செல்லப் பிராணிகளுக்கு சிறப்பான உணவுகள்!

லாபம் தரும் தொழில்கள்...த.சக்திவேல்

தி காலத்தில் இருந்து மனிதனுக்கும் விலங்குகளுக்கும் நெருங்கிய உறவு இருந்து வருகிறது. அதனால் விலங்குகளுடன் மனிதனும், மனிதனுடன் விலங்குகளும் சுலபமாக பழகி நல்ல பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது.

மக்கள் தங்களின் பாதுகாப்புக்காக, அன்பை பகிர்ந்துகொள்வதற்காக மற்றும் பல்வேறு காரணங்களுக்காக நாய், பூனை, லவ் பேர்ட்ஸ், வண்ண மீன்கள் போன்ற உயிரினங்களை தங்களின் குழந்தைகளைப் போல வளர்த்து வருகின்றனர்.

தங்களின் அன்புக்குரிய செல்லப்பிராணிகளை நோயிலிருந்து பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் பிரத்யேகமான உணவும், பராமரிப்பும் தேவைப்படுகிறது. அதனால் மக்கள் செல்லப் பிராணிகளின் உணவுக்காக, அதன் நலனுக்காக வாரம் தோறும் அல்லது மாதம் தோறும் கணிசமான தொகையை செலவிடத் தயாராகவே இருக்கின்றனர்.  இதனால் செல்லப் பிராணிகளுக்கான உணவை விற்பனை செய்கிற கடைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

செல்லப் பிராணிகளுக்கான உணவை விற்பனை செய்கிற கடையை ஆரம்பிக்க வேண்டுமெனில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டியிருக்கும், இந்தத் தொழிலில் இருக்கின்ற பிசினஸ் வாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி தையோ ஃபீட் மில் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.பிராபகரிடம் கேட்டோம். அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

‘‘வெளிநாடுகளைப் போல, நம் நாட்டிலும் செல்லப் பிராணிகளின் மீதான ஆர்வமும், ஈர்ப்பும்  அதிகரித்து வருகிறது. அதனால் வரும் காலத்தில் செல்லப் பிராணிகளுக்கான உணவை விற்பனை செய்கிற கடைகளுக்கானத் தேவை அதிகரிக்கவே செய்யும். இன்னும் சில வருடங்களில் பெரிய பெரிய மால்களில்கூட 5,000 சதுர அடிகளில் செல்லப் பிராணிகளுக்கான உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. அதனால் இந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபடுவது என்பது ஒரு சிறந்த முதலீடாகவே இருக்கும்.

மாநகராட்சி அல்லது நகராட்சியிடம் பதிவு செய்து உரிமம் பெற்று எப்படி கடைகளை ஆரம்பிக்கிறோமோ, அதே முறையில்தான்  செல்லப் பிராணிகளுக்கான உணவை விற்பனை செய்கிற கடையையும் ஆரம்பிக்க முடியும்.

சிறிய அளவில், தரமான கடையை ஆரம்பிக்க குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வரை தேவைப்படும். கடை மெயின் ரோட்டில்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மற்ற கடைகளைப் போல அல்லாமல் வாடிக்கையாளர்களே நம்மைத் தேடி வந்து பொருட்களை வாங்குவதால் மக்கள் அடிக்கடி வந்துபோகிற இடத்தில் குறைந்தபட்சம் 500 சதுர அடி இடம் இருந்தாலே போதும், நம்மால் செல்லப் பிராணிகளுக்கான உணவை விற்பனை செய்கிற கடையை திறந்துவிட முடியும்.

பெரும்பாலும் அதிகமான வீடுகளில் செல்லப் பிராணியாக நாய்தான் இருக்கிறது. ரூ.1,000-லிருந்து ரூ.1,00,000 வரையிலான விலையுள்ள நாய்களை செல்லப் பிராணியாக மக்கள் வளர்த்து வருகின்றனர். நாய்க்கான உணவு ஒரு கிலோ ரூ.200-லிருந்து ரூ.700 வரைக்கும் இருக்கிறது. அதனால் நாய்க்குத் தேவையான அனைத்து உணவு வகைகளும் நம் கடையில் இருக்க வேண்டும். அனைத்து வகையான வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்துகிற மாதிரி குறைந்த விலையிலும், அதிக விலையிலும் உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும். உணவு வகைகள் மட்டுமல்லாமல் நாய்க்கு போட வேண்டிய சங்கிலிகளும் எல்லா விலையிலும் இருக்க வேண்டும்.

தங்களின் குழந்தைகளைவிட அதிகமான பாசத்தை செல்லப் பிராணிகளின் மீது மக்கள் வைத்திருக்கின்றனர். அதனால் அவர்கள் பிராண்டு அல்லாத உணவுப் பொருட்களை அதிகமாக விரும்புவதில்லை. வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்குத் தகுந்த மாதிரி பிராண்டுகளை தேர்வு செய்துகொள்ள வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெடிகிரி, ராயல் கானின் போன்ற பிராண்டு உணவுப் பொருட்களும், இந்தியத் தயாரிப்பான பைரோ போன்ற பிராண்டுகளும் இருக்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கென்று ஆர்கானிக் உணவுப்பொருட்களும் இப்போது அறிமுகமாகி இருக் கிறது. அவையும் நம் கடையில் இருக்க வேண்டும்.

கடைக்கு வேண்டிய உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கும்போது கணக்குவழக்குகளை சரியாக செட்டில்மென்ட் செய்து வந்தால் நிறுவனமே தேவைப்படும்போது கடைக்கு வேண்டிய உணவுப் பொருட்களை கடனுக்குக்கூட கொடுக்கும். இந்தத் தொழிலில் நாணயமும், ஒழுங்கும், நம்பிக்கையும்தான் முக்கியம். இதைப் பொறுத்துதான் நம்முடைய வளர்ச்சி இருக்கும்.

இந்தத் தொழிலில் வாடிக்கையாளர்களின் சேவை என்பது மிக முக்கியம். பெரும்பாலும் செல்லப் பிராணிகளுக்கான உணவுப் பொருட்களை விற்கும் கடையில் யாரும் செல்லப் பிராணிகளையும் விற்பனை செய்வதில்லை. இனிமேல் புதிதாக கடையை ஆரம்பிக்கிறவர்கள் உணவுப் பொருட்களுடன், செல்லப் பிராணிகளையும் விற்பனை செய்ய வேண்டும். வாடிக்கையாளர் ஒருவர் நம் ஊரில் இருக்கும் கடையில் நாய் வாங்க வருகிறார் என்றால் அவருக்குப் பிடித்தமான நாய் இருக்கும் புகைப்படத்தைத்தான் காட்டுகிறோம். அந்த நாயை நேரில் காட்டுவதில்லை. இது வாடிக்கையாளரை திருப்திபடுத்தாது.

வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான நாய்கள் புகைப்படமாக இல்லாமல், உயிருடன் நம் கடையில் இருக்க வேண்டும். வாடிக்கையாளர் நாயைப் புகைப்படத்தில் பார்ப்பதைவிட, நேரில் பார்த்து அதை தூக்கிப் பார்க்கும்போது அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உடனே வாங்கிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளிநாட்டில் இந்த முறையைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

வாடிக்கையாளர் உங்களின் கடைக்குள் நுழைந்தால் செல்லப் பிராணிகள் சம்பந்தமான எல்லாமுமே கிடைக்க வேண்டும். அவர்கள் தங்களுக்குத் தேவையானதை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.இந்த பிசினஸில் நல்ல லாபம் கிடைக்கவேண்டுமெனில் இலவசமாக டோர் டெலிவரி செய்தால் நம்மால் இன்னமும் கூடுதலாக சம்பாதிக்க முடியும். வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்தவும் முடியும்.

ஒவ்வொரு விலங்குக்கும், ஒவ்வொரு பறவைக்கும் விசாலமான கூண்டுகள் இருக்க வேண்டும். ஒரே இடத்தில் போட்டு எல்லாவற்றையும் அடைத்துவிடக் கூடாது. இப்படி விசாலமாக வைத்துக் கொண்டால் பறவைகளும், மற்ற பிராணிகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

பேச்சுத் திறமை இருந்தாலே போதும் யார் வேண்டுமானாலும் செல்லப் பிராணிகளுக்கான உணவுப் பொருட்களை விற்பனை செய்கிற இந்த பிசினஸை செய்ய முடியும். செல்லப் பிராணிகளை விற்பனை செய்யத்தான் பிராணிகளைப் பற்றிய அறிவும், அனுபவமும் தேவைப்படும். இந்தத் தொழிலில் குறைந்தபட்சம் மாதம் ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000 வரை நம்மால் சம்பாதிக்க முடியும்.

இந்த பிசினஸில் இருக்கிற ரிஸ்க் என்னவென்று பார்த்தால், உயிரினங்களை சரியாக பராமரிப்பதுதான். பிராணிகள் சரியாக பராமரிக்காமல் இறந்து விட்டால் நஷ்டமடைய வாய்ப் பிருக்கிறது. மற்றபடி வருங்காலத் தில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகிற பிசினஸில் இதுவும் ஒன்று.
வெறுமனே ஒரு தொழில் செய்கிறோம் என்று நினைக்கா மல், ஒரு உயிரின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வைக்கிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்த பிசினஸை செய்தால் நம்மால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும்.

குறைந்த முதலீட்டில், அதிகமான லாபம் தரக்கூடிய இந்தத் தொழிலுக்கான வாய்ப்புகள் நான்கு பக்கமும் இருப்பதால் புதிதாக பிசினஸ் செய்ய நினைப்பவர்கள் இதையும் மனதில் கொள்ளலாமே!

படங்கள் : ப.சரவணக்குமார்.


இந்திய முதலீடுகளை நிறுத்திவிட மெர்சிடஸ் முடிவு!

உலகிலேயே காற்று அதிகமாக மாசுபட்டுள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி இடம்பிடித்திருப்பதை அடுத்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது டெல்லி அரசு. அதன் ஒரு கட்டமாக டெல்லியில் 2,000 சிசி-க்கு மேலான டீசல் கார்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதலீடுகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

டெல்லியில் மெர்சிடஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு காரான ஜிஎல்எஸ் 350 டி மாடல் காரை அறிமுகப்படுத்தி பேசிய அதன் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் ரோலண்ட் ஃபோல்கர், இந்தியாவில் பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் முற்றிலும் ரத்து செய்யப்படவில்லை. ஆனால், அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார். உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை நீடிக்கும் வரை தங்கள் நிறுவனம் புதிய முதலீடுகளை மேற்கொள்ளப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick