத்தான் செய்கிறது. ​வங்கிகள் கடன் வழங்குவதும் தேக்கம் கண்டிருக்கிறது. வீடு வாங்கவும், வீட்டு வசதி சாதனங்கள் வாங்கவும் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது.

மேலும், ஜி.டி.பி. வளர்ச்சி இந்த அளவு இருப்பது உண்மை எனில், ரிசர்வ் வங்கி ஏன் வட்டியைக் குறைக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள்? வளர்ச்சி இல்லை என்றால்தானே வட்டியைக் குறைக்கும்படி கேட்க வேண்டும்? இப்படி பல சந்தேகங்களையும் கேள்விகளை யும் எழுப்பக்கூடிய அளவில்தான் இந்தக் கணக்கீடு இருக்கிறது. இது குறித்து வெளிப்படையான, தெளிவான விளக்கங்கள் இனியாவது தர வேண்டும்.’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்