ZERO TO HERO - 2.0 - 6

சாதிக்கும் பிசினஸ்மேன்கள்!தரம் + நேர்மை = வெற்றிஏ.ஆர்.குமார்

வெறும் 50 ரூபாயில் ஆரம்பித்த மேனகா கார்ட் நிறுவனம் இன்று கோடிக்கணக்கில் டேர்ன்ஓவர் செய்கிறது. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் எஸ்.சங்கரலிங்கம்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்குப் பக்கத்தில் சங்கனான்குளம் என்னும் கிராமத்தில் பிறந்த சங்கரலிங்கம், இன்றைக்கு ஏழுக்கும் மேற்பட்ட நாடுகளில் அழைப்பிதழ்களை அச்சிட்டுத் தரும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஹீரோவாக மாறிய கதையை அவரே சொல்கிறார்...

‘‘எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம். எங்கள் கிராமம் வானம் பார்த்த பூமி. மழை நன்றாகப் பெய்தால்தான் விவசாயம் நடக்கும் என்பதால் என்னை எப்படியாவது படிக்க வைத்து வேறு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் என் அப்பா குறியாக இருந்தார்.

திருநெல்வேலியில் பி.யு.சி. படித்துவிட்டு, விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் படிப்பதற்காக கோவையில் உள்ள விவசாயக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் ஒரு வருடம் வீட்டிலேயே உட்கார வேண்டியதாகிவிட்டது.

இந்த நேரத்தில் ஏதாவது படிக்கலாம் என்று நினைத்து, திசையன்விளைக்கு டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள சென்றேன். தினமும் 10 கி.மீ. சைக்கிளில் சென்று வருவேன். அப்போது எங்கள் ஊரில் விறகுகளுக்கு கடும் தட்டுப்பாடு இருந்தது. எனவே, திசையன்விளை யில் விறகுகளை வாங்கி, சைக்கிள் கேரியரில் கட்டி எடுத்துவந்து, ஊரில் விற்பேன். இதனால் எனக்கு தினமும் 1.25 பைசா கிடைத்தது. இது என் டைப் ரைட்டிங் கிளாஸ் கட்டணத்துக் கும், என் செலவுகளுக்கும் பயன்பட்டது.

அடுத்த ஆண்டு மீண்டும் கோவை விவசாயக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். அந்த ஆண்டும் சீட் கிடைக்க வில்லை. எனக்கு மனம் வெறுத்து விட்டது. இரண்டு முறை கோவைக்கு சென்றிருந்ததால், வெயிலில் அலைந்த எனக்கு அந்த ஊரின் பசுமை மிகவும் பிடித்திருந்தது. வேண்டா வெறுப்பாக கிராமத்துக்கு வந்து சில நாட்கள் கழித்தேன். இந்த ஆண்டும் கிராமத்திலேயே இருந்தால், என்னை வயலில் இறங்கி வேலை பார்க்கச் சொல்லிவிடுவார்கள் என்று நினைத்து, 300 ரூபாய் எடுத்துக் கொண்டு, திருநெல் வேலிக்கு வந்துவிட்டேன். திருநெல்வேலி ஜங்க்‌ஷனில் இருந்து முதலில் கிளம்பும் ஏதாவது ஒரு ரயிலில் ஏறி, அந்த ஊருக்குச் சென்றுவிட முடிவு செய்திருந்தேன். ஜங்க்‌ஷனுக்கு வந்தபோது, கோவைக்கு புறப்பட ஒரு ரயில் தயாராக நின்ற கொண்டிருந்தது. உடனே டிக்கெட் வாங்கி ஏறிவிட்டேன்.

கோவையில் ஏதாவது ஒரு இடத்தில் வேலை தேடிக் கொண்டு பிழைத்துக் கொள்ள லாம் என்று நினைத்து, எல்லாக் கடைகளிலும் சென்று வேலை கேட்டேன். எங்கும் வேலை கிடைக்கவில்லை. கையில் இருந்த காசு கரைந்துகொண்டிருந்தது. இனியும் தாமதிக்காமல் ஏதாவது ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துவிட முடிவு செய்தேன். காரணம், சம்பளத்துடன் சாப்பிட உணவும், தங்க இடமும் ஓட்டலில்தான் கிடைக்கும். கோவையில் உள்ள குரு ஓட்டலில் வேலை கேட்டேன். சர்வர் வேலை கிடைக்கவில்லை என்றால், கிளீனர் வேலைகூட கேட்டு வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதற்காக சர்வர் எப்படி உணவு பரிமாறுகிறார்கள், கிளீனர்கள் எப்படி டேபிளைத் துடைக் கிறார்கள் என்பதை எல்லாம் உன்னிப்பாகப் பார்த்து, கற்று வைத்திருந்தேன். ஆனால், நான் வெள்ளைச் சட்டையும், பேண்ட்டும் போட்டுருந்ததாலோ என்னவோ, என்னை ரிசப்ஷனிஸ்ட்-ஆக நியமித்து விட்டார்கள். எனக்கோ மகிழ்ச்சி தாளவில்லை. என்றாலும் அந்த வேலையைவிட இன்னும் கொஞ்சம் நல்ல வேலையைத் தேடிக்கொள்ள நினைத்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்