ஷேர்லக்: நம்பிக்கை தரும் இந்தியப் பொருளாதாரம்!

 

ரபரப்பாக இதழ் முடிக்கும் பணிகளில் நாம் பிசியாக இருக்க, சத்தமில்லாமல் நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். களைத்து வந்தவருக்கு ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு அவருக்கு இருக்கையை இழுத்துப்போட்டோம். அவரே பேச ஆரம்பித்தார்.

‘‘காலாண்டு முடிவுகள் கலவை யாகதான் வருகின்றன. முதலில் பாசிட்டிவ் ரிசல்ட்டுகளை சொல்கிறேன்.

நிகர வட்டி வருமானம் அதிகரித்ததால், யெஸ் பேங்கின் நிகர லாபம் 27% உயர்ந்துள்ளது. வணிக விரிவாக்கம், நிகர வட்டி வருமானம் அதிகரிப்பு, செயல்பாட்டு வருமானம் உயர்வு போன்றவற்றால் லட்சுமி விலாஸ் பேங்கின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 22%,  முழு நிதி ஆண்டில் 36 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

விற்பனை அதிகரித்ததால் பயோகான் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 79% அதிகரித்து ரூ.361 கோடியாக உயர்ந்துள்ளது. முதன் முறையாக வருமானம் ரூ.1,000 கோடியைத் தாண்டி, 17% அதிகரித்து ரூ.1,004 கோடியாக உயர்ந்துள்ளது.

வாய்ஸ் மற்றும் டேட்டா வணிக வளர்ச்சியால் இந்தியாவின் மிகப் பெரிய தொலைபேசி சேவை நிறுவனமான ஏர்டெல்லின் நிகர லாபம் 15% அதிகரித்து, ரூ.1,117 கோடியாக உயர்ந்துள்ளது. இது சந்தை எதிர்பார்ப்பைவிட அதிகமாகும். புதிய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காம் காலாண் டில் 14% அதிகரித்துள்ளது.

டாபர் இந்தியாவின் நிகர லாபம் 17% அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், செலவு குறைப்பு நடவடிக்கை, மூலப் பொருட்கள் விலை குறைவு போன்றவைகளாக இருக்கின்றன” என பாசிட்டிவ் ரிசல்ட்களை அடுக்கியவர் அடுத்து நெகட்டிவ் ரிசல்ட் களுக்கு தாவினார்.

‘‘வரிக்காக அதிக தொகை சென்றது, உற்பத்தி இழப்பு போன்றவற்றால் நான்காம் காலாண்டில் மாருதியின் நிகர லாபம் 11.73% குறைந்து உள்ளது.

நான்காம் காலாண்டில் நிகர வட்டி வருமானம் 20% அதிகரித்துள்ள நிலையில், ஆக்ஸிஸ் பேங்கின் லாபம் 1% குறைந்துள்ளது. வாராக் கடன் சிறிது அதிகரித்து உள்ளது. இதனைக் குறைக்க, கடன்களை மறு சீரமைப்பு செய்து வருகிறது. 

அதிக செலவினங்கள் மற்றும் போதிய விலை கிடைக்காததால் அம்புஜா சிமென்ட் நிகர லாபம் 4.4% குறைந்துள்ளது. இதேபோல் ஏசிசியின் நிகர லாபமும் 4% குறைந்துள்ளது.

கமாடிட்டி விலை குறைந்த தால், நான்காம் காலாண்டில் வேதாந்தாவின் நிகர இழப்பு  ரூ.11,181 கோடியாக உள்ளது.

வாராக் கடனுக்கான ஒதுக்கீடு மற்றும் வாராக் கடன் தள்ளுபடி போன்ற வற்றால் சென்னையை சேர்ந்த ராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஷியல் நிறுவனத்தின் நிகர லாபம் 61% வீழ்ச்சி கண்டுள்ளது.

வாராக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததால், ஐசிஐசிஐ பேங்கின் நிகர லாபம் நான்காம் காலாண்டில்  76% வீழ்ச்சி கண்டு ரூ.2,922 கோடியிலிருந்து ரூ.702 கோடியாக குறைந்துள்ளது. வாராக் கடனுக்கு மட்டும் இந்த வங்கி ரூ.3,600 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதே முக்கிய காரணம்” என நிறுத்தியவர், பாதி குடித்திருந்த ஆப்பிள் ஜூஸை முழுவதுமாகக் குடித்துவிட்டு, பேச ஆரம்பித்தார்.

‘‘ஐபிஓ ஃபைனான்ஸ் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறதே’’ என்றோம்.

‘‘ அண்மைக் காலத்தில் ஐபிஓ வந்த பல பங்குகள், பட்டியலிடப் பட்ட அன்றே விலை அதிகமாக உயர்ந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி பலரும் ஐபிஓவில் முதலீடு செய்து, பட்டியலிடப் பட்ட அன்றே விற்று அதிக லாபம் பார்த்திருக்கிறார்கள். இப்படி அதிகம் செய்வது ஹெச்என்ஐ என்கிற பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நிதி உதவி செய்வதற்கு என்றே பல பங்கு தரகு நிறுவனங்கள் இருக்கின்றன. உதாரணமாக, எடெல்வைஸ், ஐஐஎஃப்எல், ஜே.எம் ஃபைனான்ஷியல், ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ், கோட்டக் செக்யூரிட்டீஸ், ஆதித்ய பிர்லா மணி உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபிஓவில் முதலீடு செய்ய கடன் உதவி செய்வதாக தகவல். இதற்கு வட்டி 7.5 முதல் 8.5 சதவிகிதமாக உள்ளது.

அண்மையில் ஈக்விடாஸ் ஐபிஓவின்போது அதில் முதலீடு செய்ய அதிகமாக கடன் வாங்கப் பட்டிருக்கிறது. அந்தப் பங்கு பட்டியலிடப்பட்ட அன்றே 23% விலை அதிகரித்ததால், பல பெரும் முதலீட்டாளர்கள் விற்று லாபம் பார்த்திருப்பதாகத் தகவல்’’ என்றார்.
‘‘மியூச்சுவல் ஃபண்டுகளின் பங்கு முதலீடு எப்படி இருக்கிறது?’’ என அடுத்த கேள்வியை கேட்டோம்.

‘‘தொடர்ந்து இரண்டு மாதமாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் நிகர முதலீடு மைனஸில் இருக்கிறது. இதற்கு காரணம், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் (ஏப்ரல் 27 வரை) ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களிலிருந்து முதலீட்டாளர்கள் பணத்தை வெளியே எடுத்ததுதான் காரணம் என்கிறார்கள். இந்த மாதங்களில் ஈக்விட்டி ஃபண்டுகளின் நிகர முதலீடு மைனஸ் ரூ.10,198.10 கோடி மற்றும் மைனஸ் ரூ.273 கோடியாக உள்ளன” என்றவருக்கு மதியம் கேன்டினில் வாங்கிய வேர்கடலை பர்பியை நீட்டினோம். அட, நமக்கு பிடித்த அயிட்டம் என ஆசையாக வாங்கி வாயில் போட்டுக்கொண்டார். 

‘‘கடந்த வியாழன் அன்று ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரிக்க  என்ன காரணம்?’’ என்றோம்.

‘‘மும்பையில் கட்டுமானப் பரப்பை தீர்மானிக்கும் ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸை (எஃப்எஸ்ஐ) அதிகரிக்கும் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைப்படுத்தப் பட்டால் குறைந்த நிலப்பரப்பில் அதிக கட்டடம் கட்ட முடியும். அந்த வகையில், இது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் கடந்த வியாழக்கிழமை மட்டும் இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட்  நிறுவனப் பங்கின் விலை 11.7% அதிகரித்தது. டிபி ரியால்டி (7.2%), ஆர்பிட் கார்ப்பரேஷன்(4.1%), ஹெச்டிஐஎல் (3.8%)  ஆகிய பங்குகளின் விலையும் அதிகரித்தன’’ என்றவரிடம், ‘‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பல அமைப்புகள் தொடர்ந்து பாசிட்டிவ்-ஆக சொல்லி வருகின்றனவே!’’ என்றோம் சற்று ஆச்சரியத்துடன்.

‘‘உண்மைதான். குறைந்து வரும் பணவீக்க விகிதம், அதிகரிக்கும் நகரவாசிகளின் செலவுகள், அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் போன்றவற்றால் 2016-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசிபிக் பிராந்திய அமைப்பு கணித்திருக்கிறது. இதுவே 2017-ம் ஆண்டில் வளர்ச்சி 7.8 சதவிகிதமாக இருக்கும் என சொல்லி இருக்கிறது. நிலம் மற்றும் வரி விதிப்பு சீரமைப்பு போன்றவற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவிகிதமாக இருக்கும் என மார்கன் ஸ்டேன்லி சொல்லி இருக்கிறது.

இதற்கிடையில், தொழில் உற்பத்திக் குறைவால் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2016-17-ல் 7.7 சதவிகிதமாகத்தான் இருக்கும் என இந்தியா ரேட்டிங்க்ஸ் குறிப்பிட்டுள்ளது. இது அதன் முந்தைய கணிப்பில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவிகிதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
எது எப்படி இருந்தாலும் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதத்துக்கு மேல் இருப்பதே பாசிட்டிவ்-ஆன விஷயம்தான் என அனலிஸ்ட்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்” என எழுந்தவரிடம் இன்னும் கேள்விகள் இருக்கிறது என பதறினோம்.

‘‘அட, தண்ணீர் குடிக்க எழுந்தேன்” என்றவருக்கு ஜில்லென்ற தண்ணீரை ஊற்றிக்  கொடுத்தோம். ‘‘ஐடி பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரித்திருக்கிறதே!’’ என்றோம்.

‘‘டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு பலவீனமாக இருப்பதால் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி நிறுவனங்களின் லாபம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஐடி நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வருகின்றன.
2015 மார்ட் நிலவரப்படி, ஐடி நிறுவனப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு ரூ.36,121 கோடியாக இருந்தது. இது 2016 மார்ச்-ல் ரூ.41,562 கோடியாக அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதத்தில் மேற்கொண்ட பங்கு முதலீடுகளில், 10.07%  சாஃப்ட்வேர் பங்குகளாக இருக்கின்றன’’ என்றார்.

‘‘மத்திய அரசின் பங்கு விலக்கல்கள் எந்த அளவுக்கு இருக்கிறது?’’ என விசாரித்தோம். 

‘‘அண்மையில் மின் உற்பத்தி நிறுவனமான என்ஹெச்பிசி. அதன் 11.36 பங்குகளை ஆஃபர் பார் சேல் முறையில் விற்பனை செய்ததது. இந்தப் பங்கு விற்பனையில் சிறு முதலீட்டாளர் களுக்கு விலையில் 5% தள்ளுபடி அளிக்கப்பட்டது. அப்படியும் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பங்குகளில் 0.58 மடங்குக்குதான் விண்ணப்பம் செய்யப்பட்டன. இந்தப் பங்கு விற்பனைக்கு இதர பிரிவுகளில் போதிய ஆதரவு இருந்தது.

இந்த நிலையில், மத்திய அரசுக்கு சொந்தமான ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனின்(ஹட்கோ) 10% பங்குகளை விற்பனை திட்டமிடப் பட்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தத் திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட இருக்கிறது” என்றவர் போதும் விடுங்கப்பா என்பதுபோல பார்த்தார். 

‘‘கடைசி கேள்வி... பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?’’ என்று வினவினோம்.

‘‘எஃப் அண்ட் ஓ ஏப்ரல் மாத கான்ட்ராக்ட்கள் வியாழக்கிழமை முதிர்வடைந்தன. இதில் ரோலோவரான ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட்களின் எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்களின் சராசரியைவிட அதிகம்.

அதே நேரத்தில், டிரேடர்கள், பொசிஷன்களை கேரி ஃபார்வேர்ட் செய்ய செலுத்திய கட்டணம் குறைவாக இருக்கிறது. இது குறுகிய காலத்தில் சந்தை சிறிய ஏற்றத்தை அல்லது இறக்கத்தை சந்திக்கும் என்பதை குறிப்பிடுவதாக உள்ளது. நடப்பு வாரத்தில் நிஃப்டி 7700 புள்ளிகளுக்கு இறங்கக்கூடும் என எச்சரித்தார்.

‘‘கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது...’’ என்று நாம்  இழுக்கவே, ‘‘அதைச் சொல்லாம விடுவீர்களாக்கும்... குறுகிய கால முதலீட்டுக்கு இண்டஸ்இந்த் பேங்க், சைன்ஜென்ட் (SYNGENE) இன்டர்நேஷனல், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி போன்ற பங்குகளை கவனிக்க லாம்” என சொல்லி முடித்துவிட்டு, புல்லட்டில் பறந்தார் ஷேர்லக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்