ஷேர்லக்: நிஃப்டி சார்ட்டில் தொங்கும் மனிதன்!

தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்க, இருட்டியபின் நம் அலுவலகத்தில் நுழைந்தார் ஷேர்லக். வந்தவருக்கு சில்லென்ற நன்னாரி சர்பத் தந்து வரவேற்றோம். கேள்விகளையும் கேட்கத் தொடங்கினோம்.

‘‘ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரித்து இருக்கிறதே?’’ என்று முதல் கேள்வியைக் கேட்டோம்.

‘‘கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.4,438 கோடி ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து மாதங்களில் அதிகபட்ச முதலீடு. கடந்த நவம்பரில் ரூ.6,379 கோடி ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்யப்பட்டது. அதற்கடுத்த நான்கு மாதங் களும் சந்தை வாலட்டை லிட்டியாக இருந்ததன் காரணமாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு குறைவாகவே இருந்தது.

கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே ரூ.3,644 கோடி, ரூ.2,914 கோடி, ரூ.2,522 மற்றும் ரூ.1,370 கோடி என ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இப்போது சந்தை சற்று பாசிட்டிவான சிக்னல்களைக் காட்டுவதால், ஈக்விட்டி ஃபண்டு களில் முதலீடு அதிகரித்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டில் மொத்தமாக ரூ.1,70,000 கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது’’ என்றார் ஷேர்லக்.

‘‘சமீபத்தில் ஐபிஓ வந்த பங்குகள் பங்குச் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கின்றனவே, என்ன காரணம்?’’ என்று வினவினோம்.

‘‘டயக்னாஸ்டிக் நிறுவனமான தைரோகேர் ரூ.446-க்கு சமீபத்தில் ஐபிஓ வந்தது. 73% கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டு முதலீட்டாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கடந்த திங்கள்கிழமை தொடங்கிய அதன் முதல் நாள் வர்த்தகத் திலேயே அதன் வெளியீட்டு விலையைக் காட்டிலும் 49% உயர்ந்து வர்த்தகமாகியது. அடுத்தடுத்த நாட்களிலும் 2 % முதல் 3% விலை ஏற்றம் இருக்கிறது. தற்போது டயக்னாஸ்டிக் துறையில் இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த நிறுவனப் பங்குகளுக்கு தொடர் வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது.

கடந்த செவ்வாய் அன்று உஜ்ஜிவான் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அன்றைய வர்த்தகத்தில் வெளியீட்டு விலையைவிட  10% விலை ஏற்றத்தில் வர்த்தகமானது.

ஐபிஓ முடிந்து 12 நாள்களில் பங்குச் சந்தையில் பங்குகள் பட்டியலிடப்பட்டது. இது பிற்பாடு 6 நாள்களாக குறைக்கப்பட்டது. இதை மூன்று நாள்களாக குறைக்க செபி திட்டமிட்டு வருகிறது’’ என்றார்.

‘‘சந்தை இறக்கத்தை பயன்படுத்தி எல்ஐசி பல பங்குகளில் தனது முதலீட்டை அதிகரித்திருக்கிறதே!’’ என்றோம்.

‘‘உண்மைதான். கடந்த மார்ச் காலாண்டில் சந்தை ஏற்ற இறக்கத்தை பயன்படுத்தி எல்ஐசி, சென்செக்ஸ் 30 நிறுவனங்களில் 13 நிறுவனங்களில் அதன் பங்கு முதலீட்டை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், மாருதி சுஸூகி, என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், சிப்லா ஆகிய நிறுவனங்களில் எல்ஐசி தனது முதலீட்டை உயர்த்தி இருக்கிறது’’ என்றார்.

‘‘காலாண்டு முடிவுகள் எப்படி வந்துகொண்டிருக்கிறது?’’ என்று விசாரித்தோம்.

‘‘வாராக் கடனுக்கு அதிக நிதி (ரூ.814 கோடி) ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதால், சென்னையை சேர்ந்த இந்தியன் பேங்க்-ன் நிகர லாபம் 59% வீழ்ச்சி கண்டுள்ளது.

தனியார் துறையை சேர்ந்த கோட்டக் மஹிந்திரா பேங்க் கடந்த மார்ச் காலாண்டில் ரூ. 696 கோடியை நிகர லாபமாக சம்பாதித்துள்ளது. விற்பனை இரட்டை இலக்கத்தில் அதிகரித்த தால், ஏசியன் பெயின்ட்ஸ் நிகர லாபம் 20% அதிகரித்திருக்கிறது.

டாக்டர் ரெட்டீஸ் லேபாரெட்டரீஸ்-ன் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 86% வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், வெனிசூலா நாட்டில் உள்ள பிரிவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததாகும்.

மேகி நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கும்  நிறுவனமான நெஸ்லே-ன் நிகர லாபம் 19% குறைந்துள்ளது. விற்பனை குறைந்து போனதே காரணம்.

வாராக் கடனுக்கான ஒதுக்கீடு இரு மடங்கு அதிகரித்து ரூ. 653 கோடியாக உயர்ந்துள்ளதால், விஜயா பேங்க்-ன் நிகர லாபம் 26% வீழ்ச்சிக் கண்டுள்ளது. புதிதாக ஐபிஓ வந்த சென்னையை சேர்ந்த மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமான ஈக்விடாஸ்-ன் நிகர லாபம் 28% அதிகரித்துள்ளது.
புதிய பொருட்கள் அறிமுகம் மற்றும் தீவிர சந்தைப்படுத்துதல் போன்றவற்றால் நான்காம் காலாண்டில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் (ஹெச்யூஎல்) நிகர லாபம் 7% அதிகரித்துள்ளது’’ என்று ஒரு பட்டியலை வாசித்தார்.

‘‘சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?’’ என்று அவர் கிளம்பும்முன் கேட்டோம்.

‘‘நிஃப்டி புள்ளிகள் 8000-ஐ தாண்ட முயற்சிக்கிறது. ஆனால், முடியவில்லை. நிஃப்டி தினசரி கேண்டில் சார்ட்கள்படி பார்த்தால், தொங்கும் மனிதன் (Hanging Man) பேட்டர்ன் உருவாகி இருக்கிறது.  பொதுவாக, இந்த மாதிரியான பேட்டர்ன் வந்தால் சந்தை வரும் நாட்களில் கணிசமான இறக்கம் காணும்.  நிஃப்டி அதன் கிரிட்டிக்கல் ரெசிஸ்டன்ஸ்-ஆன 7,900-க்கு கீழே வெள்ளிக்கிழமை 7814-ல் நிலை பெற்றிருக்கிறது. புள்ளிகள் 7900-க்கு ஏறினால், 8000 என்பது புதிய இலக்காக இருக்கும். இல்லை என்றால், சந்தை வரும் நாட்களில் இறக்கம் காணும். எச்சரிக்கையுடன் டிரேடிங் செய்யுங்கள்’’ என்று எச்சரித்து விட்டுப் புறப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்