ஜாலி டூர்! பணத்தைத் திரட்ட பக்கா வழிகள்!

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com

சுற்றுலா செல்ல யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால், பலரும் தொலைதூரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்லாமல் இருக்கக் காரணம், செலவுதான்.

மூன்று, நான்கு நாட்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்லவேண்டுமெனில் குறைந்தபட்சம் 10,000 ரூபாயாவது செலவு செய்யவேண்டி இருக்கிறதே என்று நினைத்து, பலரும் பக்கத்தில் உள்ள இடங்களுக்கு மட்டும் போகின்றனர். இதனால் குழந்தைகள் வெளி உலகம் தெரியாமலே வளர்கின்றனர். குடும்ப உறுப்பினர்களுக்கும் சுற்றுலா சென்றுவந்த உற்சாகமே இல்லாமல் போய்விடுகிறது.

சுற்றுலாச் செலவுகளைக் கண்டு பயப்படாமல், விரும்பும் இடத்துக்கு ஜாலியாக சுற்றுலா சென்றுவர ஒரே வழி, அதற்காகத் திட்டமிடுவதுதான். சுற்றுலா செல்வதற்குத் தேவையான பணத்தை எப்படித் திட்டமிட்டு சேர்க்கவேண்டும் என்பதை பார்ப்போம்.

ஆண்டுக்கு  ஒரு முறை தொலை தூரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதையே பலரும் விரும்புகின் றனர். இன்னும் சிலர், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா சென்றாலும் பரவாயில்லை, யாரும் செல்லாத இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஐந்து வருடம் என்றாலும் பரவாயில்லை, வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவர வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். எத்தனை மாதம் அல்லது ஆண்டு களுக்கு ஒருமுறை நீங்கள் சுற்றுலா செல்லப் போகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களின் திட்டமிடல் இருக்கும்.

குறுகிய கால சுற்றுலாவுக்குத் திட்டமிடல்!


பொதுவாக, பலர் இத்தகைய சுற்றுலாவையே மிக அதிகமாக விரும்புகிறார்கள். இந்தச் சுற்றுலா என்பது நீண்ட தூர பயணமாக இல்லாமல், தொடர்ச்சியாக சில நாட்கள் விடுமுறை கிடைக்கும் போது செல்வதாகும்.

உதாரணத்துக்கு, திருப்பதி, திருவண்ணாமலை, திருநள்ளாறு, மதுரை, குற்றாலம் போன்ற ஊர்களையும் அந்த ஊர்களுக்குச் செல்லும் வழியில் மற்றும் அந்த ஊர்களைச் சுற்றி உள்ள இடங் களையும் சுற்றிப் பார்ப்பதை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.  

இத்தகைய சுற்றுலாவுக்கு எப்படித் திட்டமிடுவது எனில், புதிய வருடம் ஆரம்பிக்கும்போதே எப்போதெல்லாம் அரசு விடுமுறை, பள்ளிகளுக்கு விடுமுறை என எத்தனை தினங்களுக்கு விடுமுறை சேர்ந்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் குடும்பத்தினருடன் தனியாக செல்லப் போகிறோமா அல்லது நண்பர்கள், உறவினர்களுடனும் சேர்ந்து போகப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

சுற்றுலா செல்லும் இடத்தில் என்னென்ன செலவுகள், கார், பஸ், ரயில், விமானம் எதன் மூலம் பயணிக்கப்போகிறோம் என்பதைத் தீர்மானித்து பட்ஜெட் போட வேண்டும். தனிநபர் அல்லது குடும்பத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டுப் பிரித்து அதற்கான குறுகிய கால முதலீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதற்காக தனியாக வங்கிச் சேமிப்புக் கணக்கில் தொகையை பிரித்து மாதம் அல்லது ஒரே தொகையாக சேமிக்கலாம் அல்லது வீட்டிலேயே சேமித்து வைக்கலாம். அல்லது குறுகிய கால சேமிப்புத் திட்டங்களில் சேமிக்கலாம்.  நமக்கு எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம்.

இந்தத் தொகையை வங்கிச் சேமிப்புக்  கணக்கில் போட்டு வந்தால், அதற்கு ஆண்டுக்கு 4 சதவிகித வட்டி கிடைக்கும். இதுவே மியூச்சுவல் ஃபண்டில் உள்ள லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்தால் 7% - 8% வருமானம் கிடைக்கும்.

3 - 5 வருடத்துக்கு ஒருமுறை சுற்றுலாத் திட்டமிடல்..!

நமது நாட்டில் எண்ணற்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன. பல சுற்றுலா ஸ்தலங்கள் வரலாற்றுச் சுவடுகளாக உள்ளன. பிரமிக்க வைக்கும் இயற்கை வாசஸ்தலங் களும் நிறையவே உண்டு. புண்ணியத் தலங்களுக்கு குறைவே இல்லை. இந்த இடங்களுக்குச் சென்றுவர வேண்டும் என்றால் குறைந்தது ஒரு வாரம் ஆகும். செலவும் அதிகமாகவே ஆகும்.

தூரம் மற்றும் பயண நாட்களை பொறுத்து செலவு இருக்கும். இதனை தோராயமாக கணக்கிட்டு, அந்த தொகை உங்களுக்கு 3 வருடம் கழித்து அல்லது 5 வருடம் கழித்த பிறகு தேவைப்படும் என்பதை முடிவு செய்து, அதற்கேற்ப மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

முதலீட்டை ஆரம்பிக்கும்முன், இன்றைய செலவைக் கணக்கில் எடுத்துக் கொண்டு முதலீட்டை செய்யக்கூடாது. நாம் மூன்று அல்லது ஐந்து வருடம் கழித்து சுற்றுலா செல்ல இருக்கிறோம் எனில், அப்போது போக்குவரத்துக் கட்டணம், சாப்பாட்டுச் செலவு, ஓட்டல், தங்கும் செலவு எல்லாம் அதிகரித்திருக்கும். இதற்கேற்ப விலைவாசி உயர்வையும் (பணவீக்க விகிதம்) கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஓர் இடத்துக்கு சுற்றுலா செல்ல இன்றைக்கு 50,000 ரூபாய் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆண்டுக்கு 6 சதவிகித விலைவாசி உயர்வு என்றால், மூன்று ஆண்டு கழித்து ரூ.60,000 இருந்தால்தான் சுற்றுலா சென்று வர முடியும். இதற்கு மாதம் சுமார் ரூ.1,800 முதலீடு செய்து வந்தால் போதும். (பார்க்க மேலே உள்ள அட்டவணை!)  

இத்தகைய முதலீட்டை 3 அல்லது 5 வருடத்துக்கு என்றால் வங்கி அல்லது தபால் அலுவலக ஆர்டியில் முதலீடு செய்து வரலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றிய அறிமுகம் உள்ளவர்கள் ஷார்ட் டேர்ம், மீடியம் டேர்ம், கார்ப்பரேட் பாண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். 

10 வருடத்துக்கு ஒருமுறை  சுற்றுலாத் திட்டமிடல்! 

வெளிநாடு சுற்றுலா என்பது அதிக செலவு வைப்பதாகும். தனிநபராக சென்றாலும், குடும்பத்துடன் சென்றாலும் செலவு அதிகமாகவே இருக்கும். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு செல்வதாக இருந்தால் முன்கூட்டியே பணம் சேர்த்து வைப்பது நல்லது.

இத்தகைய சுற்றுலா செலவுகளில் பயணக் கட்டணம் குறைவாக இருந்தாலும், தங்கும் ஓட்டல் செலவு, சாப்பாடு செலவு, சுற்றிப் பார்க்கும் செலவு அதிகமாக இருக்கும். இதனையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முதலீட்டைத் தொடங்க வேண்டும் (பார்க்க அட்டவணை).

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீண்ட காலம் முதலீடு செய்பவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் பேலன்ஸ்டு ஃபண்ட் என்கிற திட்டத்தை பயன்படுத்தலாம்.

ஆரம்பத்தில் இருந்தே இதுபோல நாம் திட்டமிட்டு செயல்பட ஆரம்பித்தால் போதும், சுற்றுலாச் செலவுகளைக் கண்டு நாம் பயப்பட வேண்டிய அவசியமே இருக்காது!

திருப்பதிக்கு சொந்தமான 1,300 கிலோ தங்கம் வங்கியில் டெபாசிட்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்க நகைகள் மட்டுமே ஆண்டுக்கு ஆயிரம் கிலோவுக்கு மேல். இந்த தங்க நகைகள் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு, அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் காணிக்கையாக கிடைத்ததில் இருந்து 1,311 கிலோ தங்கத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதற்கு முன்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 4,200 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்திருந்தது. ஆக மொத்தத்தில் 5,500 கிலோ தங்கத்தை திருப்பதி தேவஸ்தானம் மட்டுமே டெபாசிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick