மக்களை ஏமாற்றும் விளம்பரங்கள்: நடிகர், நடிகைகளுக்கு சிறை தண்டனை சரியா?

ஒரு பிரபலம் நடிப்பதாலேயே அந்த பொருள் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடுகிறதுசோ.கார்த்திகேயன்

ச்சின் டெண்டுல்கர் இரு சக்கர வாகன  விளம்பரத்தில் நடிக்கிறார். ஆனால், உண்மையில் சச்சினுக்கு இரு சக்கர வாகனமே ஓட்ட தெரியாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

பொதுமக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது நுகர்வோர்கள் மத்தியில் வரபேற்பையும், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிரடித் திட்டம்!

இதுவரை இந்தியாவில் வெளியாகும் விளம்பரங் களுக்குக் கட்டுப்பாடுகள் என்பதே இல்லாமலே இருக்கிறது. யார் வேண்டு மானாலும் எதை வேண்டு மானாலும் சொல்லலாம் என்கிற நிலையே இருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரம்  இருந்தால், அந்த விளம்பரம் குறித்து இந்திய விளம்பர தர கவுன்சிலுக்கு (ஏ.எஸ்.சி.ஐ) புகார் அனுப்பலாம். புகார் உண்மை என்று தெரியவந்தால், அந்த விளம்பரத்தை நாளிதழ், டிவி உள்பட அனைத்து ஊடகங் களிலும் வெளியிடத் தடை செய்யப்படுகிறது.

ஆனால், அதற்குள் அந்த விளம்பரம் பட்டித்தொட்டி எல்லாம் சென்றிருக்கும். அதன் மூலம் அந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனமும் லாபம் சம்பாதித்திருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்க பரிந்துரைப்பது குறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அதிரடியாகத் திட்டமிட்டு வருகிறது.

இது பற்றி பிராண்ட்காமின்  ஸ்தாபகரும் சி.இ.ஓ.வும்,  பிராண்ட் துறையில் முக்கியமான நிபுணருமான ஸ்ரீதர் ராமனுஜமிடம் கேட்டோம்.

“இந்தியாவில் வெளியிடப் படும் விளம்பரங்களை எல்லாம் இந்திய விளம்பர தர கவுன்சில் (ஏ.எஸ்.சி.ஐ) என்ற ஒழுங்குமுறை அமைப்பு கண்காணித்து வருகிறது. என்றாலும் இந்த அமைப்பினால் தவறான, மக்களை ஏமாற்றும் வகையில் உள்ள விளம்பரங்களைத் தடை செய்ய முடியுமே ஒழிய, அதில் நடிக்கும் பிரபலங்களுக்கு   தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க முடியாது. ஏனெனில் இது ஒரு தன்னிச்சை யான அமைப்பு. இந்த நிலையில், மக்களை ஏமாற்றும் வகையில் உள்ள விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு விதிமுறைகள் வகுப்பது வரவேற்கத் தக்கதே.

மேனி பளபளக்க!

நம் நாட்டில் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ள  விளம்பரங்கள் ஏராளம். ஒரு பிரபலம் நடிப்பதாலேயே அந்த பொருள் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடுகிறது. ஒரு சிகப்பழகு ஸ்கீரிமை பயன்படுத்தினால் ‘சில  வாரங்களில் உங்கள் மேனி பளபளவென்று மாறும்’ என்று விளம்பரம் செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பானத்தை குடித்தால் “உங்கள் குழந்தை டபுள் வளர்ச்சி அடையும்” என தவறாகவே விளம்பரம் செய்கின்றனர். இவ்வாறு நுகர்வோர்களை ஏமாற்றும் வகையில் விளம்பரம் செய்வது  சரியில்லை

அமெரிக்காவில் அப்படி..!

அமெரிக்காவில் எந்தவொரு பிரபலமாக இருந்தாலும் ஒரு காரை விளம்பரப்படுத்துகிறார் எனில், அந்த காரை அவர், ஓட்டிப் பார்க்க வேண்டும். அதன்பின் அந்த கார் எப்படி இருந்தது என்று அந்த பிரபலம் கூறுவதன் அடிப்படையிலேயே அந்த காரை விளம்பரம் செய்வார்கள். ஆனால், இதுபோன்ற   நடைமுறை இந்தியாவில் கடைபிடிப் பதில்லை.

சச்சினுக்கு தெரியாது!

சச்சின் டெண்டுல்கர் இரு சக்கர வாகன  விளம்பரத்தில் நடிக்கிறார். அதனால் அவர் ரசிகர்கள் அதை வாங்குகிறார்கள்.  இதனால் அந்த இரு சக்கர வாகனத்தின் விற்பனை அதிகளவில் நடக்கிறது. ஆனால், உண்மையில் சச்சினுக்கு இரு சக்கர வாகனமே ஓட்ட தெரியாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? பைக் ஓட்ட தெரியாத ஒருவரை விளம்பரத் தூதராக நியமித்து அவர், இந்த பைக் ரொம்ப நல்ல பைக்.. என விளம்பரம் செய்வது எல்லாம் மக்களை ஏமாற்றும் செயலே.

சரியான முடிவா..?

ஆனால், பிரபலங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரங்களில் நடித்தால் சிறை தண்டனை தருவது  சரியான முடிவாக இருக்காது. இது குறித்து நன்கு விவாதித்து அதன்பின்னர் முடிவு செய்ய வேண்டும். பிரபல நடிகைகள் சொல்கிறார் என்ப தற்காக அழகு சாதனப் பொருட்களை வாங்குகிறோம். அதற்காக அவர்களை சிறைக்கு அனுப்புவது எல்லாம் நிச்சயம் சரியாக இருக்காது.

இனி பிரபலங்களுக்கு பிரச்னை!


ஒரு விளம்பரத்துக்கு ரூ.5  கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் பிரபலங்களுக்கு ரூ50  லட்சம் அபராதம் ஒரு பெரிய தொகையாக இருக்காது.  தற்போதைக்கு பிரபலங்களுக்கு அபராதம் மட்டுமே விதிப்பது நல்லது. ஆனால், இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் இனி பிரச்னையில் சிக்க வாய்ப்புண்டு. அவர்கள் இனி கொஞ்சம் கவனமாக இருப்பது மிக அவசியம்” என்றார்.

சிறை தண்டனை கூடாது!

இந்த சர்ச்சை பற்றி நேச்சுரல் நிறுவனத்தின் சி.இ.ஓ. சிகே குமரவேலிடம் கேட்டோம்.

‘‘நடிகர், நடிகைகளுக்கு நடிப்பதுதான் தொழில். ஒரு பிரபலம் ஒரு விளம்பரத்தில் நடிக்கிறார் என்றால் அது அந்த பொருளை மார்க்கெட் செய்வதற் கான வழி. அதற்காக அந்த நிறுவனத்தின் கணக்குவழக்கு களை பார்த்த பின்னர்தான் விளம்பரத்தில் நடிக்க முடியும் என்றால் எப்படி? எனவே,  நடிகர் களுக்கு அபராதமும் விதிக்கக் கூடாது, சிறை தண்டனையும் வழங்கக் கூடாது’’ என்றார்.

சிக்கினார் தோனி!

அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அமர்பாலி எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக தோனி இருந்தார். இந்த அமர்பாலி நிறுவனம் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மக்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுப்பபட்டது. ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் மின்சாரம் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்படவில்லை என ட்விட்டரில் தோனிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த  நிறுவனத்தின் விளம்பரத் தூதரர் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். 

தப்பிக்க முடியாது!

விளம்பரங்கள் விஷயத்தில் பிரபலங்களையும் நிறுவனத்தை யும் காரணம் காட்டி, நுகர்வோர்கள் தப்பித்துவிட முடியாது. நிறுவனங்கள் ஒரு பொருளைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக விளம்பரப்படுத்தினால்  அது எப்படி சாத்தியம் என்று சிந்திக்க வேண்டும்.

மத்திய அரசாங்கம் இப்போது கொண்டுவரவிருக்கும் அதிரடி நடவடிக்கைகளால் நுகர்வோரை ஏமாற்ற நினைக்கும் விளம்பரங்கள் குறையும். என்று எதிர்பார்ப்போமாக!

ஆன்லைன் சர்வே

நடிகர், நடிகைகளுக்கு சிறை தண்டனை!  சரியா, தவறா?

பொதுமக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்குவது குறித்து வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஆன்லைனில் சர்வே ஒன்றை நடத்தினோம். இந்த சர்வே முடிவுகள் இதோ...

தெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்!

இது குறித்து வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று வாசர்களிடம் கேட்டதற்கு, ‘‘இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. எனினும் இது குறித்து மேலும் விவாதித்து அமல்படுத்த லாம்; அவசரகதியில் தனிப்பட்ட நபர்களை தண்டித்துவிடக் கூடாது; நாம் வாங்கும் பொருட்களின் தரம் பற்றி நாம்தான் தெரிந்துகொள்ளவேண்டும்; விளம்பரங்களை நம்பி ஏமாறும் மக்களுக்கு இந்த சட்டம் பாதுகாப்பானது; நல்லது கெட்டது நமக்குதான் தெரிய வேண்டும்; தப்பு யார் செய்தாலும் தப்புதான்; பொய்யான தகவலை சொன்ன உரிமையாளர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்’’ என்று சொல்லி இருந்தனர்.

இந்த சர்வேயில், 54% பேர் சிறை தண்டனை விதிப்பது சரி என்றும், 76% பேர் பிரபலங்களை மட்டுமல்லாது உரிமையாளரையும் சேர்த்து தண்டிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர்.  என்னதான் தனக்குப் பிடித்த பிரபலமாக இருந்தாலும் தன்னை ஏமாற்றும்பட்சத்தில் அவர்களுக்கு  நிச்சயமாக  தண்டனை தரவேண்டும் என்பதே வாசகர்களின் கருத்தாக உள்ளது.


புகார் சொல்லுங்க!

இன்றைய நவநாகரீக உலகில் புகார் சொல்வதற்கு கூட எளிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய விளம்பர தர கவுன்சில் (ஏ.எஸ்.சி.ஐ) புகார் அளிப்பதற்காகவே +91 77100 12345 எனும் வாட்ஸ்அப் நம்பரையும், ASCIonline எனும் பெயரில் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனையும் வெளியிட்டுள்ளது. நுகர்வோர்கள் இதன் மூலம் எந்த ஒரு நிறுவனம் வெளியிடும் விளம்பரமாக இருந்தாலும், அந்த விளம்பரத்தை ஏ.எஸ்.சி.ஐ-க்கு தெரியப்படுத்தலாம். இந்த அமைப்பு மக்களை ஏமாற்றும் வகையில் அந்த விளம்பரங்கள் அமைந்தால் அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்.


‘‘நடிகர்களைத் தண்டிப்பது மகா தவறு!’’

- நடிகர் ராதாரவி


“நகைக்கடை, துணிக்கடை விளம்பரத்தில் நடிக்கத்தான் முடியும். அதற்காக அந்த துணிக்கடையில் உள்ள துணியை ஆராய்ந்து பார்த்தா விளம்பரத்தில் நடிக்க முடியும்? ஒரு வேட்டி விளம்பரத்தில் நடிக்கிறோம். அந்த வேட்டி கிழிந்துவிட்டால், அதற்காக விளம்பரத்தில் நடிக்கக்கூடாது என்று சொன்னால் எப்படி? ஒரு நகைக் கடை விளம்பரத்தில் ஒரு நடிகர் நடிக்க வேண்டுமென்றால், செய்கூலி, சேதாரத்தைப் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டுதான் நடிக்க வேண்டுமென்றால் எப்படி?

நாங்கள் டாஸ்மாக்-க்கு ஆதரவாக நின்று மது அருந்துவது நல்லது என்று விளம்பரத்தில் நடித்தோம் என்றால் அது தவறு. அதற்காக  எங்களை கைது செய்யலாம். ஆனால், நாங்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களுக்குத்தானே விளம்பரங்களில் நடிக்கிறோம். எங்களுக்கு பிழைப்பே நடிப்பதுதான். எங்களுக்கு நடிக்க மட்டும்தான் தெரியும்.

ஒரு விளம்பரத்தில் தவறான கருத்து சொல்லப்பட்டிருக்கிறது எனில் அதை எழுதிய ஸ்கிரிப்ட் ரைட்டர், இயக்குநர் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரை தண்டிக்காமல், பிரபலங்களை மட்டும் ஏன் தண்டிக்க வேண்டும்? பிரபலங்களுக்கு அபராதமோ, சிறை தண்டனையோ விதிப்பது மகா தவறு. நடைமுறையில் சாத்தியமாகாததை சட்டமாக கொண்டு வரக்கூடாது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick