ஷேர்லக்: ஐசிஐசிஐ-யை முந்திய கோட்டக் மஹிந்திரா!

ஓவியம்: அரஸ்

கத்திரி வெயில் நம் மண்டையைப் பிளந்தாலும், ஷேர்லக்கின் சுடச்சுட செய்திகளுக்கு நாம் காத்திருந்தோம். மாலையில் வெயில் சாய்ந்தவுடன் நம் முன்னே பிரசன்னமானார் ஷேர்லக். சில்லென்ற ரோஸ்மில்க்கை தந்து அவரை உட்கார வைத்து செய்திகளை சேகரிக்க ஆரம்பித்தோம்.

‘‘டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை ஒரே நாளில் 7% வீழ்ச்சிக் கண்டிருக்கிறதே, என்ன காரணம்?’’ என்றபடி பேச்சைத் தொடங்கினோம்.

‘‘அமெரிக்காவில் டாடா மோட்டார்ஸ்-ன் ஜாக்குவார், லேண்ட் ரோவர் சொகுசு கார்களின் விற்பனை ஏப்ரல் மாதத்தில் 2% குறைந்தது என்கிற தகவல் வெளியானதை அடுத்து, அந்த நிறுவனப் பங்கின் விலையில் ஒரே நாளில் 7% வீழ்ச்சி அடைந்தது. டாடா மோட்டார்ஸ்-ன் அமெரிக்க விற்பனை இப்படிக் குறையும் என அனலிஸ்ட்டுகள் யாரும் கணிக்கவில்லை. இந்த நிலையில், அடுத்த காலாண்டிலும் அமெரிக்காவில் டாடா மோட்டார்ஸ் காரின் விற்பனை குறையும் என அனலிஸ்ட்டுகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்’’ என்று சொல்லி விட்டு, ரோஸ்மில்க்கைக் குடித்தார்.

‘‘ ஐசிஐசிஐ பேங்க்-ஐ கோட்டக் மஹிந்திரா முந்தி உள்ளதே?’’ என்று ஆச்சர்யப்பட்டோம்.

‘‘கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கோட்டக் மஹிந்திரா பேங்கின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.1.29 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. அன்றைய தினம் ஐசிஐசிஐ பேங்க்-ன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.1.27 லட்சம் கோடியாக இருந்தது. வங்கிகளில் ஹெச்டிஎஃப்சி முதல் இடத்தில் ரூ.2.82 லட்சம் கோடியுடனும், எஸ்பிஐ இரண்டாவது இடத்தில் ரூ. 1.42 லட்சம் கோடியுடனும் இருக்கின்றன. இதற்கடுத்த இடங்களில் கோட்டக், ஐசிஐசிஐ பேங்க் இருந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) கோட்டக் மஹிந்திரா பேங்க் தனியார் வங்கிகளில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது’’ என்றார்.

‘‘காலாண்டு முடிவுகள் எப்படி வந்துகொண்டிருக்கிறது’’ என்று விசாரித்தோம்.

‘‘அதைப் பற்றி நீரே ஒரு கட்டுரை எழுதிவிட்டு என்னிடம் வேறு கேட்கிறீரா?

வீட்டுக் கடன் வாங்குவது அதிகரித்ததால், ஹெச்டிஎஃப்சி-ன் நிகர லாபம் 40% அதிகரித்து, ரூ.2,607 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப்-ன் விற்பனை சாதனை அளவாக அதிகரித்ததால், நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 71% அதிகரித்து ரூ.814 கோடியாக உயர்ந்துள்ளது. 2016 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் மொத்தம் 17,21,240 இரு சக்கர வாகனங்களை விற்று இந்த நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது.

விற்பனை 60% அதிகரித்ததால், எய்ஷர் மோட்டார்ஸ்-ன் நிகர லாபம் 68% அதிகரித்து ரூ.359 கோடியாக உயர்ந்துள்ளது. 

வீட்டுக் கடன் வழங்குவது அதிகரித்ததால், திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 17% அதிகரித்து ரூ.190 கோடியாக உயர்ந்துள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள், மேனி பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கோத்ரெஜ் கன்ஸ்யூமர் நிகர லாபம் 17% அதிகரித்துள்ளது.

விற்பனை மற்றும் வருமானம் அதிகரித்ததால், சென்னையை சேர்ந்த முன்னணி இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் கம்பெனியின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 30% அதிகரித்து ரூ.118 கோடியாக உயர்ந்துள்ளது’’ என்று ஒரு பட்டியலை வாசித்தார்.

‘‘கமாடிட்டிகளின் விலை இறக்கத்தைப் பொறுத்தவரை ‘ஒர்ஸ்ட் இஸ் ஓவர்’ என்கிறார்களே!’’ என்றோம்.

‘‘கமாடிட்டிகளின் விலை கடந்த சில ஆண்டுகளாக கடும் சரிவை சந்தித்து வந்ததால், அவை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீட்டாளர் களும் வர்த்தகர்களும் எந்த ஆர்வமும் காட்டவில்லை. ஆனால், தற்போது கமாடிட்டிகளின் விலை மிகவும் குறைந்து தரை தட்டி நிற்பதால், மேற்கொண்டு விலை குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள். இனி இந்த கமாடிட்டிகளின் விலை உயரும் என்பதால், இது தொடர்பான பங்குகளின் மீது கவனம் விழ ஆரம்பித்திருக்கிறது. கெய்ர்ன் இந்தியா, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டெர்லைட், ஓஎன்ஜிசி போன்ற பங்குகளை குறிப்பாக சொல்கிறார்கள்’’ என்றார்.

‘‘பல சென்செக்ஸ் நிறுவனங் களில் எல்ஐசி அதன் பங்கு மூல தனத்தை அதிகரித்து இருக்கிறதே, என்னென்ன பங்குகள் என்று சொல்ல முடியுமா?’’ என்று கேட்டார். ‘‘கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் சென்செக்ஸ் 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களில் முதலீட்டை உயர்த்தி இருக்கிறது. அந்த ஆண்டில் எல்ஐசியின் பங்கு முதலீடு சுமார் ரூ. 60,000 கோடியாக உள்ளது. குறிப்பாக, ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, ஹீரோ மோட்டோகார்ப், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அதானி போர்ட்ஸ் போன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எஸ்பிஐ, பிஹெச்இஎல், டாக்டர் ரெட்டீஸ், விப்ரோ, எல் அண்ட் டி போன்ற நிறுவனப் பங்குகளில் எல்ஐசி அதன் பங்கு முதலீட்டை குறைத்துக் கொண்டுள்ளது’’ என்று விளக்கம் தந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்