பர்ஸை பதம் பார்க்கும் அல்காரிதம்... ஆன்லைன் கஸ்டமர்களே உஷார்!

சோ.கார்த்திகேயன்

வ்வொரு நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்தான் கடவுள். அந்த வாடிக்கையாளரின் தேவையை அறிந்து, அதைப் பூர்த்தி செய்து, அவரை மகிழ்விப்பது  அவ்வளவு எளிதான காரியமில்லை.

ஆனால், கடும் போட்டி நிறைந்த சூழலில் வாடிக்கை யாளரின் மன நிலையை அறிந்து, பொருட்களை எளிதில் விற்பனை செய்ய ‘அல்காரிதம்’ எனும் புதிய தொழில்நுட்பத்தை ஆன்லைன் நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய விற்பனையை அதிகரித்து, வாடிக்கையாளரை தக்கவைத்து வருகின்றன. ஆனால், இந்த அல்காரிதம் நம்முடைய பர்ஸை பதம் பார்க்கும் என்பதுதான் அதிர்ச்சிகரமான விஷயம்.

ஒரு உதாராணம்... ஷீர்டி சாய்பாபா மேல் உங்களுக்கு மிகுந்த பக்தி. சமீபத்தில் அங்கு சென்றும் வந்திருக்கிறீர்கள். பயணம் பற்றி உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளீர்கள். பின்னர் உங்கள் மொபைல் போனுக்கு ஒரு கவர் வேண்டும் என்று இணையதளங்களை தேடுகிறீர்கள். இதை வைத்து அல்காரிதத்தை உபயோகிக்கும் நிறுவனங்கள் என்ன செய்யும் தெரியுமா?

ஷீர்டி சாய்பாபா கவரின் மேல் இருக்கக்கூடிய ஒரு கவரை உங்களுக்கு பரிந்துரை செய்யும். அதாவது, உங்களை சென்டிமென்ட்டாக அட்டாக் செய்ய முயற்சிக்கும். இதன் மூலம் நீங்கள் அந்தப் பொருளை வாங்கியே தீரவேண்டும் என்கிற அளவுக்கு மனரீதியான நெருக்குதலை உருவாக்கும். அல்காரிதம் தொழில்நுட்பத்தைக் கொண்டு இதுமாதிரி பல பெரிய ஆன்லைன்  நிறுவனங்கள் நம் பணத்தை குறிவைக்கின்றன.

அல்காரிதம் குறித்து மேலும் பல தகவலுக்கு சோஷியல் மீடியா நிபுணர் ராஜசேகரிடம் கேட்டோம்.

“ஆன்லைன் வாயிலாக பொருட்கள் அல்லது சேவையை விற்பனை செய்ய விரும்பும் நிறுவனங்கள் அல்காரிதத்தை பயன்படுத்துகின்றன. கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற முன்னணி நிறுவனங்கள் அல்காரிதத்தைப் பயன்படுத்தி வருகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன் அல்காரிதம் என்பது பரவலாக பயன்படுத்தப் படவில்லை. ஆனால், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி, இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பு, நிறுவனங்களுக்கு இடையே போட்டி போன்ற காரணங்களால் அல்காரிதத்தை பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

இந்தியாவில், மேட்ரிமோனி டாட்காம், ஃப்ளிப்கார்ட், பேடிஎம், ஸ்நாப்டீல், அமேசான், ஓலா, உபர் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய விற்பனையை அதிகரிப்பதற்காக அல்காரிதத்தை பயன்படுத்தி வருகின்றன. அல்காரிதம் இல்லாமல் நிறுவனங்கள் தங்களுடைய விற்பனையை அதிகரிக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டன. இன்றைய சூழ்நிலையில் அல்காரிதத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளரின் மன நிலையை நிறுவனங்கள் அறிந்து கொள்ளாவிட்டால், அவர்களால் அந்தத் துறையில் நீடிப்பது என்பதே மிகவும் சிரமமான காரியமாக உண்டாகியுள்ளது.

வாடிக்கையாளரின் மனநிலை!

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களைப் பொறுத்தவரை, வாடிக்கையாளரின் மன நிலையை அறிந்துகொள்வதற்காக அல்காரிதத்தை பயன் படுத்துகின்றன. அதாவது, தங்களுடைய வலைதளங்களில், வாடிக்கையாளர்கள் எவ்வளவு மணி நேரம் செலவிடுகின்றனர், என்னென்ன பொருட்களை பார்வையிடுகின்றனர், எந்த மாதிரியான பொருட்களை வாங்குகின்றனர் என்பது உட்பட பல்வேறு தகவல்களை அல்காரிதம் மூலம் அறிந்து கொள்கின்றன. அதுமட்டுமன்றி, அல்காரிதத்தைப் பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் எங்கு இருக்கிறார், எது வாயிலாக (மொபைல், கம்ப்யூட்டர்) தங்களுடைய வலைதளத்துக்கு வருகிறார், தினசரி வலை தளத்துக்கு எவ்வளவு முறை வருகிறார் என்பது போன்ற பல தகவல்களைத் திரட்டுகின்றன.

வாடிக்கையாளருக்கும் பயன்!

அல்காரிதம் என்பது நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கக் கூடியது என்பதில்லை. இது வாடிக்கையாளருக்கும் உபயோகமான ஒன்றுதான். அல்காரிதமானது வாடிக்கை யாளரின் மனநிலையை அறிந்து, அவர்களுடைய தேவையையும் பூர்த்தி செய்கின்றன. நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட் போன் வாங்கி இருந்தால், அந்த ஸ்மார்ட் போனுக்கு தேவையான மெமரி கார்டு, ப்ளூடூத், ஸ்மார்ட் போன் கவர், பேட்டரி என அந்த ஸ்மார்ட் போனுக்கு தகுந்த பல பொருட்கள் ஆன்லைன் பக்கங்களில் காண்பிக்கப்படும்.

நீங்கள் ஆன்லைனில் ஒரு ஆசிரியர் பெயரை குறிப்பிட்டு ஒரு புத்தகத்தை தேடுகிறீர்கள் என்றால், அந்த ஆசிரியருடைய மிகவும் பிரபலமான மற்ற புத்தகங்களும் உங்களுக்கு ஆன்லைனில் காண்பிக்கப்படும். அந்த புத்தகம் குறித்த சலுகைகள், காம்போ ஆபர்கள், பரிந்துரைகள் உட்பட பல விஷயங்களை நிறுவனங்கள் தெரியப்படுத்தும்” என்றார்.

வாடிக்கையாளரே உஷார்!

அல்காரிதம் எனும் தொழில்நுட்பத்தை ஆன்லைன் நிறுவனங்கள் பயன்படுத்தி உங்கள் அந்தரங்கத்துக்குள் நுழைகிறது என்று நீங்கள் எரிச்சல் அடையலாம். ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் ஆன்லைன் நிறுவனங்கள் இப்படி செய்வதை நம்மால் தடுக்க முடியாது. வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பங்கள்தான் உலகத்தை ஆளப்போகிறது என்பதால், நமது விருப்பு வெறுப்புகளை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது   கவனமாக இருப்பது அவசியம். தவிர, நம் உணர்வுரீதியான சென்டிமென்ட்டுகளை பயன்படுத்தி, ஆன்லைன் நிறுவனங்கள் நம்மிடம் பல பொருட்களை விற்பனை செய்ய  முயற்சிக்கலாம்.

நம் தேவைகள், பயன்பாடு குறித்த தெளிவான  சிந்தனை நமக்கு இருந்தால், அல்காரிதம் என்ன, வேறு எந்த தொழில்நுட்பம் வந்தாலும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால், பார்த்த பொருட்களை எல்லாம் வாங்கிவிட நினைக்கும் நம்முடைய ஆசைதான், அல்காரிதம் என்கிற தூண்டிலில் மாட்ட வைக்கிறது. எனவே, உஷாராக இருங்கள் வாடிக்கையாளர்களே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick