வருமான வரியைச் சேமித்து வளமான லாபம் பெறலாம்!

வழி காட்டும் டிப்ஸ்!சி.சரவணன்

நிதி ஆண்டு கடந்த ஏப்ரல் மாதமே ஆரம்பித்துவிட்டது. நம்மில் பலர் வருமான வரியை மிச்சப்படுத்துவதற்கான முதலீட்டை ஆரம்பித்திருப்போமா என்றால் சந்தேகம்தான். கடைசி நேரத்தில் முதலீடு செய்வது மூலம் நிதிச் சிக்கலை சந்திப்பதோடு, சரியான முதலீட்டைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

இவற்றை தவிர்க்க, இப்போதே சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்ஐபி முறையில் முதலீட்டை ஆரம்பித்துவிடுவது நல்லது.

இந்த எஸ்ஐபி முதலீட்டை ஆரம்பிக்கும்முன் இரண்டு விஷயத்தை கட்டாயம் கவனிக்க வேண்டும். முதல் விஷயம், உங்களின் ஆண்டு சம்பளம் / வருமானம் நடப்பு 2016-17-ம் நிதி ஆண்டில் தோராயமாக எவ்வளவாக இருக்கும் என்பதை கணக்கிடுவது; இரண்டாவது விஷயம், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசி எடுத்துவிட்டீர்களா என்பதை உறுதி செய்வது.

வரியைச் சேமிக்க யார் முதலீடு செய்யலாம்?


உங்களின் வயது 60-க்குள் இருந்து, இந்த நிதி ஆண்டில் உங்கள் வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது வருமான வரி கட்ட வேண்டி வரும். (மற்ற வயதினருக்கான விவரங்கள் அட்டவணையில்) இந்த வருமான வரியைக் கட்டாமல் மிச்சப்படுத்த சில பல வழிமுறைகளை மத்திய அரசு அளித்திருக்கிறது. அதில் சில செலவுகளும் பல முதலீடுகளும் அடங்கும்.

உதாரணத்துக்கு, ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.35,000 எனில், அவரது ஆண்டு சம்பளம் ரூ.4.20 லட்சம். அவருக்கு சம்பளத்தில் பிராவிடெண்ட் ஃபண்டுக்காக அந்த நிதி ஆண்டில் ரூ.36,000 பிடிக்கப்பட்டு, வீட்டுக் கடன் வட்டி மற்றும் அசல் சேர்த்து 1.40 லட்சமும் கட்டியிடிருந்தால், அவர் வருமான வரி எதுவும் கட்டத் தேவை இருக்காது. இது போன்ற பல முதலீடுகளை சம்பளத்திலிருந்து கழித்துக் கிடைக்கும் தொகை ரூ. 2.5 லட்சத்தை தாண்டும்போது அதற்கு வரி கட்ட வேண்டி வரும்.

உங்கள் வருமானம் எவ்வளவு?

உங்களின் ஆண்டு மொத்த சம்பளம் கிட்டத்தட்ட எவ்வளவு இருக்கிறது என்பதை முதலில் கணக்கிடுங்கள். நீங்கள் செய்யும் எந்தெந்த செலவுகளுக்கு மற்றும் முதலீடுகளுக்கு வரிச் சலுகை இருக்கிறது என்பதை கீழே தந்திருக்கிறோம். முதலில் செலவுகளைக் கழித்துவிட்டு, அதனையும் தாண்டி வரி கட்ட வேண்டிவரும் என்கிறபட்சத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

அவசியமான இரு இன்ஷூரன்ஸ் பாலிசிகள்!

வரிச் சேமிப்புக்கான முதலீட்டை ஆரம்பிக்கும்முன் நீங்கள் எவ்வளவு தொகைக்கு ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதை கணக்கிடுங்கள். உங்களின் தற்போதைய ஆண்டு சம்பளத்தை போல் ஏறக்குறைய 10 மடங்கு அளவுக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறீர்கள் எனில், புதிதாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கத் தேவை இல்லை.  ஏற்கெனவே எடுத்த கவரேஜ் தொகை குறைவாக இருப்பவர்கள் மீதி தொகைக்கும் டேர்ம் பிளான் எடுத்துக் கொள்ளுங்கள். எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தவிர்ப்பது நல்லது. அதில், வருமானம் என்று பார்த்தால் சுமார் 5%க்குள் இருக்கும்.

இரண்டாவதாக, மருத்துவக் காப்பீட்டு பாலிசியை அனைவரும் அவசியம் எடுத்து வைத்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் இந்த பாலிசி எடுப்பது அவசியம். கவரேஜ் என்பது ரூ.2 லட்சம் தொடங்கி, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, குடும்பத்தில் முன்னோருக்கு நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை பாதிப்புகள் இருப்பது போன்றவற்றின் அடிப்படையில் அதிகரித்துக் கொள்ளலாம்.

ஆயுள் காப்பீட்டுக்கு கட்டும் பிரீமியத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் வரிதாரர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கு எடுக்கும் பாலிசிக்கான பிரீமியத்தில் ரூ.25,000 வரைக்கும் 80டி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற முடியும். வரிதாரர் தன் பெற்றோருக்கு இந்த பாலிசியை எடுத்துக் கொடுத்தால், அவர்களுக்கு கட்டும் பிரீமியத்துக்கு ரூ.25,000 வரிச் சலுகை பெற முடியும். வரிதாரர் மூத்த குடிமக்கள் என்கிறபோது ரூ.30,000 வரை கட்டும் பிரீமியத்துக்கு வரிச் சலுகை கிடைக்கும்.

குழந்தைகளின் படிப்புக்கு!

நாம் வாங்குகிற சம்பளத்தில், அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% பிராவிடெண்ட் ஃபண்டாகப் பிடிக்கப்படுகிறது. இந்தத் தொகையை வரிச் சலுகைக்காக வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால் அவர்களின் கல்விக் கட்டணத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. இரு பிள்ளைகளின் பள்ளிக் கல்வி கட்டணங்களுக்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை உள்ளது.

வீட்டுக் கடனுக்கு வரிச் சலுகை!

வீட்டுக் கடன் வாங்கி இருந்தால், திரும்ப செலுத்தும் அசலுக்கும் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை இருக்கிறது. இதில், திரும்பக் கட்டும் வட்டிக்கு தனியே வரிச் சலுகை உண்டு(பிரிவு 24). வீட்டில் குடியிருந்தால் வட்டியில் நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை உண்டு. இதுவே, வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், முழு வட்டிக்கும் வரிச் சலுகை இருக்கிறது. வேலை பார்க்கும்  கணவன் - மனைவி என்கிறபோது, வீட்டுக் கடன் வாங்கினால் சேர்ந்து வாங்குங்கள். அப்போது தனித் தனியாக வரிச் சலுகை பெறுவது மூலம் கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும். 

வரிச் சலுகை பிராக்டிகல் டிப்ஸ்

ஒருவர் பிஎஃப், ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்பீடு பாலிசிகளுக்கான பிரீமியம், பிள்ளைகள் கல்விக் கட்டணம் (இருக்கும்பட்சத்தில்) ஆகியவற்றுக்கு செலுத்தும் தொகையை வருமானத்திருந்து கழித்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு வரியை மிச்சப்படுத்த சேமிக்க வேண்டும் என்றால் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

வரிச் சேமிப்புக்கான முதலீட்டை ஆரம்பிக்கும்முன், அந்தத் தொகை எவ்வளவு நாள் கழித்து தேவை, உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் எவ்வளவு போன்றவற்றை கவனிப்பது அவசியம்.

ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு..!

நம்மில் பலர் முதலீட்டில் ரிஸ்க் எடுக்க அதிகம் தயங்குவார்கள். ரிஸ்க் அதிகம் இல்லாத, அதே சமயத்தில் வரிச் சலுகையையும் பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளில் அவர்கள் முதலீடு செய்யலாம்.

1. விருப்ப பிஎஃப்!

பணியாளர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப்-ஐ போல் இரு மடங்கு அல்லது அதே அளவுக்கு அல்லது அதில் பாதி அளவுக்கு சம்பளத்தில் விருப்ப பிஎஃப் (விபிஎஃப்) பிடிக்கச் சொல்லலாம். விபிஎஃப்-ஐ  சம்பளத்தில் பிடிக்க அலுவலக கேஷியரிடம் சொல்லலாம். இந்தத் தொகைக்கும் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.  

வருமானம்: ஆண்டுக்கு 8.8% (மாற்றத்துக்கு உட்பட்டது)

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: பணி ஓய்வு வரை வரிச் சலுகை: முதலீடு மற்றும் வருமானம்

குறிப்பு: இடையில் ஏதாவது தேவைக்கு பிஎஃப் கடன் வாங்கும்போது, இந்த விபிஎஃப் முதலீட்டு தொகை அதற்கு சேர்ந்திருக்கும் வட்டி வருமானம் போன்றவற்றையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

2. பிபிஎஃப்!

பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பிபிஎஃப்) திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கப்பட்டாலும் இதில் முதலீடு செய்யலாம்

வருமானம்: ஆண்டுக்கு 8.1% (மாற்றத்துக்கு உட்பட்டது)

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: 15 ஆண்டுகள்

வரிச் சலுகை: முதலீடு மற்றும் வருமானம்

குறிப்பு: சம்பளத்தில் விபிஎஃப் பிடிக்கும் வசதி இருப்பவர்கள் பிபிஎஃப் முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது. மிக நீண்ட (15 ஆண்டு) கால திட்டம் என்றாலும் இடையில் நிபந்தனைக்கு உட்பட்டு கடன் பெறும் வசதி உண்டு. 

3. சுகன்யா சம்ரிதி யோஜனா!

10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை உள்ள பெற்றோர் இதில் முதலீடு செய்யலாம்.

வருமானம்:
ஆண்டுக்கு 8.6% (மாற்றத்துக்கு உட்பட்டது)

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: பிள்ளையின் 18 வயது வரை

வரிச் சலுகை:
முதலீடு மற்றும் வருமானம்

குறிப்பு: 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இருப்பவர்களுக்கு ஏற்ற திட்டம் என்றாலும் பிஎஃப் வட்டியை விட குறைவு என்பதால் விபிஎஃப்-ல் முதலீட்டை அதிகரிப்பது லாபகரமாக இருக்கும்.

4. என்எஸ்சி!

தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி), தபால் அலுவலக திட்டம்.

வருமானம்: ஆண்டுக்கு 8.1% (மாற்றத்துக்கு உட்பட்டது)

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: 5 ஆண்டுகள்

வரிச் சலுகை:
முதலீட்டுக்கு வரிச்  சலுகை. வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும்

குறிப்பு:  வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பது நெகட்டிவ் பாயின்ட்.

இந்த முதலீட்டுக்கு பதில் விபிஎஃப்-ஐ கவனிக்கலாம்.

5. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கானது. 

வருமானம்: ஆண்டுக்கு 8.6% (மாற்றத்துக்கு உட்பட்டது)

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: 5 ஆண்டுகள்

வரிச் சலுகை: முதலீட்டுக்கு வரிச்சலுகை. வருமானத்துக்கு வரி உண்டு

குறிப்பு: வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்றாலும்  மற்ற முதலீடுகளை விட அதிக வட்டி என்பதால் வருமான வரி வரம்புக்குள் வரும் மூத்த குடிமக்கள் இதில் முதலீடு செய்யலாம்.

6. தபால் அலுவலக 5 ஆண்டு டைம் டெபாசிட்


வருமானம்: ஆண்டுக்கு 7.9%

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்

வரிச் சலுகை: முதலீட்டுக்கு உண்டு. வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும்.

குறிப்பு: இதர முதலீடுகளை வட்டி குறைவு மற்றும் வருமானத்துக்கு வரி என்பதால் தவிர்ப்பது நல்லது.

7. எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்

ஆயுள் காப்பீடு மற்றும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொண்ட இன்ஷூரன்ஸ் பாலிசிகள். 

வருமானம்: ஆண்டுக்கு சுமார் 5%

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்

வரிச் சலுகை: முதலீடு மற்றும் இழப்பீடு / முதிர்வு தொகை

குறிப்பு: இந்த பாலிசிக்கு பதில் டேர்ம் பிளான் எடுத்துவிட்டு மீதியை விபிஎஃப், பிபிஎஃப் போன்றவற்றவற்றில் முதலீடு செய்யலாம்.

8. வங்கி வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டுகள்


வருமானம்: ஆண்டுக்கு 7.5 -8%

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: 5 ஆண்டுகள்

வரிச் சலுகை:
முதலீட்டுக்கு உண்டு. வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும்.

குறிப்பு: இதர முதலீடுகளை விட வட்டி குறைவு மற்றும் வருமானத்துக்கு வரி என்பதால் வேறு முதலீட்டு வாய்ப்புகள் இல்லாதபட்சத்தில் மேற்கொள்ளலாம். பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.

ரிஸ்க் எடுக்க தயார் என்பவர்களுக்கு..!

 1. வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் - இஎல்எஸ்எஸ்!


வருமானம்:
பங்குச் சந்தை செயல்பாட்டை பொறுத்தது.

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: 3 ஆண்டுகள்

வரிச் சலுகை: முதலீடு, டிவிடெண்ட் மற்றும் வருமானத்துக்கு வரி இல்லை.

குறிப்பு: இருப்பதிலேயே குறைவான முதலீட்டுக் காலம் கொண்ட வரிச் சலுகை திட்டம். இது பங்குச் சந்தை சார்ந்தது என்றாலும் மூன்றாண்டுக்கு மேல், லாக் இன் பிரீயட் இருப்ப தால் ரிஸ்க் பரவலாக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் டாப் 10 இஎல்எஸ்எஸ் ஃபண்டுகள் ஆண்டுக்கு 20% தொடங்கி 25% வரை வருமானம் கொடுத்திருக்கின்றன.  

2. யூலிப் பாலிசிகள்!

வருமானம்: பங்குச் சந்தை செயல்பாட்டை பொறுத்தது.

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: 5 ஆண்டுகள்

வரிச் சலுகை: முதலீடு, இழப்பீடு மற்றும் முதிர்வு தொகைக்கு வரி இல்லை.

குறிப்பு: அதிகக் கட்டணம், பாலிசி காலம் முழுக்க தொடர வேண்டிய கட்டாயம் போன்றவற்றால் தவிர்ப்பது நல்லது.

3.ரிட்டையர்டுமென்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்!

வருமானம்: பங்குச் சந்தை செயல்பாட்டை பொறுத்தது. கடந்த ஐந்தாண்டுகளில் 9 முதல் 12% வருமானம். 

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: 5 ஆண்டுகள்

வரிச் சலுகை: முதலீட்டுக்கு வரிச் சலுகை. வருமானத்துக்கு வரி இருக்கிறது.

குறிப்பு: 58 வயதுக்குமுன் அல்லது முதலீடு தொடங்கி 5 ஆண்டுக்குள் பணத்தை எடுத்தால் வெளியேறும் கட்டணம் உண்டு.

மேலே கண்ட ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு மற்றும் ரிஸ்க் எடுக்க தயார் என்பவர் களுக்கு முதலீடுகள் எல்லாம் சேர்ந்து 80சி பிரிவின் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை பெறலாம்.

சில யோசனைகள்!

வரிச் சலுகைக் காக முதலீடு செய்யும்போது மொத்த முதலீட்டையும் ரிஸ்க் இல்லாத அல்லது ரிஸ்க் உள்ள திட்டங்களில் சிலர் மேற் கொள்கிறார்கள். அப்படி செய்யாமல் இரு பிரிவுகளிலும் கலந்து முதலீடு செய்வதால் அதிக வருமானத்தைப் பெறலாம்.

சிலர் வருமான வரியை மிச்சப்படுத்துவதற்கான முதலீட்டை ஓய்வுக்காலம் வரை கொண்டு செல்வார்கள். அப்படி செய்வது நல்லதுதான் என்றாலும், குறிப்பிட்ட ஆண்டில் திடீர் செலவுகள் அதிகரிக்கும்போது, வரிச் சேமிப்புக்கு முதலீடு செய்ய பணம் இருக்காது. அது போன்ற நேரங்களில், இஎல்எஸ்எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்து லாக்-இன் பிரீயட் முடிந்து, லாபகரமாக இருக்கும்பட்சத்தில் யூனிட்களை விற்று மறு முதலீடு செய்து, அந்த ஆண்டு கூடுதல் வரிச் சலுகை பெற முடியும்.

வரிச் சலுகை முதலீட்டை மேற்கொள்ள ஜனவரி வரை காத்திருக்காமல் இப்போதே திட்டமிட்டு முதலீட்டை ஆரம்பித்துவிடுவது நல்லது. ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே முதலீட்டை மேற்கொள்வதால், நல்ல வருமானமும் கிடைக்கும்.

அரசு தரும் வரிச் சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு  லாபம் பார்ப்பது புத்திசாலித்தனம்!

என்பிஎஸ்..!

என்பிஎஸ் (நேஷனல் பென்ஷன் சிஸ்டம்) முதலீட்டுக்கு தனியே ரூ.50,000. கூடுதல் வரிச் சலுகை {பிரிவு 80சிசிடி (1பி)} அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ரிஸ்க் எடுப்பவர்கள், ரிஸ்க் எடுக்காதவர்கள் மற்றும் வயதுக்கு ஏற்ற முதலீடு என தனித்தனியே ஆப்ஷன்கள் உள்ளன.

வருமானம் : தற்போதைய நிலையில் பிஎஃப்-ஐவிட ஓரிரு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. 

முதலீட்டை வைத்திருக்க வேண்டிய காலம்: பணி ஓய்வு வரை

வரிச் சலுகை: முதலீட்டுக்கு இருக்கிறது.

குறிப்பு:
என்பிஎஸ் முதிர்வு தொகையில் 40% தொகைக்கு வரி இல்லை. மீதி 60% தொகைக்கு வரி உண்டு.


வரிச் சலுகைக்கான முதலீடு: எப்படி செய்கிறார்கள்?

மல்லிகா சுந்தரேசன், புதுச்சேரி

“நான் ஓய்வு பெறும்போது, உதவிகரமாக இருக்கும் விதமாக வரிச் சேமிப்பு முதலீட்டைத் தேர்ந்தெடுத்துள்ளேன். ரிட்டையர்மென்ட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்முன் பிபிஎஃப், எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்த்தேன். வரிச் சலுகை, பணவீக்கத்தை தாண்டிய வருமானம், நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு தொகுப்பு நிதி ஆகியவற்றுக்காக இந்தத் திட்டத்தில் மாதம் எஸ்ஐபி முறையில் ரூ.5,000 முதலீடு செய்து வருகிறேன்.”

ரவிச்சந்திரன், மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட், சென்னை.


‘‘நான் கடந்த மூன்று வருடங்களாக வரி சேமிப்புக்காக அஞ்சலகத்தில் என்எஸ்சியில் ரூ.50,000 முதலீடு செய்து இருக்கிறேன். வங்கியில் டாக்ஸ் சேவிங்  ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.30,000 முதலீடு செய்திருக்கிறேன். இன்ஷுரன்ஸில் பிரீமியமாக ரூ.70,000 முதலீடு செய்திருக்கிறேன்.’’

அரி அரவேலன், தனியார் நிறுவன ஊழியர், மதுரை.


“நான் கடந்த ஐந்து வருடங்களாக இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில் ரூ.1,50,000 முதலீடு செய்து வருகிறேன். வரி சேமிப்புக்காகவும், கூட்டு வட்டியை மனதில் வைத்தும், வருமானத்துக்காகவும் முதலீடு செய்திருக்கிறேன். மியூச்சுவல் ஃபண்டின் வளர்ச்சி சீராக இருப்பதால் இதில் முதலீடு செய்து இருக்கிறேன்.”

-த.சக்திவேல்


ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம்!

ரிஸ்க் எடுக்க நினைக்கும் இளவயதினர், ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம் -ல் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். ஆனால், அதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. பங்குச் சந்தை சார்ந்த  சேமிப்புத் திட்டமான இதில் ரூ.12 லட்சத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் இருப்பவர்கள் நேரடியாக பங்குகள் அல்லது அதற்கு என இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.50,000 முதலீடு செய்தால், 50% வரிச் சலுகை, அதாவது ரூ.25,000 கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து இப்படி வரிச் சலுகை பெற முடியும். மேலும், முதலீட்டாளர் பங்குச் சந்தை முதலீட்டை புதிதாக மேற்கொள்பவராக இருக்க வேண்டும். லாக் இன் பிரீயட் 3 ஆண்டுகள். இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவு இல்லை. காரணம், இதில் உள்ள பல நிபந்தனைகளே! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick