பெஸ்ட் லாபம் தரும் இ-வேஸ்ட் பிசினஸ்!

ஜெ.சரவணன்

-கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் எலெக்ட்ரானிக் பொருட்களைப் பொறுத்தவரை புதிய புதிய தொழில்நுட்பங்களும், மாடல்களும் அப்கிரேட் செய்யப்பட்டுக்கொண்டே வருகிறது.

இதனால் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை அப்படியே குப்பையாகக் குவிக்கிறோம். அதுதான் இ-கழிவுகளாக மாறுகிறது. உலக அளவில் ஒரு நிமிடத்துக்கு  எட்டு டன் எடை அளவுக்கு இ-கழிவுகள் உருவாவதாக இது குறித்த ஒரு ஆய்வு சொல்கிறது. இந்த ஆய்வின் படி பார்த்தால், எதிர்காலத்தில் மக்கள் வாழத் தகுதியற்ற, குப்பைகளை கொட்டும் இடமாகவே இந்த பூமி மாறிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுநர்கள். 

ஆனால், இந்த இ-கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்கிறார் வினோத் குமார். கிரீன் வே இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் கழிவுகளை ரீசைக்கிள் செய்யும் பிசினஸை சிறப்பாக செய்து வருகிறார் அவர்.

“எப்பவும் வீணான பொருட் களிலிருந்து உருவாக்கப்படும் பிசினஸுக்கு நல்ல வரவேற்பும் லாபமும் இருக்கிறது. அதுவும் எலெக்ட்ரானிக் பொருட்களில் நிறையவே லாபம் சம்பாதிக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் எல்லோராலும் இதை செய்துவிட முடியாது. கழிவுப் பொருட்களை முடிந்த வரை ஏதோ ஓரு வடிவில் மீண்டும் பயனுள்ளதாக மாற்றுவதன் மூலம் சுற்றுச் சூழலுக்கும் நமக்கும், முக்கியமாக, எதிர்கால சந்ததியினருக்கும் பெரும் உதவியைச் செய்கிறோம்.

இ-வேஸ்ட் வகைகள்:

இன்று நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் எலெக்ட்ரானிக் பொருட்கள்தான். அவற்றில் கம்ப்யூட்டர், லேப்டாப் முதல் டேப்லட், போன் வரை ஏராளமானவை.   சுருக்கமாக, எதிலெல்லாம் பிராஸசர் உள்ள போர்டுகள் பயன்படுத்தப்படு கின்றனவோ, அவை அனைத்தும் எலெக்ட்ரானிக் பொருட்கள்தான். இவற்றைப் பயன்படுத்த முடியாமல் போனாலோ, பயன்படுத்த விருப்பம் இல்லாமல் கிடப்பில் போட்டாலோ அவை இ-வேஸ்ட்களாக மாறிவிடுகின்றன.

இந்த இ-வேஸ்ட், பிளாஸ்டிக்கை விடவும் ஆபத்தானது. எலெக்ட்ரானிக் பொருட்கள் அனைத்திலும் செமி கண்டக்டர்கள் உள்ளன. இதில் சிலிகான் எனும் பொருள் அதிகமாக இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.

உலக அளவில், வளர்ந்து வரும் நாடுகளிலேயே இந்த வகை கழிவுகள் அதிகமாக உள்ளன. வளர்ந்த நாடுகளில் இதை மறு சுழற்சி செய்வதற்கும் பத்திரமாக அப்புறப்படுத்துவதற்கும் பல தொழில்நுட்ப முறைகளை கையாள்கிறார்கள். அங்குள்ள மக்களும் மின்னணு பொருட்களை முடிந்தவரை கழிவுப் பொருளாக மாறாமல் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், வளர்ந்து வரும் நாடுகளிலோ இது குறித்து எந்த ஒரு விழிப்பு உணர்வும் இல்லாமல் இருக்கிறது. இதனால் குப்பை களோடு குப்பைகளாக இவற்றையும் கொட்டிவிடு கின்றனர். எலெக்ட்ரானிக் பொருட்களின் பேக்கிங்கில் குப்பையில் போட வேண்டாம் என்ற சிம்பள் பொறிக்கப்பட்டு இருப்பதை யாரும் அவ்வளவு அக்கறையுடன் கவனித்துப் பார்ப்பதே இல்லை. 

மேலும், இந்தியாவில் சீன உற்பத்தி பொருட்கள்தான் அதிகமாகக் குவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வாழ்நாள் திறன் மிகக் குறைவாக இருப்பதால் விரைவில் அவை கழிவுகளாகி விடுகின்றன.  

இது சீனாவுக்கு நல்ல பிசினஸ் வாய்ப்பாக அமைகிறது. அவை இந்தக் கழிவுகளை உலக நாடுகளில் இருந்து சேகரித்து, புதிய பொருட்களாக மாற்றி, மீண்டும் உலகம் முழுக்க விற்பனை செய்து பெரும் லாபம் சம்பாதித்து வருகிறது.

இந்தியாவில் இ- கழிவுகள்:

இந்தியாவில் எல்லோரும் வாங்கும் வகையில் எலெக்ட்ரானிக் பொருட்களின் சந்தைத் திட்டமிடப்படுவதால் இ-வேஸ்ட்கள் அதிகமாகவே சேர்கின்றன.  இதை மறு சுழற்சி செய்ய அரசுகள் இன்னும் தயாராகவில்லை.

சென்னையின் குப்பைகளைக் கொட்டும் இடங்களில் சராசரியாக பாதிக்கு பாதி இ-கழிவுகளே நிரம்பியுள்ளன. இவையும் மக்காத பொருட்கள் என்பதால், பிரச்னை நமக்குதான். ஏனெனில் எலெக்ட்ரானிக் பொருட்களில், லெட், மெர்குரி, கேட்மியம் போன்ற கனிமங்கள் உள்ளன. இவற்றை அப்படியே விட்டால் சுற்றுச்சூழல் ஆபத்தும் இருப்பதோடு, அவற்றை மீண்டும் உற்பத்தி செய்ய ஆகும் பணமும், மனித உழைப்பும் வீணாக செலவிட வேண்டியிருக்கும். அதனால் முடிந்தவரை மின்னணு பொருட்களின் உபயோகத்தைக் குறைப்பது, பயன்படுத்திய பொருட்களை வேறு வகையில் ரீயூஸ் செய்தல், கழிவுகளை ரீசைக்கிள் செய்தல் ஆகியவை அவசியம் செய்ய வேண்டும்.

ரீசைக்கிள் பிசினஸ் எப்படி?

இப்போது எல்லா இடத்திலும் கணினிதான். ஆனால்,  குப்பைக்குப் போகும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பெரும்பாலும் வீடுகளிலிருந்து தான் போகின்றன. நிறுவனங் களிலிருந்து இ-வேஸ்ட்டுகள் அதிக அளவில் குப்பைகளுக்குப் போவதில்லை. இ-வேஸ்ட் ரீசைக்கிள் பிசினஸுக்கு நிறுவனங்கள்தான் சரியான இடம்.

இ-வேஸ்ட் ரீசைக்கிள் செய்யும் பிசினஸுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி வாங்க வேண்டும். அதற்கும் ரீசைக்கிள் செய்யத் தேவையான தொழில்நுட்பம், இயந்திரங்கள், அதற்குப் பயன்படுத்தப்படும் வளங்கள் மற்றும் கழிவுகள் மேலாண்மை போன்றவை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இருக்க வேண்டும்.

கணினி போன்ற பெரிய எலெக்ட்ரானிக் பொருட்கள் பீஸ் கணக்கிலும், மற்ற உடைந்த எலெக்ட்ரானிக் பொருட்கள், மதர் போர்டுகள், ஒயர்கள், செமி கண்டக்டர்கள் போன்றவை எடைக் கணக்கிலும் எடுக்கப்படும். கணினி போன்றவை பீஸ் ஒன்று ரூ.400 முதல் ரூ.600-க்கும், மற்றவை கிலோ ஒன்று ரூ.40 முதல் ரூ50-க்கும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

எப்படி நடக்கிறது?

இந்த ரீசைக்கிள் பிசினஸ் மூலம் எடுக்கப்படும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உடைக்கப்பட்டு, பிளாஸ்டிக், ஒயர், போர்டு என வகை வகையாகப் பிரிக்கப்படும். பின்னர் அவை உருக்கப்பட்டு பிளாஸ்டிக் பொம்மைகள், குடங்கள் உட்பட பிளாஸ்டிக் பொருட்களெல்லாம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற கனிமங்கள் எடுக்கப்பட்டு அதற்கேற்ற உபயோகங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கவனிக்க வேண்டியவை!

இ-வேஸ்ட் நிர்வாகம் செய்வதைப்  பொறுத்த வரை, மாசுக் கட்டுப்பாடுதான் நோக்கம் என்பதால் அதில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும். கழிவு கசிவு, விபத்து போன்றவை நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏதேனும் நடக்கும் பட்சத்தில் உடனடியாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்து விளக்கம் பெற வேண்டும். இ-வேஸ்ட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல ‘நான் அப்ஜெக்சன் சர்ட்டிபிகேட்’ இருக்க வேண்டும். இ-வேஸ்ட் பொருட்களைக் கையாளுதல், பிரித்தல், மறு சுழற்சி செய்தல் என எதுவாக இருந்தாலும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள செயல்முறை களின்படிதான் செய்ய வேண்டும்.

முதலீடும் லாபமும்!


இந்த ரீசைக்கிள் தொழில்நுட்பம் கொண்ட நிலையத்தை அமைக்க ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை செலவாகும். அத்தகையப் பணம் படைத்தவர்கள் இந்தத் தொழிலை செய்யலாம். மாதத்துக்கு ரூ. 15 முதல் ரூ. 20 லட்சம் வரை வருவாய் பார்க்கலாம். இவ்வளவு பணத்தை முதலீடு செய்ய முடியாதவர்கள், இ-வேஸ்ட்களைச் சேகரித்து இது போன்ற ரீசைக்கிள் நிறுவனத்துக்கு தரும்  தொழிலையும் மேற்கொள்ளலாம். இவர்களின்  வீடுகளில் சென்று சேகரிக்க முடிந்தால் நல்ல லாபம் பார்க்கலாம். இ-வேஸ்ட் பிசினஸ் செய்ய குறைந்தபட்சம்  6 பேர் வரை பணியாட்கள் தேவைப்படும்” என்று முடித்தார்.

இ-வேஸ்ட் பிசினஸ்  நல்ல லாபம்  கொடுப்பதுடன்  சுற்றுச்சூழலைக் காக்கவும் உதவும். 

படங்கள்: தி.குமரகுருபரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick