ஐந்து வருடங்களில் அள்ளித் தந்த மியூச்சுவல் ஃபண்டுகள்!

பா.பத்மநாபன், இயக்குநர், ஃபார்ச்சூன் பிளானர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் (பி) லிட்

மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்பதே வரலாறு என்கிற உண்மையை நாணயம் விகடன் மூலம் நாங்கள் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மிக மோசமாக செயல்பட்ட ஃபண்ட் திட்டங்கள்கூட குறைந்தபட்சம் 7% வருமானம் தந்திருப்பதே இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

குறைந்தபட்ச வருமானம் 7% என்றாலும் அதிகபட்ச வருமானம் 20 சதவிகிதத்துக்கும் மேலே தந்திருக்கின்றன சில ஃபண்ட் திட்டங்கள். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நமக்குக் கிடைக்கும் வருமானத்தைவிட இது சுமார் ஒன்றரை மடங்கு அதிகம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அந்த முதலீடு நமக்கு எப்போது திரும்பத் தேவைப்படும் என்பதை முடிவு செய்வதுதான். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பத் தேவைப்படும் எனில், அதை பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது அதன் வருமானம் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது என்பதையும் முதலீட்டாளர்கள் மறந்துவிடக் கூடாது. இந்த உண்மையை நாம் புரிந்துகொள்ளும்பட்சத்தில் நம்மால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதையும் துல்லியமாகத் தீர்மானிக்க முடியும். குறுகிய காலத்தில் மியூச்சுவல் ஃபண்டில் நமது முதலீடு கொஞ்சம் குறைந்தாலும் நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் கிடைப்பது உறுதி.

கடந்த காலத்தில் பங்குச் சந்தையும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் எந்த அளவுக்கு லாபம் தந்தது என்கிற புள்ளிவிவரத்தைப் பார்த்தால், இந்த உண்மை உங்களுக்கு நன்கு புரியும். மும்பை பங்குச் சந்தை 5 வருடம் முன்பு 18308 புள்ளிகளாக இருந்தது. கடந்த 14-ம் தேதி அன்று 26395 புள்ளிகளாக இருந்தது. கடந்த 5 வருடத்தில் வெறும் 8087 புள்ளிகள்தான் அதிகரித்துள்ளது. மொத்தமாக கணக்கிட்டால், 44.17% வருமானம் தந்திருக்கிறது. இதைக் கூட்டு வட்டியில் கணக்கிட்டால் வெறும் 7.6% மட்டுமே ஆகும்.

ஆனால், கடந்த 5 வருடத்தில் மியூச்சுவல் ஃபண்ட் எவ்வாறு செயல்பட்டது என்று பார்க்கலாம். முதலில் ஃபண்ட் திட்டங்களில் மோசமான வருமானம் தந்தவற்றைப் பார்ப்போம். லார்ஜ் கேப் ஃபண்ட் திட்டங்கள் குறைந்தபட்சமாக 7.50% ஆண்டு வருமானமும் பார்மா ஃபண்டுகள் 15.97% வருமானமும் தந்துள்ளன. (பார்க்க அட்டவணை - 1)

அடுத்து, கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட ஃபண்டுகளைப் பார்ப்போம். இவற்றில் லார்ஜ் கேப் திட்டங்கள் 14.09 சதவிகிதமும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் 28.12 சதவிகிதமும் வருமானம் தந்திருக்கிறது. குறைந்தபட்சம் 14% முதல் அதிகபட்சம் 28% வரை வருமானம் தந்துள்ளது. (பார்க்க அட்டவணை - 2) 

ஒருவர் வங்கியில் முதலீடு செய்தாலோ, தபால் அலுவலகத்தில் முதலீடு செய்தாலோ குறைந்தது 5 வருடம் வரை காத்திருக்க வேண்டும். அங்கு அவர்களுக்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட வட்டி மற்றும் 5 வருட முடிவில் முதலீடு முழுமையாக தரப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அதனுடைய மதிப்பை அறிய முயல்வதில்லை. ஏனெனில் அது தினசரி மாறுதலுக்கு உட்படாதது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் நாம் செய்த முதலீடு தினசரி மாறும். 5 வருட முடிவில் முதலீட்டைவிட அதிக பணம் கிடைக்கும். இப்படிக் கிடைக்கும் வருமானத்துக்கு வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை.

வங்கி எஃப்.டி.யில் நாம் போட்டு வைக்கும் பணத்துக்கு பாதுகாப்பு உண்டு என்றாலும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பணவீக்கத்தை விழ்த்த முடியாது. நம்முடைய முதலீட்டின் அடிப்படை நோக்கமே பணவீக்கத்தைவிட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்.
மும்பை பங்குச் சந்தை கடந்த 101 மாதத்தில் 20873-ல் இருந்து 26395 வரைதான் வந்துள்ளது. அதாவது, 2.83% கூட்டு வட்டியே. இது வங்கி சேமிப்புத் திட்டத்தில் கிடைக்கும் குறைந்தபட்ச வட்டி விகிதமான 3.5 சதவிகித வட்டியை விடக் குறைவு. ஆனால், ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து 5 வருடம் காத்திருந்தால் மிகப் பெரிய வருமானம் கிடைப்பது உத்திரவாதம் என்றே சொல்லலாம்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது ஒரு விஷயத்தை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நமது முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் மும்பை பங்குச் சந்தையின் வருமானம் சார்ந்து இருப்பதில்லை. மும்பை பங்குச் சந்தை 18 ஆகஸ்ட் 2014 முதல் 14 ஜூன் 2016 வரை அப்படியேதான் உள்ளது. அதாவது, 2014 ஆகஸ்ட் 14-ல் 26390 புள்ளிகளாக இருந்தது. அதுவே 2016 ஜுன் 14, 26396 புள்ளிகளாக இருந்தது. ஆனால், இந்த காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் கொடுத்துள்ள வருமானத்தைப் பார்த்தால், அந்த முதலீட்டின் அருமை நமக்கு நன்றாகவே புரியும். (பார்க்க அட்டவணை - 3)

கடந்த 3 வருடம் முன்பு குறிப்பிட்ட சில ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால் 100% வருமானம் கிடைத்திருக்கும். இவ்வளவு வருமானம் எதிர்காலத்தில் நிச்சயம் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் இதில் 10-ல் ஒரு பங்கு அதாவது 10 சதவிகித வருமானம் நீண்ட காலத்தில் கிடைக்கவே செய்யும்.

See also: மியூச்சுவல் ஃபண்ட்: முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்கும் செபியின் புதிய உத்தரவு!

உலகமே இந்தியாவையும் இந்திய பொருளாதாரத்தையும் நம்பி பல முதலீடுகள் செய்யும்போது நாம் சும்மா இருந்தால் நமக்குதான் நஷ்டம். சிட்ஃபண்ட், மோசடி பொன்ஸி திட்டங்களில் பணத்தைப் போடும் முதலீட்டாளர்கள் இனியாவது மியூச்சுவல் ஃபண்டில் தயக்கம் இல்லாமல் முதலீடு செய்வார்கள் என்று நம்புவோமாக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick