நகைக் கடைகளுக்கு செக்... கறுப்புப் பணத்தை ஒழிக்க கலால் வரி!

இரா.ரூபாவதி

2016-17 - ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்க நகை விற்பனைக்கு 1% கலால் வரியை விதித்துள்ளது மத்திய அரசு. இதனை அடுத்து தங்க நகைக் கடை உரிமையாளர்கள் கடந்த 3-ம் தேதி முதல் கடை அடைப்பு செய்தனர்.

ஏன் இந்த கடை அடைப்புப் போராட்டம்?

கலால் வரியை எதிர்த்து நகைக்கடை வியாபாரிகள் போராட்டம் நடத்துவதற்கான காரணம் கலால் வரி மட்டுமல்ல. மத்திய அரசு விதித்துள்ள 1 சதவிகித கலால் வரி அனைத்து நகைக்கடை களுக்கும் கிடையாது. வருடத்துக்கு ரூ.12 கோடிக்குள் டேர்ன்ஒவர் செய்பவர்கள் ரூ.6 கோடி வரை கலால் வரி விலக்கு பெற முடியும்.

ஆனால், ரூ.12 கோடிக்கு மேல் டேர்ன்ஓவர் செய்பவர்கள் முழுத் தொகைக்கும் கலால் வரி செலுத்த வேண்டும். இதற்கு முந்தைய நிதியாண்டின் டேர்ன்ஓவர் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இது குறித்து மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் டைமண்ட் அசோசியேஷனின் தலைவர் ஜெயந்திலால் ஜே.சலானியிடம் கேட்டோம்.

“இந்தப் போராட்டம் கலால் வரி உயர்வுக்கு மட்டும் இல்லை. ஏனெனில் அந்த வரியை நகை வாங்கும்போது பொது மக்களிடம் இருந்து வாங்கி, கலால் துறைக்குச் செலுத்தி விடுவோம்.  ஆனால், பிரச்னையே அதில் உள்ள விதிமுறைகள்தான். அதாவது, உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் அனைத்து நகைகளுக்கும் கலால் வரி செலுத்த வேண்டும் என்பதுதான்.

நகைக் கடைகளில் மூன்று வகையான நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் நகைகள், மொத்த மாகக் கொள்முதல் செய்யப்படும் நகைகள், பழைய நகைகள் (சில கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது) என கலந்திருக்கும்.

நகைக்கடைகளில் உள்ள நகை கையிருப்பு கணக்கைக் கிலோ கணக்கில்தான் வைத்திருப் போம். நகைகளின் எண்ணிக்கை யின் அடிப்படை யில் வைத்திருக்க மாட்டோம்.

இந்த நிலையில், கலால் துறை அதிகாரிகள் கடைக்கு சோதனை செய்யவரும் போது உற்பத்தி செய்த நகைகளைக் கணக்கு காண்பிக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில் அது முடியாத காரியம். அதில் ஏதாவது பிரச்னை என அதிகாரிகள் தெரிவித்தால், ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை இருக்கும். மேலும், கலால் துறை கேட்கும் ஆவணங்களை எல்லாம் நகைக்கடைகள் பராமரிப்பு செய்வது மிகவும் கடினமான விஷயம். இதனால் நகைக்கடை அதிபர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.

நகைக் கடை தொழிலையே நசுக்க வேண்டுமென மத்திய அரசு இது போன்ற நடவடிக்கை களை எடுத்து வருகிறது. சிலர் தங்களின் கறுப்புப் பணத்தில் தங்கத்தை வாங்குகிறார்கள் என அரசு நினைக்கிறது. அதனால் நகைத் தொழிலை ஒழித்துவிட் டால் கறுப்புப் பணத்தின் அளவைக் குறைத்துவிட முடியும் என நினைக்கிறது.

இப்போது விதித்துள்ள கலால் வரியினால் தங்கம் வாங்குவது குறையும் என அரசு கூறுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே தங்கம் இறக்குமதி செய்வது குறைவாகத்தான் உள்ளது. அதேபோல, நடப்புக் கணக்கு பற்றாக்குறை அளவு குறைவாகத் தான் உள்ளது. அப்படி இருக்கும் போது, அதை இன்னும் ஏன் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது?

இது தொடர்பான விதிமுறை களைத் தளர்த்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்து நடத்திவரும் போராட்டத்துக்கு மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார். கலால் வரி விதிப்புக்கு ஏன் நகைக்கடை வியாபாரிகள் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக் கிறார்கள் அதில் உள்ள சிக்கல் என்ன என்பது குறித்து வழக்கறிஞர் வைத்தீஸ்வரனிடம் கேட்டோம்.

“அரசுக்கு வேண்டியது வருமானம்தான். உற்பத்தி செய்யப்படும் நகைகளுக்கு கலால் வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. இன்றைக்கு உள்ள பெரும்பாலான நகைக் கடைகள் இரண்டு, மூன்று கிளைகள் வைத்துள்ளன. இதில் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு அனுப்பினாலே கலால் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

அடுத்து, சில டிசைன் நகைகள் அதிக வரவேற்பு பெறாத நிலையில் அதை உருக்கி புதிய நகைகளைச் செய்வார்கள். அப்போதும் கலால் வரி செலுத்த வேண்டும். இதனால் ஒரு நகைக்கு இரண்டு முறை கலால் வரி செலுத்த வேண்டியிருக்கும். கூடுதலாகச் செலுத்தப்படும் ஒரு சதவிகித வரியை மக்களிடம் இருந்து வசூலிக்க முடியாது. இத னால் நகைக்கடைகளுக்கு இழப்பு ஏற்படும். இது போன்ற குழப்பங்கள் இந்த வரி விதிக்கும்போது இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

இது குறித்து சில நகை வியாபாரிகளிடம் கேட்டோம். அவர்கள் சில உண்மைகளைத் தெரிவித்தார்கள். ‘‘கலால் வரி வசூலிப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. அதிலும் சிறிய கடைகளுக்கு இது பெரிய சிக்கல் இல்லை. இதுநாள் வரை பெரும்பாலான நகைக்கடைகள் எந்தவிதமான கணக்குகளையும் நிர்வகிக்கவில்லை. இப்போது அதைச் செய்யும்போது நகைக் கடை வியாபாரிகள்  சிரமப்படு கிறார்கள்.

மேலும், வருடத்துக்கு 1000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் 300 டன் தங்கத்துக்குத்தான் கணக்கு காண்பிக்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் கலால் வரித் துறைக்கு அதிகாரம் அதிகம். அதனால் திடீரென நகைக்கடையில் வந்து ஏதாவது நடவடிக்கை எடுத்தால் சிக்கல் ஆகும் என நகைக்கடை உரிமை யாளர்கள் அச்சப்படுகிறார்கள். இவைதான் இந்த போராட்டத்துக்கு உண்மையான காரணம்’’ என்றார்கள்.

தங்க நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என பல குழப்பங்கள் சாதாரண மனிதர் களை ஏற்கெனவே பரிதவிக்க விடும் நிலையில், இப்போது கலால் வரியும் சேர்வதன் மூலம் நகை வாங்கும் அப்பாவி மக்கள்தான் அதிகம் பாதிப்படைவார்கள். இந்த பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick