கான்ட்ரா இன்வெஸ்டிங்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

மு.சா.கெளதமன்

முதலீட்டாளர்கள் கூட்டம், பிரபலமான ஒன்றை நோக்கி ஓடிப் போய் முதலீடு செய்யும்போது, அதற்கு மாறாக மார்க்கெட் சென்டிமென்டுக்கு எதிர் திசையில் முதலீடு செய்தால், அதற்கு பெயர்தான் கான்ட்ரா இன்வெஸ்டிங். இது ஏற்ற, இறக்க சந்தைக்கு பொருந்தும்.

சந்தை கவனிக்கத் தவறிய பங்குகளிலும் மற்றும் சந்தை எதிர்மறையாக நினைக்கும் பங்குகளிலும் முதலீடு செய்வதும் கான்ட்ரா இன்வெஸ்டிங் ஆகும். இது தனிப்பட்ட பங்குக்கும் பொருந்தும், துறைக்கும் பொருந்தும்.

இன்றைய தேதிக்கு சிறு முதலீட்டாளர்கள் தொடங்கி ஃபண்ட் மேனேஜர்கள் வரை கான்ட்ரா இன்வெஸ்டிங் செய்து வருகிறார்கள். கான்ட்ரா இன்வெஸ்டிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் என்ன என்பதை பல அனலிஸ்ட்டுகளிடம் கேட்டோம். அவர்கள் சொன்ன விஷயங்களை இங்கே பார்ப்போம்.

1. ஃபண்டமென்டல்கள்!


கான்ட்ரா முறையில் இன்வெஸ்ட் செய்வதாக இருந்தாலும், நாம் முதலீடு செய்யும் பணம் பல்கிப் பெருக வேண்டுமானால் நல்ல நிறுவனத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு நிறுவனம் ஈட்டும் லாபம், நிறுவனத்தின் நிர்வாகத் திறன், கார்ப்பரேட் கவர்னன்ஸ், சந்தையில் புதுமையைப் புகுத்துவது, சந்தையை நிலையாக தக்கவைத்துக் கொள்வது, சரியாக வரி கட்டுவது, கடன் குறைவான அளவில் வைத்திருப்பது போன்ற அடிப்படை விஷயங்களை கவனிக்க வேண்டும்.

2. விற்று வாங்க (Short) வேண்டாமே!

ஒரு பங்கின் சார்ட்களை (Chart) வைத்து அதன் விலை ஏற்ற, இறக்கத்தை சரியாகக் கணிக்க முடிகிறது. பங்கின் விலை இறங்கும் என சார்ட்டை வைத்து உறுதியாக முடிவெடுக்க முடிந்தால், ஷார்ட் போகலாம். அதாவது, விற்று வாங்கலாம். ஆனால் மற்றவர்கள் செய்யும் வர்த்தகத்துக்கு நேர் எதிரான முடிவை நாம் எடுப்பதால், நம் கணிப்பு தவறிவிட வாய்ப்புண்டு. தவிர, கையில் இல்லாத பங்குகளை விற்றால், அன்றைய தினமே அவற்றை வாங்கி சரி செய்ய வேண்டும். எனவே, சார்ட்டுகளின் அடிப்படையில் பங்குகளை விற்று வாங்குவது கூடாது. 

3. தொலைக்காட்சி செய்திகள் வந்துவிட்டதா?

உங்களுக்குள் இருக்கும் ஒரு அனலிஸ்ட் ஒரு துறையைப் பற்றியோ அல்லது ஒரு பங்கைப் பற்றியோ ஒரு உண்மையைக் கண்டு பிடிக்கிறார் என்றால், அதை செய்தித் தாள்களும், டிவி சேனல்களும் உறுதி செய்தபின் வாங்குவேன் என்று இருக்கக் கூடாது. உதாரண மாக, 1998-99-ம் ஆண்டுகளில், இந்தியாவில் ஐடி துறையின் வளர்ச்சி விண்ணை தொடும் வேகத்தில் இருந்தது. அப்போது இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐடி நிறுவனங்களில் முதலீடு செய்யத் தயங்கியவர்கள் பலர். ஆனால், அந்தப் பங்குகளில் துணிந்து முதலீடு செய்து லாபம் கண்டபின், அவற்றை பத்திரிகைகள் எழுதின. அதன் பிறகு அந்தப் பங்குகள் எல்லோருக்கும் தெரிய வந்தன. ஆக, உங்களுக்கு தெரிந்த ஒரு உண்மையை உங்களின் ஷேர் புரோக்கரும் ஆமோதிக்கிறார். தவிர, அந்தப் பங்கின் ஃபண்ட மென்டல் ஸ்ட்ராங்காக இருக்கிறது என்றால் தைரியமாக முதலீடு செய்யலாம்.

4. எதனால் ஏற்றம், எதனால் இறக்கம்?

கான்ட்ரா இன்வெஸ்டார் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம், மார்க்கெட் சென்டிமென்ட். சந்தையில் மற்ற முதலீட்டாளர்களும், வர்த்தகர் களும் என்ன காரணத்தை வைத்து வர்த்தகங்களை மேற்கொள்கிறார்கள் என்பது.  அமெரிக்காவில் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டபோது இந்தியச் சந்தைகள் ஏகமாக இறங்கியது. இப்படி சம்பந்தமில்லாத காரணத்தினால் பங்கு விலை இறங்கினால் அது கான்ட்ரா இன்வெஸ்டார்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

5. மொமென்டம்!


உங்களுக்குள் இருக்கும் அனலிஸ்ட் ஏதோ ஒரு பங்கின் விலை சில நெகட்டிவ் செய்திகளால் மிக அதிகமாக இறங்குவதைப் பார்த்து, ‘‘இப்ப இந்தப் பங்கை வாங்கினால் லாபம் பார்க்கலாம்’’ என்று நினைத்தால், உங்கள் அறிவை நீங்களே மெச்சிக்கொண்டு அந்தப் பங்கை வாங்கலாம். அதேபோல், ஒரு பங்கு தொடர்பாக வந்த பாசிட்டிவ் செய்திக்கு கிடைக்க வேண்டிய மொமென்டத்தைவிட கூடுதலாக அந்தப் பங்கின் விலை ஏறுகிறது; ஒரு சிறிய நெகட்டிவ் செய்தி வந்தால்கூட பங்கின் விலை பெரிய இறக்கத்தை சந்திக்கலாம் என்கிறபோது, கிடைத்த லாபத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

6. விலையும் மதிப்பும்!

பங்கின் விலை அதன் மதிப்பைவிட கூடுதலாக இருக்கிறது என்றால் ‘ஓவர் வேல்யூ ஸ்டாக்’ என்பார்கள். இதுவே மதிப்பைவிட சந்தை விலை குறைவாக இருந்தால் ‘அண்டர் வேல்யூ’ என்பார்கள். நல்ல ஃபண்டமென்டல்கள் உள்ள ஓவர் வேல்யூ பங்குகளில் ரிஸ்க் எடுத்து வர்த்தகத்தை மேற்கொள்வதைவிட, நல்ல ஃபண்டமென்டல்களை கொண்ட அண்டர் வேல்யூ பங்குகளில் தைரியமாக முதலீட்டை மேற்கொள்ளலாம். நல்ல ஃபண்டமென்டல்கள் உள்ள பங்கின் மதிப்பைவிட சந்தை மதிப்பு குறைவாக இருந்து, அதை சந்தையால் கண்டுகொள்ளாமல் இருந்தால், அதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கான்ட்ரா இன்வெஸ்டாருக்கு கிடைக்காது.

7. சந்தையின் டிரெண்ட்!

பொருளாதார வளர்ச்சியையும், எந்தத் துறை வளர்கிறது என்பதையும் காட்டும் ஒரு கண்ணாடிதான் பங்குச் சந்தை. ஒவ்வொரு காலத்தில் ஒரு துறை கோலேச்சும். ஒரு காலத்தில் உற்பத்தித் துறை சார்ந்த பங்குகள் என்றால், இன்னொரு காலத்தில் ஐ.டி அல்லது பார்மா துறைப் பங்குகள் பட்டையைக் கிளப்பும். ஆக, இனி வரும் நாட்களில் எந்தத் துறை கலக்கும் என்பதை முடிவு செய்யும் திறன் வேண்டும். உதாரணமாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியா முழுக்க பரவி வருகின்றன. இந்த நிறுவனங்கள் ஐபிஓ வந்து பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படாமலே, இவற்றில் முதலீடு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கூடிய விரைவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்குச் சந்தையை ஆக்கிரமிக்கலாம். அதை அறிந்து முன்கூட்டியே முதலீடு செய்வதே கான்ட்ரா இன்வெஸ்டிங்.

8. விலை குறைவதெல்லாம் ஏறுவதற்கல்ல!


ஒரு பங்கின் விலை கணிசமாகக் குறைந்துவிட்டது. யாருமே சீண்டத் தயங்கும் இந்தப் பங்கை நான் ஒரு கான்ட்ரா இன்வெஸ்டாராக்கும் என்று நினைத்து வாங்கக் கூடாது. 2008-ல் பங்குச் சந்தை சரிவில் விலை இறங்கிய சில பங்குகள் இன்னும் விலை உயரவில்லை. உதாரணமாக, 2008-ல் மொனத் இஸ்பாத் பங்கின் விலை ரூ.710-ஆக வர்த்தகமானது. தற்போது இந்தப் பங்கு விலை ரூ.25. விலை குறைந்த இந்தப் பங்கை வாங்குவது கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் அல்ல.

9. பூவா, நாரா?

கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் பங்குகள் டிரெண்டை உருவாக்கும் பங்குகளா அல்லது ஒரு சில பங்குகள் உருவாக்கிய டிரெண்டில் பயணிக்கும் பங்குகளா என்பதைப் பாருங்கள். உதாரணமாக, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள்தான் இந்தியாவில் ஐடி டிரெண்டை தொடங்கி வைத்தது. அதன்பிறகு தான் மற்ற ஐடி மற்றும் ஐடி தொழில் சார்ந்த நிறுவனங்கள் சந்தையில் பட்டியலிடப்பட்டன. அப்படி தொடங்கிய நிறுவனங்களில் இன்று எத்தனை நிறுவனங்கள் நல்ல விலையில் வர்த்தகமாகி வருகிறது என்பதை பார்க்க வேண்டும். டிரெண்ட் இருக்கும் வரை நல்ல விலைக்கு வர்த்தகமாகும். டிரெண்ட் மாறியவுடன், மொத்தமாக கம்பெனிகளே காணாமல் போவதற்குகூட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, நாம் முதலீடு செய்யும் பங்கு பூவா (டிரெண்ட் செட்டர்) அல்லது நாரா (டிரெண்டினால் விலை ஏறும் பங்குகள்) என்பதை ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள்.

10. எவ்வளவு லாபம் வேண்டும்?


கான்ட்ரா இன்வெஸ்டிங் முறையில் மிகவும் முக்கியமானது, ஒரு டிரெண்ட் நாம் நினைப்பது போல் நடந்தால் எவ்வளவு லாபம் பார்க்க முடியும், அதாவது எவ்வளவு விலை ஏறும் அல்லது இறங்கும் என்பதை முடிவு செய்வது. அதைப் பொறுத்து, ஸ்டாப் லாஸ் போட்டு வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் எதிர்பார்த்த விஷயம் நடக்கவில்லை எனில் உடனே வெளியேறத் தெரிந்திருக்க வேண்டும்.


இ-சிகரெட்டுக்கு தடை!

ஐ.டி. நிறுவனங்கள், பி.பி.ஓ. அலுவலகங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் இப்போது நவீன போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இ-சிகரெட்டில்  போதையை வரவழைக்கும் நறுமணத்தைக் கலந்து புகைத்து உச்சகட்ட போதையை அனுபவிக்கின்றனர். இ-சிகரெட்டில் நிகோடின் அளவு குறைவு; தவிர, இதனால் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு குறைவு என்பதால் இதை அனுமதித்தது அரசாங்கம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இ-சிகரெட் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதால், கடந்த 16-ம் தேதி முதல் இ-சிகரெட் பயன்படுத்த கர்நாடக அரசாங்கம் தடை விதித்துள்ளது. தமிழகமும் இதை செய்யலாமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick