ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள் லாபம் தருமா?

செல்போனில் ஷேர்லக்கின் ஸ்பெஷல் ரிங்டோன் ஒலிக்கவே, அவசரமாக எடுத்தோம். ‘‘ஒரு அவசர வேலையாக வெளியூர் போக வேண்டியிருக்கிறது. போனிலேயே விஷயங்களை சொல்லிவிடவா?’’ என்று படபடத்தார். நாமும் மேற்கொண்டு அவருடைய பர்சனல் விஷயங்களை கிளறாமல் நேரடியாக கேள்விகளுக்குத் தாவினோம். இனி நம் கேள்விகளும் அதற்கு அவர் தந்த பதில்களும்...

 “பிஎஸ்இ 100 நிறுவனங்களின் மொத்த விற்பனை அதிகரித்திருக்கிறதே?”

“முந்தைய நான்கு காலாண்டு களாக இறக்கத்திலேயே இருந்த பிஎஸ்இ 100 நிறுவனங்களின் மொத்த விற்பனை மார்ச் மாத காலாண்டில் 5% அதிகரித்துள்ளது. இவற்றில் பெரும்பாலும் லார்ஜ் மற்றும் மிட் கேப் பங்குகள் உள்ளன. இந்த நிறுவனங்களில் எண்ணெய் மற்றும் மெட்டல் நிறுவனங்களைத் தவிர்த்து, பிற நிறுவனங்களின் வளர்ச்சி மட்டும் இந்த காலாண்டில் 11% உயர்ந்து உள்ளது. கடந்த ஏழு காலாண்டு களில் இது அதிகபட்ச வளர்ச்சியாக உள்ளது’’.

‘‘இந்திய நிறுவனங்களின் லாபம் குறைவாக உள்ள போதிலும் டிவிடெண்ட் அதிகம் தரப்பட்டிருக்கிறதே?”

‘‘கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் இந்திய நிறுவனங்களின் லாபம் ரூ.3.6 லட்சம் கோடியாக மட்டுமே உள்ள நிலையிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் டிவிடெண்ட்டாக ரூ.1.7 லட்சம் கோடி வழங்கியிருக்கிறது.

2014-15-ம் நிதி ஆண்டில் கம்பெனி களின் லாபம் ரூ.4 லட்சம் கோடி; ஆனால், வழங்கப்பட்ட டிவிடெண்ட் தொகை ரூ.1.42 லட்சம் கோடி மட்டுமே. பிஎஸ்இ 500-ல் உள்ள நிறுவனங்களில் 462 நிறுவனங்கள் 2015-16-ம் நிதி ஆண்டில் வழங்கிய டிவிடெண்ட் 47%. இது 2014-15-ம் நிதி ஆண்டில் 36.2 சதவிகிதமாக மட்டுமே இருந்துள்ளது’’.

“சந்தையில் அந்நிய முதலீடு குறைந்ததற்கு என்ன காரணம்?’’’

‘‘கடந்த டிசம்பர் மாத காலாண்டில் 304 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நிய முதலீடு மார்ச் மாத காலாண்டில் 291 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது. பிஎஸ்இ 200-ல் உள்ள நிறுவனங்களில் டிசம்பர் காலாண்டு முடிவில் 24.8 சதவிகிதமாக இருந்த அந்நிய முதலீடு அடுத்த மூன்று மாதங்களில் 24.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. வங்கிகள், பார்மா மற்றும் ஆட்டோ மொபைல் நிறுவனங்களில்தான் அந்நிய முதலீடுகள் அதிகம் வந்துள்ளன. ஆனால், உள்நாட்டு முதலீடு சிறிது அதிகரித்துள்ளது ஆரோக்கியமான விஷயமே’’.

‘‘மார்க் மோபியஸ் ஸ்மால் கேப் பங்குகள் லாபம் தரும் என்று சொல்லி இருக்கிறாரே?”

“உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது என டெம்பிள்டன் எமர்ஜிங் மார்கெட்ஸ் குரூப்-ன் நிர்வாக தலைவர் மார்க் மோபியஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவரும் வளர்ச்சியை நோக்கிய சீர்திருத்தங்களால் சிறிய நிறுவனங்கள் வளர்ச்சி காண உதவும். அந்த வகையில் ஸ்மால் கேப் நிறுவனங்களின் பங்கு முதலீடு லாபகரமாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். மேலும்,  பருவ மழை சராசரிக்கும் மேலாக இருக்கும்பட்சத்தில்  ஸ்மால்கேப் நிறுவனங்களின் லாபம் உயரும் என்று எதிர்பார்க்க லாம். என்றாலும் எந்த மாதிரி யான ஸ்மால்கேப் நிறுவனங்களை தேர்வு செய்கிறோம் என்பது முக்கியம்.’’ 

‘‘இந்திய வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை எந்த அளவுக்கு இருக்கிறது?”

“சிண்டிகேட் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்றவற்றின் கடன், அவற்றின் முதலீட்டு அளவுக்கும் கீழே சென்றிருப்பதாக தரக்குறியீட்டு நிறுவனமான எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் பொதுத் துறை வங்கிகளின் கடன் தரம் மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் வங்கிப் பங்குகளில் மிகவும் எச்சரிக்கையாக முதலீடு செய்வது அவசியம்.”

“ஐபிஓ வர ஐசிஐசிஐ புரூ. லைஃப் தீவிரமாக களமிறங்கி இருக்கிறதே?”

“ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ரூ. 6,000 கோடிக்கு புதிய பங்குகளை (ஐபிஓ) வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இதுதான் பெரிய ஐபிஓ-ஆக இருக்கும் என்கிறார்கள். பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் போன்றவை லீடு மேனேஜர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் தான் வைத்திருக்கும் பங்குகளில் ஒரு பகுதியை விற்க ஐசிஐசிஐ பேங்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே ஹெச்டிஎஃப்சி லைஃப் ஐபிஓ வருவதற்கான முயற்சியில் களமிறங்கிவிட்டது.”
“ஏசியன் பெயின்ட்ஸின் பங்கின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறதே?”

“இதை வைத்து மட்டும் அந்தப் பங்கில் முதலீடு செய்துவிட வேண்டாம் என்கிறது பங்கு தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ. தற்போதைய நிலையில் இந்த நிறுவனப் பங்கின் விலை எக்ஸ்பென்சிவ்-ஆக இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.”

“சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?”

“பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இது நிஜமாகும்போது இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி வேகம் எடுக்கும். இது பங்குச் சந்தையில் எதிரொலிக்கும். இந்த மாதத்தில் நிஃப்டி புள்ளிகள் சுமார் 3.5% அதிகரித்துள்ளது. இண்டெக்ஸ் ஆப்ஷன்களில் டிரேடர்கள் நிஃப்டியில் 8400 மற்றும் 8500-ல் அதிக லாங்க் பொசிஷன்களை எடுத்திருக்கிறார்கள். இதன்படி பார்த்தால், நிஃப்டி புள்ளிகள் 8400-ஐ நோக்கி செல்லும் என எதிர்பார்க்க லாம். மேலும், நிஃப்டி டெக்னிக்கல் சார்ட்டில் கோல்டன் க்ராஸ்ஓவர் பேட்டர்ன் உருவாகி இருப்பது, நீண்ட காலத்தில் சந்தை வலிமையாக இருக்கும் என்று அர்த்தம்’’ என்றவர், கவனிக்க வேண்டிய பங்குகள் எதுவும் தராமலேயே ‘‘அடுத்த வாரம் பார்க்கலாம்” என்று போனை கட் செய்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்