வெற்றி தரும் இலக்கு நோக்கிய முதலீட்டுத் திட்டங்கள்!

சா.ராஜசேகரன் www.wisdomwealthplanners.com, நிதி ஆலோசகர், புதுச்சேரி

வேலைக்கு சேர்ந்தவுடனே அல்லது சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதே, நாம் பல மனக் கோட்டைகளை கட்டத் தொடங்கி விடுகிறோம். ஆனால், வருமானம் ஈட்டும் திறன் முடியும்போது அல்லது பணி ஓய்வு பெறும்போது எல்லாக் கனவுகளும் ஆசைகளும் நிறைவேறியதா என்று பார்த்தால், இல்லை என்றே பெரும்பாலும் பதில் வருகிறது.

இப்படி பல ஆசைகள் நிறைவேறாமல் போனதற்கு முக்கியக் காரணம், முறையான முதலீட்டைத் தேர்வு செய்யாததும், அப்படியே தேர்வு செய்திருந்தாலும் அதனை அந்தந்த இலக்குக்கான காலம் வரை தொடராததும்தான்.

முதலீட்டுக் குறிக்கோள் முக்கியம்!

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், முதலீட்டை இலக்கு இல்லாமல் மேற்கொள்வது கூடாது. உதாரணத்துக்கு, ஒருவர் பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் எந்தவொரு இலக்கும் இல்லாமல் முதலீடு செய்து வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த முதலீடு கொஞ்சம் நல்ல லாபத்தில் இருக்கும்போது, அல்லது வேறு  ஏதாவது தேவை ஏற்படும்போது, அந்த முதலீட்டை வெளியே எடுத்துவிடுவார். 

இந்த முதலீட்டையே தனது  பிள்ளையின் மேற்படிப்புக்கு என தனியே மேற்கொண்டு வருகிறார் என்று வைத்துக் கொண்டால், அவர் இடையில் அந்த முதலீட்டை திரும்ப எடுப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று சொல்லலாம். எனவே, இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதனை நோக்கி முதலீடு செய்தால்தான், அது நம்  கனவுகளை நிறைவேற்றுவதாக இருக்கும். 

இலக்கு முதலீட்டு வகைகள்!

இலக்குகள் பலவாக இருக்கலாம். தனி நபர் எனில்,  அவசர கால நிதி, பிள்ளைகளின் படிப்புச் செலவு, கல்யாணச் செலவு, கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற திட்டமிடல், சொந்த வீடு, கார், ஓய்வுக்காலம், சுற்றுலா, தொழில்முனைவோர் ஆவது  என முக்கியமான இலக்குகளின் பட்டியல் நீளும்.

ஸ்மார்ட் கோல் செட்டிங்!

இவற்றை நிறைவேற்ற வருமானம் ஈட்டத் தொடங்கிய காலத்திலேயே திட்டமிடுவது அவசியம். நம் இலக்குகளை அடைய நமக்கு தெளிவான முதலீட்டு வரைப்படம் தேவை. இதை ஆங்கிலத்தில் ஸ்மார்ட் கோல் செட்டிங் (SMART Goal Setting) என்பார்கள். இதில் ‘S' என்பது ‘Specific', அதாவது நமது இலக்கு தெளிவாகவும், உறுதியாக வும் இருக்க வேண்டும். M' என்பது  ‘Measurable", அதாவது நம் ஒவ்வொரு இலக்கும் இப்போது எப்படி இருக்கிறது என்று அளந்து பார்க்கிற மாதிரி இருக்க வேண்டும். ‘A’ என்பது ‘Achievable', அதாவது, இலக்கை எந்தவித முதலீட்டின் மூலம் நிறைவேற்றி கொள்வது. ‘R’ எனக் குறிப்பிடுவது ‘Realistic/Relevant’. அதாவது, இத்தகைய இலக்குகள் தாங்கள் ஈட்டும் வருமானத்துக்கேற்ப  இலக்கை அடையும் வகையில் இருக்க வேண்டும். ‘T’ என்பது  ‘Time Bond’, அதாவது எவ்வளவு காலத்துக்குள் தங்கள் இலக்கை அடைய வேண்டும் அல்லது நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவுகிற மாதிரி இருக்க வேண்டும்.

