பட்ஜெட் 2016 - 17 இது விவசாயிகளுக்கான பட்ஜெட்டா?!

தூரன்நம்பி

ந்த பட்ஜெட்டை படித்துப் பார்த்த பலர், இது விவசாயிகளுக்கான பட்ஜெட் என்கிறார்கள்.  இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நிறைய செய்திருக்கிறார் நிதி அமைச்சர் என்கிறார்கள். நானும் இந்த பட்ஜெட்டை படித்துப் பார்த்தேன். எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே. 

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி. கிராமம், கிராமமாக விவசாய தொழிலாளர்கள், சிறுகுறு விவசாயிகள், கிராமங்களை விட்டு நகரத்துக்கு வேலை தேடி குடிபெயர வேண்டிய கட்டாயம்; விவசாயத்துக்கு வாங்கிய கடன் கழுத்தை நெரிப்பதால், பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 

கடன் நிவாரணம், கடனிலிருந்து விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு எந்த சலுகையும் இல்லை. மாறாக ரூ.8.5 லட்சம் கோடியிலிருந்து ரூ. 9 லட்சம் கோடியாக விவசாயக் கடனை உயர்த்தி உள்ளோம் என்று பெருமை பேசுகிறது பட்ஜெட். தூக்கிலே தொங்குபவனுக்கு தூக்குக் கயிறு என்ன உதவியை செய்கிறதோ, அதே உதவியைத்தான் கடன், விவசாயி களுக்கு செய்கிறது. கடன் என்பது விவசாயி களுக்கு விடுக்கும் கொலை அழைப்பானை (Loan is death warrant to farmers). இந்த அழைப்பானை அடுத்தடுத்து அனுப்புவதில் ஆளுகிறவர்களுக்கு அப்படி என்ன இன்பம்?

கட்டுப்படியான விலை... பாசன உறுதி அளிப்பு, விலை நிர்ணயம், அதாவது வருமான உத்தரவாதம் (Income Security) இல்லாமல் கடனை மட்டும் திணிப்பது... விவசாயிகளை வேண்டுமென்றே கொலைக் களத்துக்கு தள்ளும் கொடிய செயலாகும். இந்த பட்ஜெட்டும் அதற்கு விதி விலக்கல்ல.

2008-ல் பொருளாதார சரிவு ஏற்பட்டபோது அன்றைய மன்மோகன் அரசு ரூ.3 லட்சம் கோடியை (Stimulus fund) தொழிற்சாலைகளுக்கு தந்து, தொழிற்சாலைகளை அழிவிலிருந்து மீட்டது. விவசாயி களை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க, ஒரு துரும்பைகூட இந்த பட்ஜெட் எடுத்துப் போட வில்லை. பிறகு எப்படி இது விவசாயிகளின் பட்ஜெட் என்று சொல்ல முடியும்?

 

பாசனத் திட்டங்களுக்காக ரூ.17,000 கோடி ஒதுக்கி இருப்பதாக வும், 28.5 லட்சம் ஏக்கர் கூடுதலாக பாசனம் பெறும் என்றும் நிதி அமைச்சர் பெருமையடிக்கிறார்.ஐயா, பிரிக்கப்படாத ஆந்திர அரசு தனக்கு மட்டும் ஆண்டுக்கு  ரூ.15,000 கோடியை பாசனத்துக்காக ஒதுக்கியது. 29 மாநிலங்களை உள்ளடக்கிய பரந்துபட்ட இந்திய பேரரசு, நாடு முழுக்க  மொத்தமாக ரூ.17,000 கோடி என்பது கடலில் கரைக்கப் பட்ட பெருங்காயம் போலத் தான்... திட்ட மதிப்பீட்டுக்கே இந்தத் தொகை போதாது என்கிற போது, திட்டம் நிறைவேறுவது எங்கணம்?

மேலும், விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி வெறும் ரூ.35,684 கோடி மட்டுமே. இதை 29 மாநிலங்களுக்கு பிரித்தால் என்ன வரும்? எப்படி விவசாயி களைக் கரையேற்றும்? வளர்ந்த நாடுகளான, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள், விவசாயிகளுக்கு நேரடி மானியம் வழங்குகிறது. இந்திய அரசோ மானியம் என்ற பெயரில் ரசாயன உர கம்பெனிக்கு ரூ.70,000 கோடியைக் கொட்டி கொடுத்து விட்டு, ஒப்புக்கு இயற்கை விவசாயத்தை தூக்கிப் பிடிக்கப் போகிறேன் என்று வேஷம் போடுகிறது.

விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி திட்டங்களை பொறுத்த வரை, பழைய காங்கிரஸ் அரசுக்கும், புதிய மோடி அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வாயில் அதிகம் வறுபட்ட திட்டம் (MGNREGA) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்தான். எந்தத் திட்டம் உருப்படாத திட்டம் என்று திட்டித் தீர்த்தாரோ, அந்த திட்டத்தை உச்சி முகர்ந்து அதற்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் எனில், இது எப்படி புரட்சிகரமான புதிய பட்ஜெட் ஆகும்? புதுசும் இல்லை... புரட்சியும் இல்லை... இந்த பட்ஜெட் பழைய  மொந்தையில் பழைய கள். இதில் கொஞ்சம்கூட புதுமை இல்லை.

மேலும், விளைபொருளை தந்த விவசாயிகளுக்கு உரிய பணத்தை தரமுடியாதபோது, அவர்களுக்குத் தேவையான பணத்தைத் தர ரூ.10,000 கோடி  முதலீட்டில் ஒரு தொகுப்பு நிதியை உருவாக்கலாம் என்கிற கோரிக்கை வைத்தோம். இதை ஏற்றுக்கொண்ட பின்னும் செயல்படுத்த நிதி அமைச்சருக்கு மனம் வரவில்லை.

எரிபொருளில் எத்தனால் கலப்பதற்கு வழிசெய்து தந்திருக்க லாம். இதனால் விவசாயிகள், சாதாரண மக்கள், அரசாங்கம் என மூன்று தரப்பினரும் பயன் அடைந்திருப்பார்கள்.

எல்லாவற்றும் மேலாக, நீர்ப் பாசனத்துக்கு நிதி ஒதுக்கி விட்டால் போதுமா? அந்த மாநிலத்தில் உருவாகும் தண்ணீர் அந்தந்த மாநிலத்தின் சொத்து என்கிற அடாவடித்தனம் நிகழும் போது, கால்வாய்களை மட்டும் கட்டி என்ன பயன்?

நிதி அமைச்சரை மனம் நொந்து என்ன பிரயோஜனம்? அவருக்கு 2% கெட்ட கொழுப்பு இருக்கும் நம்மூர் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்க்கு ஆதரவு தரத் தெரியாது. 20% கெட்ட கொழுப்பு இருக்கும் பாமாயிலை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து இறக்குமதி செய்யத்தான் தெரியும்.

விவசாயம் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் வேண்டு மானாலும் இந்த பட்ஜெட்டை விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட் என்று சொல்லலாம். விஷயம் தெரிந்த விவசாயிகள்   அப்படி சொல்ல மாட்டார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick