கல்விச் செலவுக்கு முதலீடு: சுமையைத் தவிர்க்கும் சூட்சுமம்!

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com

ன்றைக்கு பிள்ளைகளின் கல்வி என்பது அவர்களின் பெற்றோர்கள் விரும்பியபடி நடப்பதில்லை. அவர்கள் சார்ந்து வாழும் சமுதாயம்தான் அதை முடிவு செய்வதாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இன்று மழலைக் கல்வி முதல் பத்தாம் வகுப்பு படிப்பது வரைதான் பெற்றோர் கையில் இருக்கிறது. பத்தாம் வகுப்பு படித்து முடித்தபின் மேற்கொண்டு என்ன குரூப் பாடத்தை தேர்வு செய்வது, கல்லூரியில் எந்தப் படிப்பு படிப்பது என்பதெல்லாம் சக மாணவர்களின் விருப்பத்துக்கு உட்பட்டோ அல்லது சமுதாயத்தின் தேவையை உணர்ந்தோ தேர்வு செய்ய நேரிடுகிறது. 

இத்தகைய சூழ்நிலையில் வளரும் பிள்ளைகள் தாங்கள் படிக்க நினைக்கும் உயர் கல்வியை படிக்க வைக்கிற அளவுக்கு அவர்களின்  பெற்றோர்கள் பொருளாதார ரீதியில் தயாராக இருக்கிறார்களா என்றால், அதுதான் இல்லை. இன்றைக்கு பிள்ளைகள் விரும்பும் ஏதோ ஒரு படிப்பை படிக்க வைக்க நினைத்தால், பல பெற்றோர்களும் மலையாக நம்பிக் கொண்டிருப்பது கல்விக் கடனைத்தான். அவசர காலத்தில் வேறு வழியில்லாமல் லட்சக் கணக்கில் கல்விக் கடனை வாங்கிவிட்டு, பிற்பாடு அதை திரும்பக் கட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் பல பெற்றோர்கள்.

இன்று கல்விக் கடன் கிடைக்கிறது என்று வாங்கி விடுகிறோம். ஆனால், முந்தைய காலத்தில் பெற்றோர்கள் கல்விக் கடன் வாங்கியா படிக்க வைத்தார்கள்.? நம் முன்னோர்கள் கருத்தின் படி, நமது முதல் சம்பளத்தை சேமிப்பாக கருத வேண்டும். ஆனால் இன்றோ, கல்விக் கடன் பெறுவதால், அத்தகைய கல்வியை முடித்து, வேலைக்குச் சென்று வாங்கும் முதல் சம்பளம், கல்விக் கடன் தவணையை செலுத்தவே பயன்படுகிறது.இது மிகவும் வருத்தத்திற்குரிய செயல்.

இன்றைய இளம் பெற்றோர்கள் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட கஷ்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகிவிடாமல் இருக்க, தங்கள் குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்காக திட்டமிட வேண்டும். அதுவும் குழந்தை பிறந்தவுடனே. பிள்ளைகள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தபிறகு கல்விச் செலவு குறித்து யோசனை செய்வதால், தேவை இல்லாத பதற்றம்தான் வந்து சேரும். கல்விக்கான முதலீட்டை தாமதமாக ஆரம்பிக்கும்போது, குறுகிய காலத்தில் அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டி இருக்கும். இது பல பெற்றோருக்கு முடியாத, இயலாத காரியமாக இருக்கும்.  

முதலீடு  தாமதத்தால் பாதகமே! 

பொதுவாக, 18 வயதில் பிள்ளைகள் கல்லூரிக்குள் நுழைவார்கள். இன்றைக்கு கல்லூரி படிப்புச் செலவு சராசரியாக சுமார் ரூ.5 லட்சமாக இருக்கிறது. இன்றைய தேதியிலிருந்து 18 ஆண்டுகள் கழித்து இதே கல்லூரி படிப்பைப் படித்து முடிக்க சுமார் ரூ.20 லட்சம் தேவைப்படும். (பணவீக்கமாக 8%என்று எடுத்துக் கொண்டால்).

இன்று பட்டமேற்படிப்பு படிக்க ஆகும் கல்விச் செலவு ரூ.10 லட்சமாக இருக்கிறது. இதுவே 22 வருடம் கழித்து பட்டமேற்படிப்பு படிக்க ஆகும் செலவு ரூ.54 லட்சமாக இருக்கலாம். ஆக, குழந்தை பிறந்ததலிருந்து மாதம் ரூ. 4,200 வீதம் 264 மாதங்களுக்கு ரூ.11,08,800 முதலீடு செய்து, அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வட்டி கிடைத்தால், ரூ.54,00,000 கிடைக்கும். இதையே குழந்தையின் பத்தாவது வயதில் தொடங்கினால், மாதமொன்றுக்கு ரூ.16,900 கட்ட வேண்டும். ரூ.4,200 எங்கே, ரூ.16,900 எங்கே? பல பெற்றோரால் இவ்வளவு பெரிய தொகையை நிச்சயம் முதலீடு செய்ய முடியாது.

பெற்றோர்கள் எப்படி திட்டமிடுவது?

மழலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை வருடத்துக்கு எவ்வளவு செலவாகிறதோ, அதைக் கணக்கிட்டு அதற்கேற்ற தொகையை மாதம் தோறும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் முதலீடு செய்யலாம். பிள்ளைகள் வளர வளர, வருடம் தோறும் முதலீட்டுத் தொகையை அதிகரித்து உயர் கல்விச் செலவுக்கு தயாராகலாம்.

பிள்ளைகள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்று தெரியாது என்று சொல்லும் பெற்றோர்கள், அவர்களது பிள்ளைகளின் உயர் கல்விக்காக விலைவாசி ஏற்றத்தை கருத்தில் கொண்டு, ஏதாவது ஒரு தொகையை, இன்றே திட்டமிட்டு முதலீடு செய்து வரவேண்டும்.

ஒன்றுமே திட்டமிடாமல் உயர் கல்விக்குத் தேவையான முழு தொகையையும் கடனாகப் பெற்று, அந்தக் கடன் சுமையை தங்களது பிள்ளைகளின் மீது சுமத்தாமல், தங்களால் முடிந்த தொகையை ஒவ்வொரு மாதமும் எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்து, வருமானம் உயர உயர முதலீட்டையும் உயர்த்தினால் ஒரு பெருந்தொகையை பெற்றோர் பெற முடியும்.

முன்னரே விதைத்த விதை, இன்று மரமாகிற மாதிரி, இன்றைக்கு நாம் எஸ்ஐபி முதலீட்டின் மூலம் விதைக்கும் பணம் என்னும் விதை, பிற்காலத்தில் செழித்து வளர்ந்து, பிள்ளைகளின் கல்விச் செலவு என்னும் சுமையை தீர்க்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


ஏன் முக்கியம் எஸ்ஐபி?

ஆயுள் காப்பீடு பாலிசி, ஆர்டி போன்ற சேமிப்புத் திட்டத்தில், நமது வருமானம் அல்லது தேவைக்கேற்ப நமது சேமிப்புத் தொகையை உயர்த்திக் கொள்வது கடினம். அப்படி உயர்த்த வேண்டுமானால் ஒரு புதிய பாலிசியை எடுக்க வேண்டும். அல்லது புதிய ஆர்டி எடுக்க வேண்டும். தவிர, அதே திட்டத்தில் முதலீட்டுத் தொகையை உயர்த்தும் வாய்ப்பில்லை. ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அப்படியில்லை. எப்போதெல்லாம் நமது வருமானம் உயருகிறதோ, அப்போது நமது தேவைக்கேற்ப மாத எஸ்ஐபி தொகையை மாற்றி அமைக்கும் வாய்ப்புள்ளது.

இத்தகைய எஸ்ஐபி முதலீட்டை, தங்கள் பிள்ளைகள் உயர் கல்வி மற்றும் உயர் நிலை கல்வி வயதை அடையும் வரை தொடர்ந்தால் மட்டுமே கனவு நிஜமாகும். பலர் ஆரம்பத்தில் மிகவும் ஆசையுடனும், துடிப்புடனும் எஸ்ஐபி முதலீட்டை ஆரம்பிப்பார்கள். ஆனால், பாதியிலேயே முதலீட்டை நிறுத்திவிடுவார்கள். இதனால், அவர்களால் கூட்டு வளர்ச்சியின் (பவர் ஆஃப் காம்பவுண்டிங்) மகிமையை உணர முடியாமலே போய்விடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick