நாணயம் லைப்ரரி:நீங்கள் பணக்காரராக மாற 10 கட்டளைகள்!

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ராபி டேனியல் லாபின் எழுதிய ‘தெள ஷல் ப்ராஸ்பர்’ எனும் பிசினஸ் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான பத்து கட்டளைகளைச் சொல்லும் புத்தகத்தினை.

இன்றைய சூழ்நிலையில்  வாழ்க்கை என்பதே ஒரு வியாபாரம்தான். வியாபாரமே வாழ்க்கையான இந்த உலகத்தில்    நம்மை வளப்படுத்தும் பத்து  விஷயங்களை கட்டளையாகச் சொல்கிறார்  ஆசிரியர்.

முதலாவது கட்டளையாக ஆசிரியர் சொல்வது, பணம் சம்பாதிப்பது என்பது ஒரு பாவச் செயல் என நினைத்துவிட்டீர்கள் என்றால் உங்களால் பணம் சம்பாதிப்பது என்பது கடினமாகி விடும். வருமானத்தை அதிகரிக்க நினைக்கும் அனைவரும் முதலில் இரண்டு விஷயங்களை புரிந்துகொள்ளவேண்டும்.

ஒன்று, நாம் வியாபாரத்தில் இருக்கிறோம். இரண்டு, அந்த வியாபாரத்தில் உள்ள நியாயங்கள் மட்டுமே நமக்கு பொருத்தமானவையாக இருக்கும். அதைச் செய்வதன் மூலம் நாம் நல்லவற்றையே செய்கிறோம் என்பதுதான் அந்த  இரண்டு   விஷயங்களுமாகும்.

பெரும்பாலான பிசினஸ்மேன் கள் நான் செய்வது சரி என்று முழுமையாக நம்புவதாலேயே அவர்கள் அதிக அளவிலான வெற்றியைப் பெறுகிறார்கள். இந்த நம்பிக்கையே சோதனை களைத் தாண்டிச் செல்ல மிக மிக உதவியாக இருக்கிறது. இந்த நம்பிக்கையே உங்களை சிறப்பாக பேச, நடக்க மற்றும் செயல்பட உதவுவதாக இருக்கும்.

இந்தவித நம்பிக்கை உங்களிடத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும். அந்த மாற்றம் முன்னேற்றத்தை கொண்டு வருவதாக இருக்கும். எப்படி என்கிறீர்களா?  பாக்கெட்டில் இருக்கும் பணத்தின் அளவு அதிகரிக்கும்போது அது உங்கள் நடவடிக்கையை சின்னச் சின்ன விஷயங்களில்கூட மாற்றிவிடும்.

உங்களைச் சுற்றியிருப்பவர்கள் அட, இவர் கொஞ்சம் மாறியிருக்கிறாரே என உணர ஆரம்பிப்பார்கள். உங்களிடம் வந்து சேரும் அதிகப் பணம் உங்களை புதிய மனிதனாக மாற்றுகிறது என்றால், நீங்கள் புதிய மனிதனாக மாறினால் பணம் உங்களைத் தேடிவர வேண்டும் இல்லையா என்கிறார் ஆசிரியர்.

இதை ஒரு ஈக்வேஷனாக எழுதினால் உங்களுக்கு சுலபத்தில் புரிந்துவிடும்.

பழைய குணங்கள் + அதிக பணம் = புதிய குணங்கள் இதை சற்று மாற்றியமைத்தால் எப்படி இருக்கும்?

அதிக பணம் = புதிய குணங்கள் – பழைய குணங்கள் அதாவது, நிறைய பணம் வேண்டுமென்றால் புதிய திறமைகளை (Skill) பெறுவதையெல்லாம் தாண்டி உங்களுடைய குணாதிசயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இது சுலபமானதல்ல என்றாலும் சாத்தியமானதே என்கிறார் ஆசிரியர்.

இரண்டாவது கட்டளையாக ஆசிரியர் சொல்வது, எப்போதுமே உங்களின் நிலைமையைவிட இரண்டு படிநிலைகள் மேலே மற்றும் இரண்டு படிநிலைகள் கீழே இருக்கும் நபர்களுடன் தொடர்பில் இருந்து அவர்களுடைய ஆசைகளை பூர்த்தி செய்வதற்கான உதவிகளைச் செய்துவாருங்கள் என்பதை. இது நெட்வொர்க்கின் பலத்தை உங்களுக்கு கொடுக்கும் என்கிறார். சம்பளத்துக்கு அடிமையாய் இருக்கும் வாழ்விலிருந்து முதலில் வெளிவர முயலுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், ஒரு கூட்டத்தில் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது கேட்கப்படும் முதல் கேள்வி என்ன? நீங்க யாரு? என்ன செய்கிறீர்கள் என்பதுதானே?

நான் வேலை பார்க்கிறேன் என்கிற பதில் பல கூட்டங்களில் ரசிக்கப்படுவதாக இருக்காது. சரி, நான் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் என்கிறீர்கள். அடுத்த கேள்வி என்ன? என்ன பதவி என்பதுதானே. சேர்மனா, வைஸ்-பிரசிடென்ட்டா? இல்லீங்க, நான் ஒரு எக்சிக்யூட்டிவ் என்கிறீர்கள். அப்படியா என்று உற்சாகம் குறைய ஆரம்பிக்கிறதா? வியாபார ரீதியான உலகில் நான் இந்த பிசினஸ் செய்கிறேன் என்று சொல்லுங்கள். உற்சாகம் அதிகரிக்கும். கேள்விகள் அதிகரிக்கும். அதனாலேயே ஒரு பிசினஸின் முதலாளியாக இருங்கள். ஒரு பிசினஸில் நானும்  பங்களிப்பவன் என்ற நிலையில் இருக்காதீர்கள் என நச்சென சொல்கிறார் ஆசிரியர்.

மூன்றாவது கட்டளையாக ஆசிரியர் சொல்வது, மற்றவர்கள் உங்களை பார்க்கும் பார்வையை மாற்ற முயல்வதற்கு முன்னால் அவர்கள் எந்த மாதிரியாக உங்களைப் பார்க்கவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு செயல்படுங்கள் என்கிறார். ஏன் இது அவசியம் தெரியுமா? பிசினஸ் அப்படிப்பட்டது. ஒரு ஜூஸ் போடும் மிஷினை இயக்க என்ன செய்யவேண்டும்? பட்டனை அமுக்கினால் இயங்கும்தானே. பட்டனை அமுக்குபவர் பெரிய ஞானமுள்ள முனிவராக இருந்தாலும் சரி, சரியான  முட்டாள் ரவுடியாக இருந்தாலும் சரி, பட்டனை அமுக்கினால் ஜூஸர் வேலை செய்யும். ஏனென்றால் அதன் செயல்பாடு என்பது நிர்ணயிக்கப்பட்ட வகையிலேயே இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


பிசினஸில் அப்படியா இருக்கிறது? ஓரே வகையான தொழிலில் ஒருவர் ஜெயிக்கிறார். மற்றொருவர் சாராசரியாக இருக்கிறார். மற்றொருவரோ கடுமையான தோல்வியை சந்திக்கிறார். பிசினஸ், பட்டனை அழுத்துபவரை பொறுத்து அதற்கேற்றாற்போல் செயல்படுகிறது. ஏனென்றால் பிசினஸில் செயல்படுவது மனிதர்கள், பட்டன்கள் அல்ல. ஒரு சாமான் வாங்க கடைக்குச் செல்கிறோம். சேல்ஸ்மேன் மென்மையானவராக இருந்தால் அந்த வியாபாரம் எப்படி இருக்கும், அல்லது கரடுமுரடான வராக இருந்தால் எப்படி இருக்கும்? அதைப் போன்றதுதான் இதுவும் என்கிறார் ஆசிரியர்.

நான்காவது கட்டளையாக ஆசிரியர் சொல்வது, ஒரு போதும் குறையற்ற செயல்பாடுகள் (பெர்ஃபெக்‌ஷன்) இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் நபராக இருக்காதீர்கள். அதே சமயம் குறைகளை விரும்பி ஏற்றுக்கொள்ளவும் செய்யாதீர்கள். பிசினஸ் என்றால் கொஞ்சம் முன்னே பின்னேதான் என்பதை புரிந்துகொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப செயல் படுங்கள்.  எல்லா பிசினஸிலும் சில கெட்டவர்கள் இருக்கவே செய்வார்கள். அதை நினைத்து நொந்துகொள்ளாதீர்கள்.

ஐந்தாவது கட்டளையாக ஆசிரியர் சொல்வது, தலைமை ஏற்று நடத்த கற்றுக்கொள்ளுங்கள். தலைமை என்பது வினைச்சொல். பெயர்ச்சொல் அல்ல. எனவே, தலைவனாக மாற முயற்சி செய்யாமல் தலைமைப் பண்புகளுக்குண்டான செயல்களை செய்து பழகுங்கள் என்கிறார் ஆசிரியர்.
ஆறாவது கட்டளை என்ன வென்றால், மாற்றம் என்பதை எதிரியாக நினைக்காமல் தோழனாக மாற்றிக்கொள்ளுங் கள் என்பதை. பிசினஸில் மாறவே கூடாதது எது தெரியுமா என்று கேட்கும் ஆசிரியர், லாப அதிகரிப்பு என்ற ஒன்று மட்டுமே என்கிறார்.

ஏழாவதாக ஆசிரியர் சொல்லும் கட்டளை, எதிர் காலத்தை கணித்துச்சொல்ல கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை. கோழி முட்டையி லிருந்து கோழிக்குஞ்சு வரும் என்று கணிப்பதல்ல புத்திசாலித் தனம். எதிர்காலத்தை கணிக்க தற்போது நடப்பவற்றை உணர்ச்சிவயப்படாமல் ஆராயத் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் விரிவாகச் சொல்லியுள்ளார்.

எட்டாவது கட்டளை, உங்கள் பணத்தை தெரிந்து கொள்வது. நீங்கள் சம்பாதிக்கும் பணம் உங்களுடைய நேரம், திறமை, அனுபவம், மனச்சோர்வடையா முயற்சி மற்றும் உறவுகளால் மட்டுமே உருவாகின்றது என்பதை புரிந்துகொள்ளச் சொல்கிறார் ஆசிரியர்.

ஒன்பதாவது கட்டளை, நீங்கள் எந்த அளவு வருமானத்தை கொண்டிருப்பவரானாலும் சரி, வரி செலுத்தியதுபோக இருக்கும் வருமானத்தில் பத்து சதவிகிதத்தை அடுத்தவர்களுக்கு உதவி செய்ய செலவிடுங்கள். ஈகை சம்பாதிக்கும் பணத்தை அதிகரித்துக்கொள்ள ஒரு சிறந்த காரியமாகும்.
பத்தாவது கட்டளை, நீங்கள் உங்களுடைய தொழிலில் இருந்து ஓய்வு பெறாமல் இருக்கும் வண்ணம் இருந்துகொள்ளுங்கள். தொழில் வேறு வாழ்க்கை வேறு என்று இல்லாமல் தொழிலே உங்கள் வாழ்க்கை என்று வாழ்ந்துகாட்டுங்கள் என்பதை ஆசிரியர் வலியுறுத்துகின்றார்.பணத்தைப் பற்றி அணு அணுவாய்ப் புரிந்துகொள்ள நினைக்கும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது எனலாம்.

(குறிப்பு: இந்தப்  புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

- நாணயம் டீம்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick