குரூப் இன்ஷூரன்ஸ்: நிறுவனங்களுக்கும் நன்மை... ஊழியர்களுக்கும் நன்மை!

இரா.ரூபாவதி

னித்தனியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதைவிட, ஒரு குழுவாக சேர்ந்து எடுத்தால், பிரீமியமும் குறையும்; பலரும் பயன் பெறலாம் என்பதால், இன்றைக்கு பல நிறுவனங்கள் குரூப் இன்ஷூரன்ஸை தங்களது ஊழியருக்கு தந்து வருகின்றன.

குரூப் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது முக்கியமானது. இந்த பாலிசிக்கான பிரீமியத்தை சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காகச் செலுத்தும். ஆனால், சில நிறுவனங்களில் ஊழியர்களே செலுத்த வேண்டியிருக்கும். அதனால் சில ஊழியர்கள், ‘நான்தானே பிரீமியம் செலுத்துகிறேன். எனவே, நான் தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்கிறேனே!’ என்று நினைத்து, குரூப் இன்ஷூரன்ஸை தவிர்த்து, தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது.

ஏனெனில் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் ஊழியர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். என்னென்ன நன்மைகள் என்பது குறித்து இன்ஷூரன்ஸ் நிபுணர் ஜெய்ராம் நாராயணன் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘குரூப் இன்ஷூரன்ஸில் குரூப் லைஃப் இன்ஷூரன்ஸ், குரூப் ஆக்சிடென்ட் இன்ஷூரன்ஸ், குரூப் விபத்து செலவு பாலிசி, குரூப் மெடிக்ளெய்ம் பாலிசிகள் என பல பாலிசிகள் உள்ளன. மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்குக் கீழ் இருப்பவர்களுக்கு இஎஸ்ஐ பிடித்தம்  என்பது கட்டாயம். ஒரு நிறுவனம் விரும்பினால், இது மாதிரியானவர்களை குரூப்  பாலிசியில் சேர்க்கலாம். இந்த பாலிசியின் மூலம் கவரேஜ் பெறும் ஒரு ஊழியர் தன் குடும்ப  உறுப்பினர்களுக்கும் கவரேஜ் பெற முடியும். அதாவது, கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர்களுக்கும் (மூத்த குடிமக்களாக இருந்தாலும்) சேர்ந்து கவரேஜ் பெற முடியும்.

ஆனால், சில நிறுவனங்கள் ஒரு ஊழியர் தன்னுடன், எத்தனை குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்பதில் கட்டுப்பாடு வைத்திருக்கும். 

குரூப் இன்ஷூரன்ஸில் பாலிசி எடுத்த முதல் நாளில் இருந்தே கவரேஜ் கிடைக்கும். 30 நாள் காத்திருப்புக் காலம் இருக்காது. மேலும், ஏற்கெனவே உள்ள பெரும்பாலான நோய்களுக்குக் காத்திருப்பு காலம் இருக்காது. எனவே, அந்த நோய்களுக்கு பாலிசியின் முதல் நாளிலிருந்து கவரேஜ் கிடைக்கும். முக்கியமான விஷயம், இதில் பிரசவத்துக்கும் கவரேஜ் கிடைக்கும். தனிநபர் எடுக்கும் மருத்துவ பாலிசியிலோ அல்லது ஃப்ளோட்டர் பாலிசியிலோ இந்த கவரேஜ் கிடைக்காது. மேலும், தனிநபர்கள் எடுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைவிட குரூப்பில் பிரீமியம் குறைவு.  

மேலும், தொடர்ந்து குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கவரேஜ் பெற்றுவரும் ஊழியர் ஒருவர் பணி ஓய்வு பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் பணி ஓய்வு பெறுவதற்கு 45 நாட்களுக்கு முன்பாகவே வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒரு கடிதம் வாங்க வேண்டும். அந்தக் கடிதத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்து, அந்த குரூப் பாலிசியில் இருந்த வசதிகளுடன் பாலிசியை தொடரலாம். இதற்கு எந்தவித நிபந்தனைகளும் கிடையாது. இதேபோல, பணியாளர்கள் வேறு நிறுவனத்துக்கு வேலை மாறும் போதும் இதைச் செய்ய முடியும்.

குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு ஊழியர் பிரீமியம் செலுத்தினால், அந்தத் தொகைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80டி-யின் கீழ் வரிவிலக்கு பெற முடியும்.

குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி டெய்லர் மேட் பாலிசி என்பதால் நிறுவனம் தனக்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டுப் பெற முடியும். அதேபோல பிரீமியம் தொகையைக் குறைக்கவும் முடியும்.

குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பது ஊழியருக்கு மட்டுமில்லாமல் நிறுவனமும் நன்மை பெறும். ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு  பாலிசி எடுத்துக் கொடுக்கும் தொகையைச் செலவாகக் கணக்கிட்டு வரிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம். இதனால் நிறுவனம் செலுத்த வேண்டிய வரி தொகையானது கணிசமாகக் குறையும். அதோடு ஊழியர்களுக்கு நிறுவனம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொடுக்கும்போது ஊழியர்களுக்கும், நிறுவனத்துக்கும் இடையேயான உறவு பலப்படும். அதோடு ஊழியருக்கு ஏதாவது மருத்துவ தேவை ஏற்படும்போது ஆகும் செலவுகளுக்கு நிறுவனமும், ஊழியரும் கவலைப்படத் தேவையில்லை.

குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்குத் தரும்போது அந்த நிறுவனமும் பலனடையும்; ஊழியர்களும் பலனடைவார்கள்’’ என்று முடித்தார் ஜெய்ராம் நாராயணன்.

குரூப் பாலிசி அனைவருக்கும் கைகொடுக்கும் என்பதை நிறுவனமும், ஊழியர்களும் உணர வேண்டும்!

படம்: பா.காளிமுத்து.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick