நாணயம் லைப்ரரி: வெற்றிகரமான மாற்றங்களைத் தரும் முதல் 30 நாட்கள்!

புத்தகத்தின் பெயர் : த ஃபர்ஸ்ட் தர்ட்டி டேஸ்  (The First 30 Days)

ஆசிரியர்:  அரியேன் டி போன்விசன்  ( Ariane de Bonvoisin)

பதிப்பாளர் : HarperOne

நம்மில் பெரும்பாலானவர்கள் நம்முடைய முன்னேற்றத்துக்காக நம் அன்றாட பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டுவர நினைக்கின்றோம். இவற்றில் நாமாகவே கொண்டுவர நினைக்கும் மாற்றங்கள் ஒரு வகை.

அதாவது, நமது எடையைக் குறைக்க நினைப்பது,  புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது போன்றவை அவை. மற்றொரு வகை, தவிர்க்கவே வழியில்லாமல் நம்மை வந்தடையும் மாற்றங்கள்.

வாழ்வில் பல சூழ்நிலைகளில் மாற்றம் என்பது அதுவாகவே நம்மை வந்து சேர்ந்துவிடுகிறது. பார்க்கும் வேலையை இழத்தல், நெருங்கிய நண்பர்/உறவினர் கடுமையான நோய்வாய்ப்படுதல் அல்லது மரணமடைதல் போன்ற பல விதமான மாற்றங்களை நாம் அன்றாடம் எதிர்கொள்வதால் தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்கிறோம்.  இதில் நாம் திட்டமிட்டு கொண்டு வரும் மாற்றங்களை மன திடத்துடன் கொண்டுவர  முடிகிறதா என்றால் அதில் பல முட்டுக்கட்டைகள் வந்துவிடுகின்றன.

சரி, அதுவாக வந்து சேரும் மாற்றங்களை நம்மால் சுலபத்தில் ஏற்றுக்கொள்ள முடிகிறதா என்றால் அதில் எக்கச்சக்க மனஉளைச்சல்கள்.

இப்படி நம் வாழ்வில் திட்டமிட்டுச் செய்யும் அல்லது தானாக வரும் மாற்றங்களை சந்திக்கும்போது அதனை வெற்றி கரமாக செயலாக்கவும், எதிர்கொள்ளவும் அந்த மாற்றத்தின் முதல் முப்பது நாட்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைச் சொல்லும் அரியேன் டி போன்விசன் என்ற பெண்மணி எழுதிய ‘த ஃபர்ஸ்ட் தர்ட்டி டேஸ்’ எனும் புத்தகத்தைத் தான் இந்த வாரம் அறிமுகப் படுத்துகிறோம்.

ஏன் மாற்றங்கள் வரும்போது நாம் தடுமாறுகிறோம், ஏன் நமக்கு மாற்றங்கள் பல சமயம் கசக்கிறது என்று சிந்தித்தால் நமக்கு புரிவது பின்வரும் விஷயங்கள் எனலாம்.  மாற்றம் என்பது ஒரு கடினமான விஷயம். அதனால் அதை தவிர்ப்பதே நல்லது என்று நினைக்கிறோம்.

மாற்றம் என்பது எனக்கு மட்டுமே வருவது. அதனால் பாதிக்கப்படப்போவது நான் மட்டுமே என்ற எண்ணம். மாற்றம் என்பது நம்முடைய நேரம் மற்றும் சக்தியை அதிகம் செலவிட வேண்டிய ஒரு விஷயம் என்ற எண்ணம்.

மாற்றம் என்பதே பதற்றத்தை ஏற்படுத்துகிற ஒரு விஷயம் – யார் கஷ்டப்படுவது என்ற நினைப்பு போன்றவையே மாற்றங்களை நாம் சந்திக்க மறுப்பதற்கான காரணங்களாகும் என்கிறார் ஆசிரியை.

 மாற்றம் குறித்து பல்வேறு  எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு மாற்றத்தையே நிரந்தர விஷயமாகக் கொண்டிருக்கும் உலகத்தில் எப்படிக் காலம் தள்ளுவது என்பதை எடுத்துச் சொல்லவே இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகம் மாற்றம் அதிக அளவில் வலிகளைத்தரும் முதல் முப்பது நாட்களை சுலபமாக எதிர்கொள்ளும் வழிகளையும் மாற்றங்களை எதிர்கொள்ளும் போது வரக்கூடிய பயம், எரிச்சல் போன்றவற்றை குறைத்து நம்பிக்கையுடனும், புதுத்தெம்புடனும், பதற்றமேதும் இல்லாமல் எதிர்கொள்ள உதவும் விஷயங்களையும் சொல்கிறது இந்தப் புத்தகம்.

உங்களைச் சுற்றி இருக்கும் நபர்களில் மாற்றங்களை சுலபத்தில் எதிர்கொள்ளும் சிலரும் இருப்பார்கள். அவர்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அவர்களிடம்  நேர்மறை நம்பிக்கைகள் (பாசிட்டிவ் பிலீஃப்) நிறைந்து கிடக்கும். இந்த நம்பிக்கையே மாற்றத்தையும் எதிர்கொள்ள முடியும் என்ற மனஉறுதியை அளிக்க வல்லது.

மாற்றம் வந்தால் மட்டுமே நல்லது வரும் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் இருக்கும். அது மட்டுமில்லாமல், வளர்ச்சிக்கான பாதை மாற்றத்தினால் அமைந்ததே என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டு இருப்பார்கள்.

ஆனால், இவர்களுக்கு எதிர்மறையானவர்களோ மாற்றம் வந்தவுடனேயே, ‘‘நான் துரதிருஷ்டசாலி. எப்பப் பாருங்க எனக்கு மட்டுமே மாற்றங்கள் சொல்லிவைத்த மாதிரி வருகிறது, என்ற புலம்பலுடன் எதிர்மறை நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு திரிவார்கள்.
இதில் மிகவும் கொடுமையான விஷயம், மாற்றத்தை ஒரு மனிதன் எதிர்கொள்ளும் சமயத்தில் மட்டுமே அந்த மனிதனின் உண்மையான குணநலன்கள் வெளிப்பட ஆரம்பிக்கும். உங்களைத் தேடி வரும் மாற்றங்களை உங்களால் மாற்றி அமைக்க முடியாது.

ஆனால், அந்த மாற்றங்கள் குறித்த உங்கள் நம்பிக்கையையும், செயல்பாடுகளையும் உங்களால் மாற்றி அமைக்க முடியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியை. அதனால் மாற்றத்தை குறித்த உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வதே சிறந்தது என்கிறார்.

வெற்றிகரமாக மாற்றங்களை எதிர்கொள்ளும் நபர்கள் மனதில் இருக்கும் முக்கியமான மற்றுமொறு நம்பிக்கை மாற்றம் என்பது நன்மைகளையே கொண்டுவந்து சேர்க்கும் என்ற எண்ணம்தான். நன்கு சிந்தித்துப் பார்த்தால், நாளடைவில் நமக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரியும். நாம் மிகுந்த வலியுடன் சந்தித்த மற்றும் ஏற்றுக்கொண்ட மாற்றங்கள்கூட நமக்கு ஏதாவது ஒரு விதத்தில் நன்மை புரிந்திருக்கவே செய்யும்.

முதல் முப்பது நாட்களில் மாற்றம் குறித்த பாசிட்டிவ் நம்பிக்கைகள் அதிகம் இருக்க வேண்டும். புதிய நம்பிக்கைகளை பெறுதல் என்பது சுலபமான விஷயம் அல்ல. எனவே, சாதாரணமாகவே நம்பிக்கையை வளர்த்தெடுப்பது என்பதை நாம் ஒரு பழக்கமாக ஆக்கிகொள்வதே நல்லது. அப்போதுதான், மாற்றங்கள் வரும் போது அதை சுலபத்தில் எதிர்கொள்ள முடியும்.

அதேபோல், எந்த மாற்றமும் ஏற்படும் ஆரம்ப காலத்தில் சற்று கூடுதல் இடைஞ்சல் என்பது இருக்கவே செய்யும். அந்த ஆரம்ப கால கூடுதல் இடைஞ்சல் என்பது நிரந்தரமில்லாத ஒன்று என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாற்றம் சுலபமாக இருப்பதும் கடினமாக இருப்பதும் நம் மனநிலையில் இருக்கிறதே தவிர, மாற்றத்தில் இல்லை என்கிறார் ஆசிரியர்.

மனிதன் படைக்கப்பட்டு இருக்கும் விதமே மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் வண்ணத்தில் தான். எந்தவொரு தருணத்திலும் ஏற்கெனவே நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்ட மாறுதல்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் மாற்றங்களை எதிர்கொள்ளும் வல்லமை பொருந்தியவர் என்பதை முழுமையாக உணர்வீர்கள்.

ஒவ்வொரு மாற்றத்தை எதிர்கொள்ளும் போதும் நீங்கள் ஏற்கெனவே எதிர்கொண்ட மாற்றங்களின் பாதையை நினைவில் கொண்டால், நீங்கள் மாற்றத்தைவிட பலசாலி என்பது உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். அதனாலேயே, நீங்கள் அடுத்து வரும் மாற்றத்தை சுலபத்தில் எதிர்கொள்ள ஆயத்தமாவீர்கள்.

எல்லா மனிதர்களின்  பல்வேறு விதமான தேடுதல் களிலும் ஒரே ஒரு தேடுதலில் மட்டும் வெற்றி  உறுதியாக கிடைக்கும். அது எப்போது தெரியுமா? பழிபோடுவதற்கு ஆள் தேடும்போதுதான். என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியை.

மாறுதல்கள் என்பது நமக்கு ஒருபோதும் வலியைத் தருவதில்லை. மாறுதல்களை நாம் எதிர்த்து நிற்கும்போதே நாம் வலியை உணர ஆரம்பிக்கிறோம். மாறாக, மாறுதல்களை நாம் ஏற்றுக்கொண்டோமேயானால் நாம் புதிதாக பயணிக்க வேண்டிய பாதை உடனடியாக நமக்குப் புலப்பட்டுவிடும். மாற்றத்தின் கையினுள் எவ்வளவு சீக்கிரம் நீங்கள் உங்களை இருத்திக் கொள்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுடைய பயணம் சுகமானதாகிவிடும் என்கிறார் ஆசிரியர்.

மாற்றம் குறித்த நம்முடைய எண்ணங்களை நம்மால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். அதனால் மாற்றம் குறித்த நல்ல எண்ணங்களை மட்டுமே நாம் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினையுங்கள். சுலபத்தில் நல்லெண்ணங்களை நீங்கள் கொண்டு மாற்றத்தை வெற்றி கரமாக எதிர்கொள்ள முடியும்.

மாற்றம் என்பது ரொம்பவுமே சங்கடம் தருகிறது. நஷ்டத்தையும் வலியையும் தருகிறது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், பல சமயம் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதிலிருக்கும் நஷ்டத்தைவிட அதை எதிர்த்து செயல்படுவதில் இருக்கும் நஷ்டமும் வலியும் அதிகமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள் என்கிறார் ஆசிரியர்.

அதேபோல், மாற்றங்களை எதிர்கொள்ளும்போது நாம் இந்த உலகத்தில் தனியாக இருக்கும் ஒரே ஒரு நபர் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்முடன் இருக்கும் ஒரு சிலர் நமக்கு அந்த மாற்றத்தை எதிர்கொள்ள உதவுவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்களைச் சுற்றி   இருப்பவர்கள் உங்களுக்குத் தரும் ஆதரவு என்பது மாற்றத்தை எதிர்கொள்வதில் மிக மிக உதவியாக இருக்கும்.  நாமாக கொண்டுவருவதோ, அதுவாக நம்மை வந்தடைவதோ எதுவாக இருந்தாலும் சரி மாற்றத்தை எதிர்கொள்ளத்  திட்டமிடுவது மிக மிக அவசியம்.

திட்டமிட்ட மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் ஒருபோதும் தோற்றதில்லை என்று முடிக்கிறார் ஆசிரியை. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் முதல் 30 நாட்களில் செய்யவேண்டியது மற்றும் கருத்தில் கொள்ளவேண்டியது என்ன என்பது குறித்து தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

மாற்றம் என்பது நிரந்தரமாகி விட்ட இந்த உலகில் அதை சுலபத்தில் எதிர்கொள்ள நினைக்கும் அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்துப் பயன்பெறலாம்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப்  புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக்  கிடைக்கும்.)


நிறுவனங்கள் கட்ட வேண்டிய வரி பாக்கி ரூ.4.18 லட்சம் கோடி!

இந்தியா முழுக்க பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரியை இன்னும்கூட அரசுக்கு செலுத்தாமலேயே இருக்கிறது. கடந்த ஜனவரி மாத இறுதி வரை இந்தியாவில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக 4,18,399 கோடி ரூபாய் வரி பாக்கி கட்ட வேண்டியிருக்கிறதாம். இவற்றில் முதல் 50 பெரிய நிறுவனங்கள் வைத்திருக்கும் வரி பாக்கி மட்டுமே 22,903 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார் மத்திய நிதித்துறை இணை அமைச்சரான ஜெயந்த் சின்ஹா. இந்த நிறுவனங்கள் வைத்திருக்கும் வரி பாக்கியை மத்திய அரசாங்கம் வசூல் செய்தாலே, சாதாரண மக்கள் சந்திக்க வேண்டிய வரிச் சுமை பெரிய அளவில் குறையுமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick