மியூச்சுவல் ஃபண்ட்: முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்கும் செபியின் புதிய உத்தரவு!

மு.சா.கெளதமன்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சிக்கலில் மாட்டியிருந்தால் 2 லட்சம் ரூபாய் வரை முதலீட்டினை திரும்பப் பெற (Redeem) தடை விதிக்கக் கூடாது  என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி கடந்த வாரம் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஏன் இந்த புதிய உத்தரவு, இது எப்போது பொருந்தும், இதனால் முதலீட்டாளர்களுக்கு பயன் ஏதும் கிடைக்குமா என ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காம் நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி காந்த் மீனாட்சியிடம் கேட்டோம்.

“செபியின் இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் மியூச்சுவல் ஃபண்ட் மீது முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்’’ என்று ஆரம்பித்த அவர், இந்த புதிய உத்தரவு பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

செபியின் புதிய சட்டம்!

‘‘மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்பான முழு அமைப்பும் செயல்படாமல் (Systemic Crisis) போகும்பட்சத்தில் மட்டுமே ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் முதலீடுகளை பணமாக மாற்ற, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களே தனிக் கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்ளலாம் என்று செபி தற்போது சொல்லி இருக்கிறது. செபியின் இந்த புதிய உத்தரவை ஃபண்ட் நிறுவனங்கள் தேவை என்றால் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்லை.

ரூபாய் 2 லட்சம் வரை பணமாக மாற்ற விண்ணப்பித்து இருக்கும் முதலீட்டாளர்களுக்கு எந்தத் தடையுமின்றி முழுத் தொகையையும் வழக்கம் போல பணமாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த உத்தரவில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான விஷயம்.

எப்போது பொருந்தும்?

நாட்டின் பொருளாதார இயக்கம் ஸ்தம்பிக்கும்படியான நிகழ்வுகள் நடக்கும்போது உடனடியாக முதலீட்டுச் சந்தை களில் அது எதிரொலிக்கும். உதாரணமாக, 2008-ல் நடந்த பங்குச் சந்தை சரிவு, மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல், பங்குச் சந்தைகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்தை இயங்க வில்லை, மிகப் பெரிய இயற்கை பேரிடர் காரணமாக சந்தை இயங்கவில்லை, தடாலடியாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது போன்ற காரணங்களாக இருந்தால் மட்டுமே முதலீடுகளை பணமாக்குவதில் கட்டுப் பாடுகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விதிக்கலாம்.

கட்டுப்பாடுகளை விதிப்பது யார்?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களுக்கான கட்டுப்பாடுகளை தாங்களே நிர்ணயித்து, ஏ.எம்.சியின் இயக்குநர் குழுவிடமும், ஃபண்ட் நிறுவனங்களின் டிரஸ்டி களிடமும் ஒப்புதல் வாங்கி, மியூச்சுவல் ஃபண்டுகளின் கண்காணிப்பு மற்றும் நெறியாள ரான செபியிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தலாம். 

ஏன் இந்த கட்டுப்பாடு?

ஒரே நேரத்தில் அதிகப் படியான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பணமாக்க வரும்போது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்கள் கையிருப்புத் தொகையை அதிகப்படுத்திக் கொள்ளவும், முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டி பல முதலீட்டு வாகனங்களில் பிரித்து முதலீடு செய்திருக்கும் முதலீடுகளை மறுசீரமைத்து முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாக்கவும் ஒரு கால இடைவேளி தேவை. அந்த கால இடைவெளியைத்தான் இந்தக் கட்டுப்பாடுகள் மூலம் ஃபண்ட் நிறுவனங்கள் பயன்படுத்தி முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாக்கின்றன.

ரூ.2 லட்சத்துக்கு மேல்!

ரூ.2 லட்சத்துக்கு மேல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பணமாக மாற்ற விரும்புபவர் களுக்கு முதலில் 2 லட்சம் ரூபாய் பணமாக வழங்கப்பட வேண்டும். அதற்கு மேல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் காலாண்டுக்கு (90 நாட்களுக்கு) ஒரு முறை 10 நாட் களுக்கு மட்டுமே முதலீடுகளை பணமாக்க கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். அதன்பிறகு மீண்டும் சாதாரண முறையில் முழு முதலீடுகளையும் பணமாக்க அனுமதிக்க வேண்டும்.

எப்போது நடைமுறைக்கு வருகிறது?

இந்த சட்டம் வரும் 2016 ஜூலை 1-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

ஆக, எந்தவொரு அசாதாரண சூழ்நிலையிலும் முதலீட்டாள ருக்கு 2 லட்சம் ரூபாய் வரை யிலான முதலீடுகளை உடனடி யாக பணமாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என செபி உத்தர விட்டிருப்பது முதலீட்டாளர் களுக்கு சாதகமான விஷயமே’’ என்று முடித்தார் ஸ்ரீகாந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்