சக்கைப்போடு போடும் சலூன் பிசினஸ்!

த.சக்திவேல்

முன்பெல்லாம் முடிவெட்டிக் கொள்வதற்கு மட்டுமே சலூன்களுக்கு செல்வோம். ஆனால், இன்றைக்கு விதவிதமாக முடிவெட்டிக் கொள்வதற்கு, தலைமுடியை வண்ணமடித்துக் கொள்வதற்கு, ஸ்டைலாக மீசை அல்லது தாடி வைத்துக் கொள்வதற்கு என பலவற்றுக்கும் சலூன்களைத் தேடி போகிறார்கள்.

முன்பு சரியான சமூக அங்கீகாரம் கிடைக்காமல் ஒதுக்கப்பட்டிருந்த இந்தத் தொழிலை இன்று வெளி நாட்டுக்கு சென்று படித்துவிட்டு வந்த இளைஞர்கள் கூட பெரும் பணத்தைப் போட்டு நடத்தத் தொடங்கிவிட்டார்கள். மரத்தடியில் 5 ரூபாய்க்கு முடி வெட்டிய காலம் போய், ஏசி அறை யில் ரூ.100-லிருந்து ரூ.1,000, ரூ.2,000 வரை செலவு செய்து தங்களை அழகுபடுத்திக் கொள்ள பலரும் தயாராகிவிட்டார்கள். இதனால் சலூன் தொழிலுக்கு புதிதாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஒரு நவீன சலூனை ஆரம்பிக்க வேண்டுமெனில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், என்னென்ன பொருட்கள் அவசியமாக இருக்க வேண்டும், இந்தத் தொழிலில் இருக்கிற பிசினஸ் வாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி  சென்னை முகப்பேரில் இருக்கும் சிசர்ஸ் மென்ஸ் ப்யூட்டி பார்லரின் நிறுவனர் சிவாவிடம் கேட்டோம். அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

‘‘ஆண்களுக்கு என்று தனியாகவும், பெண்களுக்கு என்று தனியாகவும், ஆண், பெண் இருபாலருக்கும் சேர்ந்தும் ப்யூட்டி பார்லர்கள் இருக்கின்றன. நீங்கள் எந்த ப்யூட்டி பார்லரை தொடங்குவதும் ஒரு சிறந்த முதலீடுதான். மாநகராட்சி அல்லது நகராட்சியிடம் இந்த இடத்தில், இவ்வளவு சதுர அடியில் ப்யூட்டி பார்லர் ஆரம்பிக்க பதிவு செய்து உரிமம் பெற்றாலே போதும் நம்மால் ஒரு நல்ல ப்யூட்டி பார்லரை ஆரம்பித்துவிட முடியும்.

நீங்கள் துணிக்கடையோ அல்லது வேறு கடைகளையோ ஆரம்பித்தால் மாதம் மாதம் ஒரு தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும், ஆனால் ப்யூட்டி பார்லரை பொறுத்தவரை, ஒரே ஒரு  முறை முதலீடு செய்தாலே போதுமானது.

உங்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து, ஒரு தரமான ப்யூட்டி பார்லரை ஆரம்பிக்க குறைந்தபட்சம் ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை தேவைப்படும். மற்ற பிசினஸைப் போல, மெயின் ரோட்டில்தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீடுகள் நிறைந்த பகுதியில், அங்கு வசிக்கிற  மக்களின் பார்வை படுகிற இடத்தில், மக்கள் அடிக்கடி வந்துபோகிற இடத்தில் 400 சதுர அடியிலிருந்து 600 சதுர அடி இடம் இருந்தாலே போதுமானது.

ப்யூட்டி பார்லரை பொறுத்த வரை, கடையின் தோற்றம்தான் மிகவும் முக்கியம். வாடிக்கையா ளர்களை கவர்கிற மாதிரி வண்ணங்களுடன் உள் அலங்கா ரம் இருக்க வேண்டும். முற்றிலும் குளிரூட்டப்பட்டிருப்பது அவசி யம். நான்கு புறமும் கண்ணாடி களால் சூழ்ந்திருப்பது நல்லது. முடி வெட்ட வருகிறவர்கள் அதிகம் நேரம் காத்திருக்க விரும்புவதில்லை. உடனடியாக முடி வெட்டிக்கொண்டு அடுத்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனால் வாடிக்கையாளர்கள் காத்திருப்பதை தாங்கள் உணராத வகையில் அவர்களை களிப்பூட் டும் வகையில் ஒரு அறை இருக்க வேண்டும். அந்த அறையும் குளிரூட்டப்பட்டிருக்க வேண் டும். அதில் எல்சிடி தொலைக் காட்சி, ஸ்டைலான பத்திரிகைகள் இருப்பது அவசியம். வாடிக்கை யாளர்களை அழகுபடுத்த நாம் பயன்படுத்துகிற கருவிகள் நவீனமாகவும், சுகாதாரமாகவும் இருப்பது முக்கியம்.

பிராண்டட் ஷேவிங் கிரீம், ஷேவிங் லோஷன், பிளேடுகள், ஷாம்புகள், விதவிதமான ஹேர் கலரிங் பவுடர்கள், ஹேர் ஆயில், பேஷியல் கிரீம்கள் ,பேஷியல் புராடக்ட்டுகள் இதனுடன் எப்போதும் நல்ல தண்ணீர் வசதி இருப்பது அவசியம்.

கடையின் நவீனத் தோற்றம், இன்டீரியர் டிசைன் மட்டுமே வாடிக்கையாளர்களை முழுமை யாக திருப்திப்படுத்தி விடாது. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதும் அவர் களுக்கு நாம் அளிக்கும் சேவையும் தான் இந்தத் தொழிலில் முதன்மையானது. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சர்வீஸ் செய்யும்போது நட்புறவுடன், அக்கறையுடன் பேசவேண்டும். அவர்கள் நம்மை நண்பர்களைப் போல உணர வைக்க வேண்டும். அவர்களின் முகம் மற்றும் முடியின் தன்மைக்கு தகுந்த மாதிரி இப்படி முடி வெட்டினால் நன்றாக இருக்கும் போன்ற யோசனைகளை தரவேண்டும். அவர்களின் விருப்பப்படி, சேவையை வழங்கினால், வாடிக்கையாளர் கள் நம்மை விட்டு எங்கேயும் போக மாட்டார்கள்.

இந்தத் தொழிலில் இருக்கிற மிகப்பெரிய ரிஸ்க் என்று பார்த்தால், வேலைக்குச் சரியான ஆட்களைப் பிடிப்பதுதான். நல்ல வேலை தெரிந்த ஆட்களை கண்டுபிடித்து அவர்களை தக்க வைத்துக்கொள்வதுதான் இந்தத் தொழிலில் இருக்கிற பெரிய சவால். சரியான ஆட்கள் அமைந்துவிட்டாலே இந்த பிசினஸில் நாம் சுலபமாக ஜெயித்துவிட முடியும். ஆட்களுக்கு கொடுத்த சம்பளம், மின் கட்டணம், வாடகை  மற்ற செலவுகள் போக மாதம் ரூ.50,000 லிருந்து ரூ.80,000 வரைக்கும் இந்த தொழிலில் நம்மால் சம்பாரிக்க முடியும்.

இன்றைக்கு எந்தப் பொருளை யும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிவிட முடியும். ஆனால், முடிவெட்ட வேண்டுமானால் சலூனுக்குத்தான் போயாக வேண்டும். அதனால் இந்த தொழிலுக்கு உண்டான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தவிர, சில தொழில்களில் பொருளாதாரம் நன்றாக இருந்தால்தான் வருமானம் அதிகம் கிடைக்கும். உதாரணமாக, மக்களிடம் அதிகம் காசு புழங்கினால்தான் அடிக்கடி வருவார்கள். ஆனால், இந்தத் தொழில் அப்படியொரு பிரச்னையே இல்லை. கையில் காசிருக்கிறதோ, இல்லையோ அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை யாவது ஒருவர் முடிவெட்டிக் கொண்டுதான் ஆகவேண்டும். முடிவெட்டிக் கொள்ள விரும்ப வில்லை, நீளமாக வளர்க்க விரும்புகிறார் என்றாலும் அதற்காக அவர் சலூனுக்கு வந்தாக வேண்டும். எனவே, யார் வேண்டுமானாலும் நம்பிக்கை யுடன் இந்தத் தொழிலில் இறங்கலாம்.

எந்தத் தொழிலை செய்தாலும் அதை நேசித்து செய்ய வேண்டும். எடுத்த உடனே தொழிலை ஆரம்பித்துவிடாமல், செய்யப்போகும் தொழில் சம்பந்தமான நுட்பங்களை கற்றுக்கொண்டு அதன் மூலமாக கிடைக்கக்கூடிய அனுபவத்தை வைத்துக்கொண்டு தொடங்கினால் நீண்ட
நாட்கள் நிலைத்து நிற்க முடியும்’’ என்றார். 

குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் பார்க்க இந்த தொழிலுக்கான வாய்ப்பு தமிழகம், ஏன் இந்தியா முழுக்கவே இருக்கிறது என்பதால், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இதைக் கவனிக்கலாமே!

படங்கள்: பா.காளிமுத்து.


எப்போதும் காசு கொட்டும் பிசினஸ்!

சி.கே. குமரவேல், சிஇஓ, நேச்சுரல் நிறுவனம்.

“2000-ல் நாங்கள் பிசினஸ் ஆரம்பிக்கும்போது பிராண்டட் சலூனை மக்கள் பெரிதாகப் பயன்படுத்தவில்லை. அப்போது சிகை அலங்காரத் துறையில் பயிற்சிபெற்றவர்கள் அதிகமாக இல்லை. ஆனால், இப்போது நவீன கருவிகள், குளிர்சாதன வசதி என இது ஒரு பிராண்டட் தொழிலாக மாறிவிட்டது.

ஆனால், தொழில்நுட்பம் மிக்க திறமையான ஆட்கள் இன்னும் நிறைய அளவில் உருவாகவில்லை. அதனால் நிறைய திறமையான பணியாளர்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

இன்னொரு  முக்கியமான விஷயம், வாடிக்கையாளர்கள்தான் இந்த பிசினஸை வழி நடத்துகிறார்கள். மக்கள் எங்கு கூடுகிறார்களோ அங்கே இந்த தொழிலுக்கான வாய்ப்பு விரிந்து கிடக்கிறது. அதிகமான மக்கள் கூடும் அலுவலகங்கள் நிறைந்த இடம் எனில், அங்கே சலூன் போடவேண்டும்; மாலில் மக்கள் கூடுகிறார்கள் எனில், அங்கே சலூன் போடவேண்டும். வாடிக்கையாளர்களை தேடிச் சென்று சேவை செய்வது இன்றைக்கு புது டிரெண்டாக உள்ளது. புதுமையாக செய்தால் எப்போதும் காசு கொட்டும் பிசினஸ் இது!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick