வீடு கட்ட நண்பரிடம் வாங்கிய கடனுக்கு வரிச் சலுகை கிடைக்குமா?

?நான் வீடு கட்ட வங்கியில் ரூ. 5 லட்சமும் நண்பரிடம் ரூ.5 லட்சமும் கடன் வாங்கினேன். இருவருக்கும் மாதம் ரூ. 5,000  திரும்ப கட்டி வருகிறேன். எனக்கு வருமான வரிச் சலுகை எப்படி கிடைக்கும்?

@ ஷிவா,

என்.பி.இசை அழகன், ஆடிட்டர்,இசை அண்ட் கோ.

“வருமான வரிச் சட்டம் பிரிவு 24(b) -ன் கீழ் நீங்கள் செலுத்தும் வீட்டுக் கடனின் வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம். இந்தப் பிரிவில் சுயமாகக் குடியிருக்கும் வீட்டுக் கடனின் வட்டிக்கு ரூ.2,00,000 (நிதி ஆண்டுக்கு) வரையும், வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தால், வீட்டுக் கடன் வட்டி முழுவதுக்கும் வரிச் சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகை வங்கி மற்றும் மற்றவர்களிடம் வாங்கிய கடனின் வட்டிக்கும் பொருந்தும். வட்டி செலுத்திய சான்றிதழை வைத்திருக்க வேண்டும். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-யின் கீழ் நீங்கள் செலுத்திய அசல் தொகையில் அதிகபட்சம் ரூ.1,50,000 (நிதி ஆண்டுக்கு) வரை வரிச் சலுகை பெறலாம். இந்தச் சலுகை வங்கி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் வீட்டுக் கடன்களுக்கு மட்டும் பொருந்தும். மற்றவர்களிடம் (உறவினர், நண்பர்) வாங்கிய கடனுக்குச் செலுத்தும் அசல் தொகைக்கு இந்தச் சலுகை கிடையாது.”

?நான் துபாயில் வேலை செய்கிறேன். குழந்தைகளின் கல்வி, எதிர்காலத் தேவைக்காக எஸ்ஐபி முறையில் எஸ்பிஐ புளூசிப், ஹெச்டிஎஃப்சி மிட்கேப், டிஎஸ்பி பிளாக்ராக் மைக்ரோ ஃபண்ட், சுந்தரம் செலக்ட் மிட்கேப், எஸ்பிஐ மேக்னம் மிட்கேப், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்டுகளில் முதலீடு செய்ய இருக்கிறேன். டைரக்ட் பிளானில் முதலீடு செய்யலாமா அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி மூலம் முதலீடு செய்யலாமா?

@ சுப்ரமணியன்,


கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர், மதுரை.

“லார்ஜ் கேப், மல்டி கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் என கலவையாக ஃபண்டுகளை தேர்வு செய்துள்ளீர்கள். கடந்த கால எஸ்ஐபி லாபத்தைக் கணக்கிட்டால், ஸ்மால் கேப் அதிகமாகவும் லார்ஜ் கேப் குறைவாகவும் கொடுத்துள்ளது. இருப்பினும், ரிஸ்க் பேலன்ஸ் செய்ய தங்களின் அணுகுமுறை சரியானதே.

எஸ்பிஐ புளூசிப் இருப்பதால், எஸ்பிஐ மேக்னம் மிட்கேப் திட்டத்துக்குப் பதிலாக ஃப்ராங்க்ளின் இந்தியா ப்ரைமா ஃபண்டில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம், கடந்த 20 வருட எஸ்ஐபி முதலீட்டில் வருடத்துக்கு 24.39% லாபம் கொடுத்துள்ளது. தாங்கள் தேர்வு செய்த மற்ற திட்டங்களின் கடந்த கால செயல்திறனும் நன்றாக உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட நல்ல ஏஜென்சி மூலம் முதலீடு செய்வது அதிக பலன் கொடுக்கும். நல்ல ஏஜென்சியை சில மணி நேரம் செலவிட்டு தேர்வு செய்யுங்கள். அவர் உங்களுக்கு என்றும் உதவிகரமாக இருப்பார். நல்ல ஏஜென்சியை எவ்வாறு கண்டுபிடிப்பது? இதற்கு சில கேள்விகளை கேளுங்கள். என்எஃப்ஓ  திட்டங்கள் பரிந்துரை செய்பவரா, கமிஷனில் ஒரு பகுதி கொடுப்பவரா, சேவைக்கு தனித்தனியே சார்ஜ் செய்பவரா, என்ஏவி குறைவான திட்டங்களை பரிந்துரை செய்கிறாரா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘இல்லை’ என்று பதில் கிடைத்தால், அவரை தேர்வு செய்யலாம். மேலும், அவர் தங்களின் மியூச்சுவல் ஃபண்ட் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்க வேண்டும்; தொடர்ந்து பராமரிக்க  வேண்டும். மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறை போர்ட்ஃபோலியோ ரிப்போர்ட் அனுப்புபவராக இருக்க வேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தேர்வு செய்யுங்கள்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்