‘உறுதியான’ லாபம் தரும் ஃபிட்னஸ் பிசினஸ்!

த.சக்திவேல்

ப்போதெல்லாம் இரவில் தூங்குவதற்கு முன்பும், தூங்கி எழுந்தவுடன் காலையில் நாம் கண் விழிப்பதும் ஸ்மார்ட் போனில்தான்.

அலுவலக வேலைகளை கம்ப்யூட்டரில் உட்கார்ந்தபடியே செய்துவிட்டு, மீண்டும் செல்போனில் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று பொழுதைக் கழிக்கிறோம்.   அது மட்டுமா, நம்முடைய துணிகளை துவைப்பதிலிருந்து பாத்திரங்களைக் கழுவுவது வரை பல வேலைகளைச் செய்ய இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் உடல் உழைப்பு என்பதையே நாம் மறந்துவிட்டோம். இதனால்தான் இன்றைக்கு அதிக சர்க்கரை நோயாளிகளை கொண்ட நாடாக நம் இந்தியா ஆகியிருக்கிறது.   

சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல் பெருக்கம் என பல விதமான பிரச்னைகளுக்கு ஒரு முக்கியமான தீர்வாக இருக்கிறது உடற்பயிற்சிக் கூடங்கள் என்று சொல்லப்படும் ஃபிட்னஸ் சென்டர்கள். காலையில் எழுந்து வாக்கிங் போனால் போதாதா, எதற்கு இந்த ஃபிட்னஸ் சென்டர்களுக்குப் போக வேண்டும் என்று கேட்கலாம். உடல் எடையைக் கொஞ்சம் குறைக்க மட்டுமே வாக்கிங் உதவும். ஆனால், உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமெனில்,  உடற்பயிற்சியை சரியான முறை யில் பயிற்சியாளரின் வழிகாட்டு தலின்படி செய்ய வேண்டியது அவசியம். 

சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமல்ல, ஓரளவுக்கு சிறிய நகரங்களிலும் இன்றைக்கு பெரும்பாலான மக்கள் காலையிலும் மாலை யிலும் நேரம் ஒதுக்கி ஃபிட்னஸ் சென்டரை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டனர். அதனால் ஃபிட்னஸ் சென்டர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் டோனியிலிருந்து, வீராட் கோலி வரை ஃபிட்னஸ் சென்டர்களை நடத்தும் பிசினஸில் இறங்கிவிட்டனர்.

புதிதாக ஃபிட்னஸ் சென்டரை ஆரம்பிக்க வேண்டும் எனில், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், என்ன மாதிரியான உபகரணங்கள் வேண்டும், இதிலி ருக்கிற தொழில் வாய்ப்புகள் என்னென்ன என்பது பற்றி சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் டிரிபிள் ஸ்டார் ஜிம்மின் ஃபிட்னஸ் பயிற்சியாளர் சுரேஷ் பன்னீர்செல்வத்திடம் கேட்டோம். அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

‘‘இந்தக் காலத்தில் மக்கள் எல்லோரும் ஃபிட்னஸ் சென்ட ரைத்தான் தேடி ஓடுகிறார்கள். முந்தைய தலைமுறை மக்களிடம் கடின உழைப்பு இருந்தது. உடம்பும் ஃபிட்டாக ஆரோக்கிய மாக இருந்தது. ஆனால், இப்போது உடல் உழைப்பு செய்வதற்கு அதிக வாய்ப்பில்லை. அதனால் ஜிம்மை தேடி அதிக அளவில் மக்கள் வர ஆரம்பித்திருக்கின்றனர். ஃபிட்னஸ் பிசினஸும் நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.

ஃபிட்னஸ் சென்டரை ஆரம் பிப்பது ஒரு நல்ல முதலீடு ஆகும். ஒரே முறை முதலீடு செய்தால் போதுமானது. உங்கள் பொருளாதாரத்தைப் பொறுத்து, ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரைக்கும் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். மக்கள் நட மாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சுமார் 2000 முதல் 4000 சதுர அடி  அளவில் நல்ல காற்றோட்டம் உள்ள இடம் இருந்தாலே நம்மால் ஒரு நல்ல ஃபிட்னஸ் சென்டரை உருவாக்கிவிட முடியும். முதல் உதவிப் பெட்டி இருப்பது அவசியமானதாகும்.

உடற்பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். இன்றைக்கு எது அட்வான்ஸாக இருக்கிறதோ, மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதற்கு தகுந்த மாதிரியான நவீன உப கரணங்களை வாங்க வேண்டும். உபகரணங்களை விற்பவர்களை அணுகினாலே போதும் அவர் களே வந்து ஜிம்மில் உபகரணங் களை சரியான இடத்தில் வைக்க உதவி செய்வார்கள்.

நான் இந்த இடத்தில், இவ்வளவு சதுர அடியில், இவ்வளவு உபரகணங்களுடன் இந்தப் பெயரில் ஜிம் ஆரம்பிக்கப் போகிறேன் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பதிவு செய்து லைசென்ஸ் பெற்ற பிறகு தான் ஜிம்மை ஆரம்பிக்க முடியும். ஜிம் அசோசியேஷனில்  உறுப்பினராகிக் கொண்டால் நிறைய நன்மைகள் இருக்கிறது. குறிப்பாக மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் தமிழ்நாடு போன்ற போட்டிகள் நடப்பதை பற்றிய தகவல் பரிமாற்றங்கள்  மற்றும் உங்களின் நெட்வொர்க்கை விரிவாக்க ஜிம் அசோசியேஷன் உதவியாக இருக்கும். ஆனால், ஜிம் அசோசியேஷனில் உறுப்பினராக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. 

ஸ்குவாட் ஸ்டேஷன், பார் பெல்ஸ், பெஞ்ச் பிரஸ்,கேபிள்ஸ் அண்ட் புல்லீஸ் , தம்ப் பெல்ஸ், புல் அப் பார், ஹைபர் எக்ஸ்டென்சன் மெஷின், டிப்பிங் பார்ஸ், ஸ்மித் மெஷின் , ப்ரீச்சர் பெஞ்ச், லெக் பிரஸ் மெஷின், கால்ப் மெஷின் போன்ற உபகரணங்கள் நீங்கள் புதிதாக தொடங்கப்போகிற ஜிம்மில் அவசியமாக இருக்க வேண்டும்

ஃபிட்னஸ் சென்டர்களைப் பொறுத்தவரை, இன்டீரியர் என்பது முக்கியம். உடற்பயிற்சி செய்ய வருகிறவர்களுக்கு மனதை லயித்து பயிற்சி செய்கிற மாதிரி வண்ணங்களின் கலவை இருக்க வேண்டும். பயிற்சிக் கூடமும் ஓரளவுக்கு விஸ்தாரமாக இருக்க வேண்டும். ஒருவர் ‘ஒர்க்-அவுட்’ செய்யும்போது இன்னொருவர் மீது இடிக்கிற மாதிரி இருக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலே ஏசி செய்யப்பட்ட இடமாக அது இருக்க வேண்டும். ஏனெனில், ‘ஒர்க்-அவுட்’ செய்யும்போது சிலருக்கு அளவுக்கதிகமாக வியர்வை வழியும். இதனால் அவரால் நிம்மதியாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகும். தவிர, துர்நாற்றமும் வீசத் தொடங்கும். இதை தடுக்க வேண்டுமெனில், ஏசி அவசியம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக உடற்பயிற்சி செய்ய இடம் இருக்க வேண்டும்.

சென்னை போன்ற பெரிய மாநகரங்களில் வருடத்துக்கு சுமார் ரூ.12,000 லிருந்து ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். மாதக் கட்டணமும், ஆறு மாதக் கட்டணமும் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் வேலைக்கு ஆட்களை நியமித்தால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும், அதனால் உங்களின் தேவையைப் பொறுத்து கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம். ஃபிட்னஸ் சென்டர் ஆரம்பித்த புதிதில் சில மாதங்களுக்கு கட்டணத்தில் சலுகைகள் கொடுத்தால் நிறைய பேர் வருவார்கள். ஆரம்பத்தில் சரியான வகையில் ஃபிட்னஸ் சென்டரை விளம்பரம் செய்வது முக்கியமானது

ஃபிட்னஸ் பிசினஸை பொறுத்தவரை, ஒரு வகையில் நெட்வொர்க் பிசினஸ்தான். முதலில் பத்துப் பேரை வாடிக்கையாளர்களாகப் பிடித்தாலே போதுமானது. நாம் கொடுக்கிற பயிற்சி, உள் கட்டமைப்பு, உபகரணங்கள் தரமானதாக இருந்தால், அந்த பத்துப் பேருமே நமக்குத் தேவை யான புதிய வாடிக்கையாளர் களைப் பிடித்துக் கொடுத்து விடுவார்கள்.

இந்த பிசினஸில் இருக்கும் இன்னொரு சிறப்பம்சம், ஃபிட்னஸ் மற்றும் ஹெல்த் புராடக்ட்ஸை நாம் விற்பனை செய்யலாம். நம் ஃபிட்னஸ் சென்டரைப் பிடித்தவர்கள், நிச்சயம் இந்தப் பொருட்களை வாங்குவார்கள். இதன் மூலமும் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இந்த மாதம் 50 பேர் வருவார்கள். அடுத்த மாதம் 80 பேர் வரலாம் அல்லது 40 பேர் வரலாம். ஆனால், எப்போதுமே ஒரே மாதிரியான நிரந்தரமான வருமானம் இந்த பிசினஸில் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. என்றாலும்  தரமான சேவையை தொடர்ந்து தந்தால் வெற்றி நிச்சயம்’’ என்று முடித்தார்.

குறைந்த முதலீட்டில் ஒரு நல்ல பிசினஸ் செய்வோமா!

படங்கள்: பா.காளிமுத்து


டைம் இதழின் 100 முக்கிய மனிதர்கள்!

ஒவ்வொரு வருடமும் டைம் இதழ் உலகின் 100 முக்கிய மனிதர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான பட்டியலில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்ஸா, நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் சுந்தர் பிச்சை, ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களான பின்னி பன்சால், சச்சின் பன்சால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இந்தப் பட்டியலில் ஐஎம்எஃப் தலைவர் கிரிஸ்டின் லகார்டியும், சமீபத்தில் தனது நீண்ட கால கனவான ஆஸ்கர் விருது நனவாகிய மகிழ்ச்சியில் இருக்கும் லியனார்டோ டிகாப்ரியோவும் இடம்பெற்றுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick