அதிகப் பணம் புரள்கிறதா? நிதித் தற்கொலை நடக்க வாய்ப்புண்டு!

ஜெ.சரவணன்

ம் கையில் பணம் அதிகம் புரளும்போது, கண்மண் தெரியாமல் இஷ்டத்துக்கு செலவு செய்கிறோம். சேமிப்பு, முதலீடு போன்றவற்றைப் பற்றி யோசிப்பதே இல்லை. அப்படியே முதலீடு செய்தாலும் தவறானவற்றில் முதலீடு செய்கிறோம்.

இது தற்கொலைக்கு சமமானது என்பது பணம் இல்லாத சூழலில்தான் உணர்வோம். அப்படித்தான் விவேக்கும் உணர்ந்தான்.

விவேக்குக்கு அப்பா, அம்மா இல்லை. பணக்கார தாத்தா, பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தான். அவனுக்கு 24வது பிறந்த நாள் வந்தது. அவன் பாட்டி ரூ.1 லட்சத்தை ரொக்கமாக பரிசாகத் தந்தார். விவேக்குக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன்னுடைய சாதாரண மொபைலை தூக்கிப் போட்டுவிட்டு உயர்ந்த விலையில் அட்டகாசமாக ஒரு மொபைல் வாங்க வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்துக் கொண்டிருந்ததான். 

அந்த ஒரு லட்சத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு லேட்டஸ்ட் மாடல் ஐபோன் ஒன்றை வாங்கினான். மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தைச் சேமிக்கவும் முடிவு செய்தான் விவேக்.  ஆனால், அவன் போன் வாங்கியதும், முதலீடு செய்ததும் எப்படி என்பதுதான் மிக முக்கியமானது.

செலவும் முதலீடும்!

மொபைல் வாங்க நினைத்த விவேக், கூகுளில் மொபைல்களின் ரிவியூவைப் படித்தான். அதுபோக சில பல கடைகளில் ஏறி இறங்கி விலையை விசாரித்து, அனைத்தையும் ஒப்பிட்டு இரண்டு, மூன்று நாட்கள் அதற்காக செலவு செய்து இறுதியாக தனக்கான மொபைலைத் தேர்ந்தெடுத்து வாங்கினான். ஆனால் சேமிப்பு, முதலீடு என்று வந்தபோது போகிறப் போக்கில் நண்பர்களிடம் அரட்டை அடிப்பது போல் பேசினான். நண்பர்கள், பிரபலமான நிறுவனப்பங்குகளில் முதலீடு செய் என்றார்கள். இவனும் கண்ணை மூடிக்கொண்டு சில பிரபல நிறுவனங்களின் பங்குகளை வாங்கிவிட்டு, நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினான். 

நிதித் தற்கொலை!

இது சரியா? நிச்சயம் சரியல்ல. விவேக் வாங்கிய ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஐபோனின் மதிப்பு அவன் கடையை விட்டு வெளியே வந்ததுமே பாதியாகக் குறைந்துவிடும். மதிப்பு குறையும் ஒரு பொருளுக்கு செலவு செய்வதற்கே அவ்வளவு கேள்வியும், ஆராய்ச்சியும் செய்யும் நாம், முதலீடு என்று வரும்போது ஏன் அதை செய்வதில்லை.

நாம் செய்யும் முதலீடு குறித்த எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லாமல் முதலீடு செய்வது நிதித் தற்கொலை ஆகும். நாம் நம்முடைய பணத்தை இழந்து நிற்பதற்கும், எதிர்காலத்தில் பணமில்லாமல் நொடிந்து போய் வாழ்க்கையைக் கழிப்பதற்கும் இதுவே காரணம். இந்த நிதித் தற்கொலையிலிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.

“பொதுவாக, பணம் என்றால் செலவு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய மூன்று விஷயங்களும் முக்கியமானவை. சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் சம்பள உயர்வு, போனஸ் போன்றவை வரும் சமயத்தில்தான் பெரும்பாலான நிதித் தவறுகளைச் செய்கிறார்கள். அதுவரை அவர்களின் கண்ணுக்குத் தெரியாத செலவுகள் எல்லாம் எங்கிருந்துதான் வருமோ தெரியாது? பல ஆண்டுகளாக அட்ஜெஸ்ட் பண்ணி காலம் தள்ளிக்கொண்டிருந்த பல விஷயங்கள், அவர்களின் அவசியத் தேவைகளாக மாறுகின்றன. ஏன், எதற்கு என்ற கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொள்ளாமல் அதை ஒரு கெளரவ விஷயமாகவே பார்க்கிறார்கள். வீட்டில் பல வருடமாக ஓடிக்கொண்டிருக்கும் டிவியை, சம்பள உயர்வு வந்ததும் தூக்கிப் போட்டுவிட்டு புது டிவி வாங்குகிறார்கள்.  வருஷத்துக்கு நான்கு முறை மொபைலை மாற்றுகிறார்கள். மேலும், இப்போது யாரும் நேரத்தை கைக்கடிகாரத்தில் பார்ப்பதில்லை. ஆனால், ஆயிரக் கணக்கில் செலவு செய்து வாட்ச் வாங்குகிறார்கள். பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம் என்று வரிசையாகப் பரிசுகளை வாங்கிக் கொடுத்து போட்டி போட்டு இம்ப்ரஸ் பண்ணுகிறோம். பரிசு கொடுப்பவரிடம் ஏற்கெனவே அந்தப் பொருள் இருக்கிறதா, இது அவருக்கு அவசியம்தானா என்றெல்லாம் யோசிப்பதே இல்லை.

அனுபவி ராஜா அனுபவி!

சிக்கனத்தை மறந்து செலவு செய்ய நாம் தயாராகிவிட்டதே இதற்கு காரணம். நாம் எப்படி இருந்தோம், இன்று நம் நிலை என்ன, எதிர்காலம் என்ன என்பது எல்லாம் நமக்கு தெரிகிறது. ஆனால், அதற்கேற்றார்போல நம் செலவுகளைத் திட்டமிட யாரும் தயாரில்லை. கம்பெனிகளில் தரப்படும் கிஃப்ட் வவுச்சர்கள், சொடக்சோ பாஸ்கள், ஃபுட் கார்டுகள் ஆகியவற்றை நீங்கள் ஆடம்பர ஓட்டல் மற்றும் மால்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆனால், ஒருமுறை அவற்றுக்கு நீங்கள் அடிமையாகிவிட்டால் அதோடு முடிந்தது உங்கள் கதை. அமெரிக்கா எப்படி இந்த கன்ஸ்யூமரிஸத்தினால் கெட்டதோ, அதே நிலைக்கு இந்தியாவும் கொஞ்சம் கொஞ்சமாய் தள்ளப்பட்டு வருகிறது. எனவே, நம் செலவுகளைக் கொஞ்சம் ஆராய்ந்து செய்தால், இந்த வலையிலிருந்து எளிதில் வெளிவந்து விட முடியும்.

நல்ல மொபைல் வாங்குவது தவறா என்று நீங்கள் கேட்கலாம். தவறில்லை. ஆனால், செலவுகளைப் பொறுத்தமட்டில் நமக்கு ஒழுக்கம் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் சம்பாதிப்பவர் மட்டுமே இதைச் செய்தால் போதாது. செலவு செய்பவர்களும் இதனைப் புரிந்துகொண்டு செலவு செய்ய வேண்டும்.

முதலீட்டிலும் அசட்டுத்தனம்!

சரி, செலவு செய்வதில்தான் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், முதலீடு, சேமிப்பு உள்ளிட்டவைகளிலும் அசட்டுத்தனமாகவே இருக்கிறார்கள். உடம்புக்குப் பிரச்னை என்றால் டாக்டர், உரிமைக்குப் பிரச்னை என்றால் வழக்கறிஞர், மனதுக்குப் பிரச்னை என்றால் மனநல ஆலோசகர் எனப் பார்க்கிறோம். ஆனால், பணப் பிரச்னைக்கு யாரை அணுகுகிறோம்? நாம் எடுக்கும் நிதி சார்ந்த முடிவுகளுக்கு யாரிடம் ஆலோசனை கேட்கிறோம்?

ஒருவர் எப்போதுமே தன்னிடம் உபரியாகவோ, கூடுதலாகவோ உள்ள பணத்தை எஸ்ஐபி, இன்ஷூரன்ஸ் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பங்கு முதலீடு, என நமது முதலீட்டு திட்டங்களைத் திட்டமிட வேண்டும். ஏனெனில் ரிட்டயர்ட்-ஆனபிறகு 30 வருடங்களுக்கு வருமானம் இல்லாமல்தான் நாம் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

இன்று விற்கும் விலைவாசிக்கு வருமானம் இல்லாமல் வாழ்வது, பெற்ற குழந்தைகளாகவே இருந்தாலும் இன்னொருவரைச் சார்ந்து வாழ்வது போலத்தான். அப்போது மருந்துச் செலவு, உணவுச் செலவு என்று இப்போது இருப்பதைக் காட்டிலும் அதிக செலவுகள் இருக்கும். அதையெல்லாம் சமாளிக்க முடியாமல் அந்தக் குடும்பம் அவதிக்குள்ளாகும். அது உறவுகளிலும் பிரச்னைகளை உண்டாக்கும். இதற்கெல்லாம் காரணம் ஒவ்வொருவரும் தங்கள் இளமைக் காலத்தில் செய்யும் ஆடம்பர செலவுகளும், எடுக்கும் தவறான நிதி சார்ந்த முடிவுகளும் தான். இதைத்தான் நிதித் தற்கொலை என்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் பணமில்லாமல் வாழ்வது, நடைப்பிணமாக இருப்பதற்கு சமம். இப்போது இருக்கும் நிலையே நாளையும் இருக்கும் என்பது நிச்சயமில்லை எனும்போது எதிர்காலத்துக்கான முதலீடுகளை அதற்கேற்றார் போல் அதிக ரிட்டர்ன் வரும் வகையில் திட்டமிட வேண்டும். மேலும், முதலீடுகளைப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு இப்போதே சொல்லிக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், நாணயம் விகடன் போன்ற பத்திரிகைகளை படிக்க வேண்டும். நம் செலவுகளைச் சரியாகத் திட்டமிட வேண்டும். வேண்டாதவற்றைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மகிழ்ச்சி தரும் ஆடம்பர சந்தோஷங்களைத் தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவதை முடிந்தவரைத் தவிர்க்கவும். கடன் வாங்கும் சூழல் எனில், எதற்காக வாங்குகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்க வேண்டும். வீடு கட்ட அல்லது வாங்க கடன் வாங்கலாம். ஆனால், திருமணம், கார் வாங்க போன்றவற்றுக்குக் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு முன்கூட்டியே தங்களுடைய முதலீடுகளைத் திட்டமிட வேண்டும்.

நிதி குரு அவசியம்!

உடல்நலம் சரியில்லை என்றால் நமக்கென ஒரு டாக்டர் இருக்கிற மாதிரி, நமக்கு வரும் பிரச்னைகளுக்கு ஆலோசனை பெற ஒரு வழக்கறிஞரை வைத்திருக்கிற மாதிரி, நம்முடைய நிதி சார்ந்த விஷயங்களுக்கு  ஒரு நிதி குரு வேண்டும். நம்முடைய எதிர்கால நிதித் தேவை என்ன, எவ்வளவு பணம் எப்போது தேவை போன்றவற்றை நம் சக்திக்கேற்ப திட்டமிட ஒரு ஆலோசகர் அவசியம். மேலும், அனைவருமே சுயமாக நிதி சார்ந்த விஷயங்களைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு நாளுக்கு அரை மணி நேரம் தாராளமாக ஒதுக்கலாம்’’ என்று கூறி முடித்தார்.

நாம் எடுக்கும் முடிவுகள்தான் நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவையாக உள்ளன. நிதி மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களை எல்லோரும் அறிந்திருப்பது மிகவும் அவசியம். எனவே, நிதி ஆலோசகர்கள் மூலமும், நிதி சார்ந்த செய்திகளைப் படிப்பதன் மூலமும் சரியான முதலீடுகளை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து முதலீடு செய்து நிதித் தற்கொலைகளை எளிதில் தவிர்த்திடலாமே!


வங்கிகளுக்கு எந்த உரிமையும் இல்லை!

- மல்லையா அதிரடி


இந்திய வங்கிகளில் ஏறக்குறைய ரூ.9000 கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டாமல் லண்டனுக்குப் போய் பதுங்கிக் கொண்டார் விஜய் மல்லையா. அதைத் தொடர்ந்து நீதிமன்றமும் அமலாக்கத் துறையும் அவர் மீது பிடி வாரண்டும், அவரது பாஸ்போர்ட் முடக்கமும் செய்துள்ளது. இந்த நிலையில், ஐடிபிஐ வங்கி வழக்கில் ரூ.1,590 கோடியைத் திருப்பித் தருவதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார் மல்லையா.

இதற்கு வங்கிகள் முடக்கியிருக்கும் அவரது சொத்துக்கள் அனைத்தையும் விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார். அவருடைய வெளிநாட்டு சொத்துக்களைப் பற்றிய விவரங்களைக் கடன் கொடுத்த வங்கிகள் கேட்டிருந்த நிலையில், ‘வங்கிகளுக்கு என் வெளிநாட்டு சொத்துக்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் உரிமை இல்லை’ என்று மல்லையா கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick