நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன்: மளிகைச் செலவை எளிதாக்கும் ஃபோக்ஸ் கார்டு!

ஜெ.சரவணன்

வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களை பணமாகக் கொடுத்து வாங்குவதுதான் இன்றைக்கும் நம் வழக்கமாக இருக்கிறது. சில்லறை இல்லை, செல்லாத நோட்டு என பல பிரச்னைகள் இருந்தாலும் நமக்குத் தெரிந்ததெல்லாம் பணத்தைக் கொடுத்து பொருளை வாங்குவதுதான்.

இப்போது பலரும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி  மளிகைப் பொருட்களை வாங்குகிறார்கள்.  இனி பொருட்களை வாங்க பணம் தரவேண்டிய அவசியமுமில்லை, டெபிட், கிரெடிட் கார்டுகளையும் எடுத்துச் செல்ல வேண்டாம் ஃபோக்ஸ் கார்டு (Folks Card) உங்களிடம் இருக்கும்பட்சத்தில்.

அது என்ன ஃபோக்ஸ் கார்டு என இந்த கார்டினை வெளியிட்டிருக்கும் எல்டி சாப்ட்.காமின் நிறுவனர் அர்ஜுன் மூர்த்தியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“நம்மூரில் வீட்டுச் செலவுகளை  செய்வது பெரும்பாலும் பெண்கள்தான். பொருட்களை வாங்குவதற்காக  ஆண்கள் பணமாகவோ அல்லது தங்களிடம் உள்ள டெபிட், கிரெடிட் கார்டுகளையோ பெண்களிடம் தருகிறார்கள். டெபிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்து, பொருட்களை வாங்குகிறார்கள்.

இப்படிச் செய்யும் செலவு களை பலரும் எழுதி வைப்ப தில்லை. இந்த ஃபோக்ஸ் கார்டினை பயன்படுத்தினால் நீங்கள் பணமாக கொடுக்கத் தேவையில்லை என்பதுடன் நீங்கள் செய்யும் செலவுகளையும் ஒன்றுவிடாமல் உங்களுக்குத் தெரிவிக்கும்.

இதன் மூலம் உங்கள் செலவுகளை நீங்கள் நன்கு திட்டமிட்டு,  தேவையற்ற செலவுகளைக் குறைத்து, பட்ஜெட்டில் துண்டு விழாமல் பார்த்துக்கொள்ள முடியும். மாத இறுதியில் உண்டாகும் பணப் பிரச்னையையும் தீர்க்க முடியும்’’ என்றார்.

எப்படி செயல்படுகிறது ஃபோக்ஸ் கார்டு?

இந்த ஃபோக்ஸ் கார்டு எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கினார் எல்டி நிறுவனத்தின் சி.இ.ஓ.வும் அர்ஜுன் மூர்த்தியின் மகளுமான லட்சுமி தீபா. ‘‘இது ஒரு நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (Near Field Communication) டெக்னாலஜியில் செயல்படும் காஷ்லெஸ் ட்ரான்சாக்‌ஷன் தொழில்நுட்பம் ஆகும். இது ஒரு செமி குளோஸ்டு வாலட் மாதிரிதான்.

மற்ற வாலட்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகள் போல இல்லாமல், மிடில் கிளாஸ் மக்களுக்கான பட்ஜெட் கார்டாக இது செயல்படும். இந்த  கார்டு உங்களிடம் இருந்தால், உங்கள் பட்ஜெட்டில் உங்களுக்குத் தேவையான பொருட்களை உங்கள் ஏரியாவில் உள்ள கடையிலேயே நீங்கள் வாங்கலாம். இந்த கார்டு ஏற்றுக்கொள்ளப்படுகிற பிற இடங்களில் உள்ள கடைகளிலும் பொருட்களை வாங்கலாம்’’ என்றார்.

இந்த கார்டு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் தனது மாதாந்திர செலவுக்கான பணத்தை இந்த வசதியை வைத்திருக்கும் கடைக்காரரிடம்  கொடுத்து டாப் அப் செய்துகொள்ள வேண்டும். அல்லது இந்த வசதி இருக்கிற அனைத்து இடங்களிலும்        டாப் அப் செய்துகொள்ளலாம். பின்னர் அந்த மாதம் முழுவதும் தனக்கான பொருட்களை அவரிடமிருந்தோ அல்லது      இந்த கார்டு    ஏற்றுக் கொள்ளப் படும் வேறு கடைகளிலும் பொருட்களை வாங்கலாம்.

பொருட்களை வாங்கியபின் கடைக்காரரிடம் எல்டி நிறுவனம் தந்திருக்கும் போனுக்குப் பின்னால் கார்டினை வைத்து டேப் (Tap) செய்து பொருளின் விலையைக் குறிப்பிட்டால் போதும், சில நிமிடங்களில் ட்ரான்சாக்‌ஷன் முடிந்துவிடும். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், பைசா  கணக்கிலும் பணத்தை செலுத்த முடியும் என்பதே.

யாருக்கு என்ன லாபம்?

இந்த கார்டினை பயன்படுத்துவதன் மூலம் நாம் செய்யும் செலவுகளை கணக்கு எழுதி வைக்கத் தேவையில்லை. இதனால் மாத இறுதியில் பட்ஜெட்டில் துண்டு விழுவது தவிர்க்கப்படும்.

கடைக்காரரும், தங்களுடைய வாடிக்கையாளர்களின் தேவையை, மன ஓட்டத்தை அறிந்துகொண்டு, யார் யாருக்கு என்ன பொருள் தேவைப்படுகிறது, எவ்வளவு தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு திட்டமிட்டு கொள்முதல் செய்ய உதவும். தவிர, லேட்டஸ்ட் ஆஃபர்களை வாடிக்கையா ளர்களின் தொலைபேசி எண்களுக்கு தகவல் அனுப்ப முடியும். 

அதே சமயம், டிஸ்கவுன்ட்டில் பொருள் வாங்கும்போது பணமாக செலவு செய்தால், கழிவில் கிடைக்கும் பணம் சேமிப்பாக இல்லாமல் செலவாகவே மாறும். ஆனால் இந்தக் கார்டு மூலம் வாங்கும்போது, அந்த டிஸ்கவுன்ட் மூலம் மிச்சமாகும் பணம் நம் கணக்கிலேயே வரவு வைக்கப்படுவதால், மாத இறுதியில் பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருக்க அந்தப் பணம் உதவியாக இருக்கும்.

நாட்டுக்கும் நல்லது!

‘‘விசா கார்ட்ஸ் நிறுவனத்தின் கணக்குப்படி, இந்தியாவில் 980 பில்லியன் டாலர் பணமாகவே வர்த்தகமாவதாகவும், இதனால் வங்கிகளுக்கு எந்தவித லாபமும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் எந்த வகையிலெல்லாம் பணமாகப் பரிவர்த்தனை செய்யப்படுவதைக் குறைக்கலாம் என்று அரசு திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு இந்த கார்டு வழிவகை செய்யும்.

இன்னும்கூட பலரும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கு இன்னும் பழக்கப்படாத நிலையில், இந்த கார்டு மூலம் எளிதாக டிரான்சாக்‌ஷன் செய்ய முடியும்’’ என்றார் லட்சுமி தீபா.

‘‘இப்போதைக்கு சென்னையில் மட்டும் இந்த கார்டுகளை விநியோகம் செய்துள்ளோம். தமிழகத்தில் இன்னும் இரண்டு வருடங்களில் 10 லட்சம் கார்டுகள் விநியோகிக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்றார் அர்ஜுன் மூர்த்தி.
   
நடுத்தர மக்களின் வீட்டு பட்ஜெட்டைத் திட்டமிடும் தொழில்நுட்பமாக இந்த கார்டு இருப்பது வரவேற்கத்தக்க விஷயம். எதிர்காலம் காஷ்லெஸ் ட்ரான்சாக்‌ஷனுக்கானது என்பதால் பலரும் இந்த கார்டினை பயன்படுத்து வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

படங்கள்: எம்.உசேன்

கடைக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

அண்ணா நகரில் இந்த கார்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆரோக்கியா பார்மஸி உரிமையாளர் கமலிடம் கேட்டோம். ‘‘இதைப் பயன்படுத்தும்போது பில்லிங் ரொம்ப ஈஸியா இருக்கு. விரைவில் ட்ரான்சாக்‌ஷன் ஆகிவிடுகிறது. கடையில் வேலை செய்கிற எல்லோராலும், படிப்பறிவு இல்லாதவர்களும் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். பொருளை வாங்க வருகிறவர்களும் அவர்களுக்கு வேண்டிய பொருளை வாங்கிக் கொண்டு, எளிதில் பில் செட்டில் செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்