பலரும் இவ்வாறு  திட்டமிட்டு முதலீடு செய்யத் தொடங்கினாலும், அவர்களால் இலக்கை  அடைய முடியாமல் போவதற்கு முக்கிய காரணம், முதலீடு செய்யும்போது இருக்கிற மனப் பக்குவம், இலக்கினை அடையும் வரை இல்லாமல் போவதே!

ஆயுள், ஆரோக்கிய காப்பீடு அவசியம்!

இலக்கு நோக்கிய முதலீடு என்கிறபோது, அந்த முதலீட்டை ஆரம்பிக்கும்முன் முதலில் ஆயுள் காப்பீடு மற்றும் ஆரோக்கிய காப்பீடு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான், வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தாலும், குடும்பத்தின் முக்கிய இலக்குகளை அடைவதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்கும். அப்படி எடுக்காமல் போயிருந்தால், குடும்பத்தினரின் பாடு திண்டாட்டம்தான்.

மேலும், ஆரோக்கிய காப்பீடு இல்லை என்கிற நிலையில், வருமானம் ஈட்டுபவருக்கோ, குடும்பத்தினருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் சேமிப்பு / முதலீட்டின் பெரும்பகுதி காணாமல் போய்விடும். அப்போது இலக்கை அடைய செய்த முதலீடுகள் கரைந்துவிடும் அல்லது காணாமல் போய்விடும்.

முதலீட்டு வாய்ப்புகள்!

முதலீடு என்கிறபோது, வங்கி சேமிப்பு, அஞ்சலக சேமிப்பு,  சிட் ஃபண்ட் என பல எளிய திட்டங்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் அதிக வருமானம் கிடைக்காது என்பதோடு, பணவீக்க விகிதத்தை சமாளிக்கும் அளவுக்கு இந்த வருமானம் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதிக வருமானம் கிடைத்தாலும், அதிக ரிஸ்க் உள்ளதாக பங்குச் சந்தை முதலீடு இருக்கிறது. ஓரளவுக்கு நல்ல வருமானம் கொஞ்சம் குறைவான ரிஸ்க்கும் கொண்ட முதலீடு எனில், அது  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுதான் என்று தைரியமாக சொல்லலாம்.  இதிலும் முதலீட்டுக் காலத்துக்கு ஏற்ப ஃபண்ட் வகைகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.

 மியூச்சுவல் ஃபண்டில் பல விதமான வளர்ச்சித் திட்டங்கள் இருந்தாலும், அந்தந்த  தேவைக்கு ஏற்ப சரியான திட்டத்தை தேர்வு செய்து முறையாக முதலீடு செய்வது அவசியம். பலர் பங்கு சந்தையில் பங்குகளை அடிக்கடி வாங்கி விற்பது போல், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலும் அதன் மதிப்பு கூடியவுடன் லாபத்தை எடுக்க நினைத்து, அல்லது மதிப்பு குறைந்தவுடன் பயந்து போய், முதலீட்டைத் திரும்ப எடுத்துவிடுகிறார்கள். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால் மட்டுமே லாபம் பெற முடியும். அல்லது நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய நினைத்தால்தான் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இது பேலன்ஸ்டு ஃபண்டுகளுக்கும் பொருந்தும்.

இலக்கு நோக்கிய முதலீட்டின் முக்கியத்துவம்!

நீண்ட காலத்துக்கு  முதலீட்டை தொடர வேண்டும் என்று ஆரம்பித்து ஒரு சில மாதங்களில் அல்லது வருடங்களில் முதலீட்டை  எடுத்துவிடுகிறார்கள் பலர். இதனால் அவர்களது நீண்ட காலக் கனவுகள் சிதைந்து போகிறது. அது மட்டுமின்றி,  கூட்டு வட்டியின் (பவர் ஆஃப் காம்பவுன்டிங்) மகத்தான பலனை அடைய முடியாமல் போய்விடுகிறது. இதற்கு நல்ல தொரு உதாரணம், நாம் ஒரு தேக்கு மரத்தை நடுகிறோம். மரம் நன்கு வளர்ந்துவிட்டது என்று அதனை 5 வருடத்தில் வெட்டி எடுத்தால், குச்சிதான் கிடைக்கும். பலகை கிடைக்காது. எனவே, நீண்ட காலமே அல்லது குறுகிய காலமோ அந்தந்த இலக்கை அடையும் வரை தொடர்ந்தால் மட்டுமே நன்கு பயனை அடைய முடியும்.

பெரிய தேவை என்கிறபோது சொந்த வீடு, கார், பிள்ளைகள் படிப்பு, கல்யாண செலவு, பிள்ளைகளுக்கு தொழில் ஏற்படுத்தித் தருவதற்கான தொகுப்பு நிதி, ஓய்வுக் காலச் செலவுகளுக்கான தொகுப்பு நிதி போன்றவை உள்ளன.

இதில் சொந்த வீடு என்பதை பெரும்பாலானோர் வீட்டுக் கடன் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று,  மற்றக் கடன்களைவிட சுலபமாகவும், குறைந்த வட்டி யிலும் கிடைப்பது, திரும்பச் செலுத்தும் வட்டி (நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரை), அசலுக்கு (நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை) வருமான வரிச் சலுகைகள் கிடைப்பதாகும். தவிர, வீடு வாங்க மொத்தமாக ரூ. 30 லட்சம், ரூ. 40 லட்சம் என சேர்த்து முடிப்பதற்குள் அதன் விலை நீண்ட காலத்தில் அதிகரித்துவிடும்.  மேலும், நாம் விரும்பும் இடத்தில் வீடு கிடைப்பது கஷ்டம் என்பதால் அதனை கடன் மூலம் அடைவது பலவிதங்களில் லாப கரமாக இருக்கும். அதேநேரத்தில், வீட்டுக் கடனுக்கான டவுன்பேமன்ட்-க்காக சில ஆண்டுகள் முதலீடு செய்து வருவது முக்கிய இலக்காகும்.

இதர தேவைகளுக்கும் இலக்கு சார்ந்த முதலீட்டை மேற்கொண்டு வரலாம். கார் வாங்க எனில், அதன் விலை மற்றும் இன்னும் இருக்கும் காலத்துக்கேற்ப சுமார் 5 ஆண்டுகள் நல்ல பேலன்ஸ்டு அல்லது ஈக்விட்டி ஃபண்டுகளில் அல்லது இந்த இரு வகை ஃபண்டுகளிலும் கலந்து முதலீடு செய்து வரலாம். முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகள் என்கிற போது, இந்த இலக்குக்கான முதலீட்டில் பெரிய மாற்றமோ, இடையில் நிறுத்துவதோ அதிகம் நடக்க வாய்ப்புண்டு.

பிள்ளைகள் படிப்பு, திருமண செலவு, உங்களின் ஓய்வு கால தொகுப்பு நிதி என்கிறபோது மிக நீண்ட காலம் இருக்கிறது. இங்கேதான் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த முதலீடுகளை சென்டிமென்டுடன்  இணையும்போது, முதலீட்டை இடையில் நிறுத்த வாய்ப்பில்லை. 

இந்த சென்டிமென்ட்-ஐ பயன்படுத்திதான் ஆயுள் காப்பீடு நிறுவனங்களும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் இலக்கு நோக்கிய அல்லது இலக்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. இந்தப் பிரிவில் சைல்டு பிளான்கள், ரிடையர்மென்ட் பிளான்கள் பிரபலம்.

ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் இந்த இலக்கு சார்ந்த திட்டங்களைத் தேர்வு செய்வது   லாபகரமாக இருக்க வாய்ப்பு இல்லை. காரணம், இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை பங்குச் சந்தை சார்ந்த இன்ஷூரன்ஸ் திட்டங்களாக (யூலிப்) இருக்கின்றன. இந்த யூலிப் பாலிசிகளில் ஏஜென்ட் கமிஷன் மிக அதிகம். மேலும், கட்டணங் களும் அதிகம். இதில் காப்பீடு மற்றும் முதலீடு கலந்திருந்தாலும் இரண்டுமே சரியாக நிறைவேறு கிற மாதிரி இத்திட்டம் இல்லை.  எண்டோவ்மென்ட் பாலிசி களிலும் நீண்ட காலம் பணத்தைப் போட்டாலும் சுமார் 5 சதவிகித  வருமானமே கிடைக்க வாய்ப்பு உண்டு. 

மியூச்சுவல் ஃபண்ட் சைல்ட் பிளான் என்கிறபோது, ஆக்ஸிஸ் சில்ட்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன்ஸ் ஃபண்ட், டாடா யங் சிட்டிசன்ஸ் ஃபண்ட், ஐசிஐசிஐ சைல்ட் கேர் பிளான் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன.

ரிடையர்மென்ட் பிளான்கள் என்கிறபோது, ஹெச்டிஎஃப்சி ரிடையர்மென்ட்ஃபண்ட், ரிலையன்ஸ் ரிடையர்மென்ட் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா பென்சன் ஃபண்ட் போன்றவை உள்ளன.

இலக்கு சார்ந்த முதலீடுகளில் மியூச்சுவல் ஃபண்ட்களில் சில்ட்ரன்ஸ் ஃபண்ட் மற்றும் ரிடையர்மென்ட் ஃபண்டுகள் உள்ளன. இந்த ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் பங்குகளின் முதலீடு 65 சத விகிததுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் இந்த வருமானத்துக்கு வரி எதுவும் கட்டத் தேவை இல்லை.  இவை நீண்ட காலத்தில் 9.5% முதல் 17% வரை ஆண்டு வருமானம் தருகின்றன. (விரிவான விவரங்களுக்கு அட்டவணைகளைப் பார்க்க)

இலக்கை நோக்கி சீராக, தொடர்ந்து முதலீடு செய்தால் நிம்மதியான எதிர்காலம் நிச்சயம் என்பதை இனியாவது உணர்வோம்!


கவனிக்க வேண்டிய  நான்கு முக்கிய விஷயங்கள்!

1. இலக்கு நோக்கிய முதலீடு என்றாலும் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நம் முதலீடுகள் என்ன வருமானம் கொடுத்திருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்வது மிக முக்கியம். தேவைப்பட்டால், முதலீட்டுத் திட்டங்களை மாற்ற தயங்க கூடாது.

2. இலக்கு ஒன்று என்றாலும் முதலீட்டை ஒரே திட்டத்தில் மேற்கொள்வதை தவிர்த்து பல திட்டங்கள், பல பிரிவுகளில் முதலீடு செய்வது ரிஸ்க்-ஐ பரவலாக்குவதோடு, அதிக வருமானம் பெறவும் உதவும். 

3. ஆண்டுக்கு ஆண்டு விலைவாசி அதிகரித்து வருவதால், உங்களின் சம்பள அதிகரிப்புக்கு ஏற்ப இடை இடையே இலக்கு நோக்கிய முதலீட்டை அதிகரித்து வருவது அவசியமாகும்.

4. உங்களுடைய இலக்குகளுக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், அவை தொடர்ந்து இலக்குகளை அடையும் வகையில் வருமானம் தருகிறதா என்பதை ஆய்வு செய்வதற்கும் நிதி ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது மிகவும் அவசியம்.


உங்களிடம் நிதி ஒழுக்கம் இருந்தால்..!

உங்களிடம் நிதி ஒழுக்கம் இருந்தால், அதாவது முதலீட்டை தொடர்ந்து சீராக மேற்கொண்டு வருவது, எந்த நோக்கத்துக்காக முதலீடு செய்கிறோமோ அது வரை காத்திருக்கும் நிதி வசதி மற்றும் பொறுமை இருக்கும்பட்சத்தில் நீங்கள் இலக்கு நோக்கிய முதலீட்டு திட்டங்களை (சைல்டு பிளான், ரிடையர்மென்ட் பிளான்) தேர்ந்தெடுத்து முதலீடு செய்யத் தேவை இல்லை. உங்களைப் போன்றவர்கள் டாப் ஈக்விட்டி டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick