இனி மொபைல்தான் உங்கள் வங்கி!

பணப் பரிவர்த்தனையில் புதிய புரட்சி!ஜெ.சரவணன்

ருகாலத்தில் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டுவந்த செல்போன்கள், செய்தி அனுப்புவது, ஆடியோ, வீடியோ, இணையம் என்று வளர்ந்து இன்று பொருட்கள் வாங்க, விற்க மற்றும் கட்டணம் செலுத்த, பணப் பரிவர்த்தனை செய்ய என மாபெரும் வளர்ச்சி கண்டுவிட்டது.

ஸ்மார்ட்போன்கள் கொண்டுவந்த இந்தப் புரட்சியின் சமீபத்திய சாதனை ‘மொபைலே வங்கியாக செயல்படும்’ என்பதுதான்.  

ஒரு ஸ்மார்ட் போன், அதில் இணைய வசதி இருந்தால் போதும், வங்கிகளுக்குச் செல்லாமல் எளிதில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். இந்த வசதியை வங்கிகளும், தனியார் இ-வாலட் நிறுவனங்களும் செய்துவந்த நிலையில், இதனை அனைவருக் கும் ஏற்றபடி பாதுகாப்பானதாக  மாற்றியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

ஏற்கெனவே இந்தியாவில் மொபைல் மூலம் நடக்கும் வங்கிப் பரிவர்த்தனைகள் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் 30 கோடி பேர் மொபைலில் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள். அதில் ஸ்மார்ட் போன் பயன்படுத்து வோர் 20 கோடி பேர். கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனை அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 82% அதிகரித்துள்ளது. ஆனாலும், இதுவரை மொபைல் பேங்கிங் என்பது எல்லோரும் விரும்பும் விஷயமாக இல்லாமலே இருந்தது. காரணம், நம் பணம் பாதுகாப்பாக சென்று சேருமா என்கிற பயம்தான். தவிர, நம்மைப் பற்றிய தகவல்கள் திருடு போய்விடுமோ என்கிற அச்சமும் இருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் ‘யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்’ என்ற ஒருங்கி ணைந்த பரிவர்த்தனைக்கான மொபைல் செயலியை (App) உருவாக்கியது. இது ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டு, கவர்னர் ரகுராம் ராஜனால் சமீபத்தில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது எஸ்பிஐ மற்றும் அதன் கீழ் உள்ள பத்து வங்கிகள் இந்த வசதியை அளிக்கத் தொடங்கி உள்ளன. இந்த வசதியை மற்ற வங்கிகளும் விரைவில் அளிக்கத் தயாராகி வருகின்றன.

இந்தப் புதிய செயலியை எப்படி பயன்படுத்துவது, இதனால் வாடிக்கையாளர் களுக்கு என்ன பயன், மேலும் இது ஏற்கெனவே உள்ள வங்கிச் செயலிகளிலிருந்து எந்த வகையில் வேறுபடுகிறது என்கிற கேள்வி களை நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payment Corporation of India - NPCI) அமைப்பின் இம்மீடியட் பேமென்ட் சர்வீஸ் துறையின் (IMPS - Immediate Payment service) தலைவர் ராம் ரஸ்தோகியிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“இந்த ஆப் விரைவான பரிவர்த்தனைக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.50-க்கும் குறைவாகவும், ரூ.1 லட்சம் வரைக்குமான கட்டணங்களை மிக எளிதாகவும் விரைவாகவும் அனுப்பலாம்.  இதன் மூலம் நமது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்.


இந்த ஆப்பின் இன்னுமொரு முக்கிய அம்சம், மூன்றாவது புதிய நபருக்கும் எளிதில் நாம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். ஏற்கெனவே உள்ள வங்கிப் பரிவர்த்தனை சேவை களில் ஒருவருக்கு பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், முதலில் அவரை நமது இணைய வங்கி பரிவர்த்தனைப் பயனாளராக இணைக்க வேண்டும். பின்பு அவருடைய வங்கிக் கணக்கு எண், வங்கியின் கிளை மற்றும் ஐஎப்எஸ்சி குறியீடு ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். அதன்பிறகே நம்மால் அவருடைய கணக்குக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும்.

ஆனால், இந்த யுபிஐ ஆப் பினால் மேற்சொன்ன விஷயங்கள் எதுவும் இல்லாமல், யாருக்கு பணப் பரிமாற்றம் செய்ய வேண்டுமோ, அவரும் அந்த செயலியில் இருக்கும் பட்சத்தில் அவருக்கென்று ஒரு தனி அடையாள எண் இருக்கும். அந்த அடையாள எண்ணை வைத்து பணத்தை எளிதாக அனுப்ப முடியும்.

பயன்படுத்துவது எப்படி?

ஸ்மார்ட் போனும் வங்கிக் கணக்கும் உள்ளவர்கள், கூகுள் ப்ளேஸ்டோரில் உங்கள் வங்கியின் யுபிஐ செயலியைத் தரவிறக்கம் செய்த பின்னர், அதில் உங்கள் வங்கிக் கணக்கை தேவையான தகவல்களை உள்ளிட்டு இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போது உங்களுக் கென தனியாக ஒரு அடையாள எண் (Virtual Identification number) உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்குப்பின் உங்களுக்கான ரகசியப் பின் (pin)எண் ஒன்றையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆதார் எண்ணையும் அதனுடன் இணைக்க வேண்டும்.
முதலில் நாம் பணம் அனுப்ப நினைக்கும் ஒருவரது தனி அடையாள எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் அனுப்ப வேண்டிய தொகையைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் பணப் பரிமாற்றத்தை உறுதி செய்ய உங்கள் ரகசிய மொபைல் பின் எண் கேட்கப்படும். அதைக் கொடுத்ததும் பயனாளரின் வங்கிக் கணக்குக்குப் பணம் சென்றுவிடும்.

மேலும், இந்த ஆப்பை வழக்கமான கட்டணங்களைச் செலுத்த பயன்படுத்தும் அதே நேரத்தில், நண்பா்களுக்கு இடையிலும் மிக எளிதாக பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இந்த ஒரு ஆப், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் வாலட் போன்றவற்றின் வழியே செய்யும் அனைத்துப் பரிவர்த் தனைகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது.

கூடுதல் கட்டணம் உண்டா?

இதுவரை அனைத்து ஆன்லைன், மொபைல் மற்றும் நெட் பேங்கிங் பரிவர்த்தனை களுக்கும் தனியே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால்தான் பலரும் இதை பயன்படுத்த முன்வரவில்லை.  இதனால் இந்த பேமென்ட் சேவைகள் அதன் இலக்கை அடையவில்லை.

இதற்கும் இந்த புதிய பேமென்ட் வசதியில் தீர்வு காணப்பட்டுவிட்டது. இந்தப் புதிய யுபிஐ பேமென்ட் திட்டத்தில், ரயில் பயணக் கட்டணம், மின்சாரக் கட்டணம் போன்ற எந்தவொரு அரசு மற்றும் அரசு சார் அமைப்பு களுக்குச் செலுத்தும் கட்டணங் களுக்கு, சர்சார்ஜ், சர்வீஸ் சார்ஜ் போன்ற எந்தவொரு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

வங்கிகளுக்கிடையே பணப் பரிமாற்றம் செய்வதற்கும் கூடுதல் கட்டணம் ஏதுமில்லை. ஆனால் தனியார் மற்றும் வர்த்தக ரீதியான பரிவர்த்தனைகளுக்கும் இந்தக் கூடுதல் கட்டணங்களை விலக்குவது குறித்த எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை’’ என்றார்.

தனி வாலட்டுகளுக்கு வேலையில்லை!


இன்றைக்கு பேடிஎம், ஆக்சி ஜன் போன்ற தனி வாலட்டுகள் மூலமாக  மொபைல் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம்  என்றாலும்  முன்கூட்டியே நாம் பணத்தைப் போட்டு வைக்க வேண்டும். அந்தப் பணத்தைக் கொண்டு ஏதாவது ஒரு பொருளை வாங்க முடியுமே தவிர, திரும்ப பணமாக எடுக்க முடியாது. இதன் காரணமாகவே பலரும் இதை விரும்பவில்லை. 

ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய ஆப் ஏறக்குறைய ஒரு மொபைல் வங்கியாகவே செயல்படுகிறது. வாலட்களில் செய்யும் அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் இதன் மூலமே செய்துகொள்ள லாம். அவ்வளவு ஏன், நண்பர் களுடன் டீ குடித்தால்கூட, அந்தக் கடையின் கணக்குக்கு மொபைல் மூலமே பணம் செலுத்திவிடலாம்.

பாதுகாப்பு முதன்மை சிறப்பம்சம்!

மொபைல் மூலம் பணப் பரிவர்த்தனை செய்கிறவர்கள் பெரும்பாலும் தங்களின் பொபைலில் வைஃபை மூலமே இணையத்தைப் பயன்படுத்து கிறார்கள். அந்தச் சமயங்களில் நம் வங்கிக் கணக்கு தொடர் பான விவரங்கள் திருடு போக வாய்ப்புள்ளது. அது மாதிரி  பிரச்னை இந்த ஆப்பில் இருக்காது என்கிறார்கள். இதில் முக்கிய தகவல்களை ஒரே ஒருமுறை  (One time process) உள்ளீடு செய்தாலே போதும். எனவே, தகவல்கள் திருடு போவது பெரும்பாலும் நடக்க வாய்ப்பில்லை. மேலும், இந்தச் செயலியின் செயல்பாடுகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருக்கும் என்பதால் தொடர்ந்து அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ஆனாலும் உஷார்!

மொபைலைப் பொறுத்தவரை, எப்போது வேண்டுமானாலும் தொலைந்து போகவும், திருடு போகவும் வாய்ப்புள்ளது.

அந்தச் சமயங்களில் உங்கள் மொபைலில் லாக் பேட்டர்ன் அல்லது பாஸ்வோர்ட்  இல்லாவிட்டால் எளிதில் உங்களைப் பற்றிய  விவரங்களை மூன்றாம் நபர் திருடிவிட முடியும். எனவே, எப்போதும் ஸ்மார்ட் போன் களில் உள்ள செக்யூரிட்டி ஆப்ஷன்களைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

அதே சமயம், நீங்கள் பயன்படுத்தும் பேமென்ட் ஆப்களைப் பெரும்பாலும் பேமென்ட் செய்யும்போது மட்டும் லாக் இன் செய்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் லாக் அவுட்டிலேயே வைத்துக் கொள்வதன் மூலம் தகவல்கள் திருடு போவதைத் தவிர்க்கலாம்.

இருந்த இடத்திலிருந்தே பைசா செலவில்லாமல் பணத்தை அனுப்பவும், பெறவும் உதவும் இந்த ஆப்பினை கூடிய விரைவில் எல்லா வங்கிகளும் கொண்டுவர வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick