குழந்தைகள் பெயரில் முதலீடு செய்ய எது சிறந்த வழி?

கேள்வி - பதில்

?குழந்தைகள் பெயரில் முதலீடு செய்ய எது சிறந்த வழி? ஃபிடிலிட்டி சைல்டு இன்வெஸ்ட்மென்ட் பிளான்களில் முதலீடு செய்யலாமா?

விவேக்,

கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்.

“குழந்தைகள் பெயரில் எஸ்ஐபி (SIP) முறையில் மாதா மாதம் நீண்ட  கால அடிப்படையில் டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது மிகவும் நல்லது. நீங்கள் சொன்ன ஃபிடிலிட்டி சைல்டு இன்வெஸ்ட்மென்ட் பிளானில் முதலீடு செய்யலாம். இப்போது ஃபிடிலிட்டி இந்தியா சில்ரன் பிளான்,  எல் அண்ட் டி  இந்தியா புரூடென்ஸ் ஃபண்டாக மாறியுள்ளது. இந்தத் திட்டம்  பங்கு சார்ந்த பேலன்ஸ்டு  திட்ட வகையைச்  சார்ந்தது. இது  2011-ம்  வருடத்தில்  துவங்கப்பட்டது. இந்த ஃபண்டின்  மூலம் ரூ.1,400 கோடி நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஃபண்ட், 2012-ம் ஆண்டு 31.36%, 2013-ம் ஆண்டு 9.10%, 2014-ம் ஆண்டு 44.48%  மற்றும் 2015-ம் ஆண்டு 9.93% வருமானமாக தந்துள்ளது. நீங்கள் இதே வகையை சார்ந்த ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட் மற்றும் டாடா பேலன்ஸ்டு ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.’’

?என் வயது 17. கல்லூரி மாணவனாகிய நான் பகுதி நேரமாக மோட்டார் சைக்கிளில் சென்று கடைகளுக்குப் பொருட்களை விநியோகம் செய்கிறேன். நான் டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுக்க முடியுமா?

மகேந்திரன், வேலூர்,

ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

“டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க குறைந்த பட்சம் 18 வயது நிறைந்திருக்க வேண்டும். இப்போது உங்கள் வயது 17 என்பதால் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாது . 18 வயது நிரம்பிய வுடன் நீங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம்.’’

?எனது நிறுவனப் பணி நிமித்தமாக விசா மூலமாக கொரியாவுக்கு மூன்று மாதங்களுக்கு வந்துள்ளேன். என் நிறுவனம் எனக்கு உணவு மற்றும் வேறு செலவுகளுக்காக 100 டாலர் தந்தது. நான் அதில் 50 டாலரை சேமித்து வைத்துள்ளேன். இந்தப் பணத்துக்கு நான் ஏதாவது வரி கட்ட வேண்டுமா?

சேகர்,


கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர்,ஜிவிஎன் அண்ட் கோ.

“நிறுவனப் பணி நிமித்தமாக மூன்று மாதங்கள் கொரியாவில்  தங்கியிருந்து பணத்தைச் சேமித்து இருந்தால், வருமான வரிச் சட்டம் 1961-ன்படி நீங்கள் சேமித்த பணம் வருமானமாக கருதப்படாது. அதனால் இந்தியாவில் அந்தப் பணத்துக்கு நீங்கள் வரி கட்ட வேண்டியதில்லை.’’

?கிராம நத்தம் மனை என்றால் என்ன? அதில் வீடு கட்டலாமா?

வேலுச்சாமி,

த.பார்த்தசாரதி,சொத்து மதிப்பீட்டு நிபுணர்.

“கிராமத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமாக உள்ள நிலத்தினை அங்கு வாழும் மக்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக அரசாங்கம் ஒதுக்கித் தரும். அந்த நிலத்தினை கிராம நத்தம் என்று அழைப்பார்கள். ஆகையால், கிராம நத்தம் வீடு கட்ட உகந்தது. பொதுவாக, கிராம நத்தம் நிலத்துக்கு பட்டா வழங்குகிறார்கள்.”

?   இப்போது தான் புதிதாக  கிரெடிட் கார்டு வாங்கினேன். ஸ்டேட்மென்ட்டில் மினிமம் ட்யூ அமௌன்ட்  என்றும் டோட்டல் ட்யூ அமௌன்ட் என்றும் குறிக்கப்பட்டு உள்ளது.இதில் எந்தத் தொகையை நான் கட்ட வேண்டும் ?

சிவன்,

செந்தில் மதிவதனன், நிதி ஆலோசகர், penguwin.com

“ கிரெடிட்  கார்டில் நீங்கள் செலுத்த வேண்டிய டோட்டல் ட்யூ அமௌன்ட்.டில், அதாவது, மொத்த நிலுவைத் தொகையில்  சுமார் 5% மினிமம் ட்யூ அமௌன்ட், அதாவது குறைந்தபட்ச நிலுவைத் தொகை   ஆகும்.  உதாரணத்துக்கு, டோட்டல் ட்யூ அமௌன்ட் ரூ.5,000 எனில்,  மினிமம் ட்யூ அமௌன்ட் ரூ.250 ஆகும். பில்லில் குறிப்பிட்டிருக்கும் தொகையைக் கட்ட வேண்டிய கடைசி தேதிக்குமுன், டோட்டல் ட்யூ அமௌன்ட்டை கட்ட வேண்டும். ஒருவேளை  ட்யூவை கட்ட வேண்டிய தேதிக்கு முன் மினிமம் ட்யூவை மட்டுமே கட்டியிருந்தால், கட்ட வேண்டிய மீதித் தொகைக்கு நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட்  கார்டை பொறுத்து சுமார் 40% வரைக்கும் வட்டி வசூலிக்கப்படும். மினிமம் ட்யூ அமௌன்ட்டையும் கட்டவில்லை என்றால்  வட்டியுடன்  சேர்த்து அபராதமும் கட்ட வேண்டியிருக்கும்.” 

?   நான் எஸ்ஐபி முறையில் பிர்லா சன்லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் (குரோத்), ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் (குரோத்), ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஃபோகஸ்டு புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் ரெகுலர் பிளான் (குரோத்), ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் (குரோத்), யூடிஐ மிட் கேப் ஃபண்ட் (குரோத்) மற்றும் சுந்தரம் மணி ஃபண்ட் ரெகுலர் பிளான் (குரோத்) ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளேன். இந்த முதலீடுகளை தொடரலாமா?

ராஜசேகர்,


த.சற்குணன், நிதி ஆலோசகர், சென்னை.

“நீங்கள் முதலீடு செய்துள்ள  அனைத்தும் நல்ல திட்டங்களே. எனவே, இந்தத் திட்டங்களில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.  சுந்தரம் மணி ஃபண்டில் செய்திருக்கும் முதலீட்டை குறைந்தபட்சம் உங்களது மூன்று மாத வருமானம் அளவுக்கு உயர்த்திக் கொள்ளுங்கள். அவசர  காலத் தேவைக்கு அதிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.”


போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!


கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick