மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கொடிநாட்டும் கோவை தோழிகள்!

முதலீடு என்பது ஆண்களின் சாம்ராஜ்யமாகவே  இருக்கிறது. அதிலும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகம் செய்பவர்களில் பலர் ஆண்கள்.  என்றாலும், இந்த முதலீட்டு உலகத்தில் நுழைந்து தங்கள் திறமையை முழுவதுமாகக் காட்டி  முன்னேறி வருகின்றனர் கோவையைச் சேர்ந்த ரௌத்ரி மற்றும் பிரவீனா. ஆர்.பி கன்சல்டன்ஸி என்கிற பெயரில் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள் இவர்கள்.

வெற்றித் தோழிகள்!

“கோட்டக் மகேந்திரா, சிட்டி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கார்வி பிரைவேட் வெல்த் என்று 12 ஆண்டுகளாக பல நிறுவனங்களில் கடுமையாக உழைத்தோம். அங்கு பங்குகளை விற்பதுதான் எங்கள் வேலை. அதைச் செய்யும்போதுதான் மியூச்சுவல் ஃபண்ட் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் மேல் ஒரு தீராத ஈர்ப்பு உண்டானது. அதுபற்றி நிறைய தேடித் தெரிந்துகொண்டோம். அதன் பலனைத்தான் இன்று நாங்கள் அனுபவித்து வருகிறோம்.

முதலீடு என்று வந்துவிட்டாலே ஆண்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகம்தான். சிக்கனமாக இருப்பதில் பெண்கள், ஆண்களைவிட அதிக கவனமாக இருப்பார்கள். எனவே, இந்தத் துறையில் நுழைய முடிவு செய்தோம். எங்களால் முடியாது என்று பிறர் நினைக்கும் ஒன்றைச் சிறப்பாகவும் எளிமையாகவும் செய்து காட்டவேண்டும்  என்ற  வைராக்கியமே எங்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது’’ என்றார்கள் அந்த வெற்றித் தோழிகள்.

யோகா மாதிரி!

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய யார் வந்தாலும், அதில் இருக்கும் ரிஸ்க்கை அவர்களிடம் எடுத்துச் சொல்லி, அதன்பின்பே முதலீடு செய்ய வைப்பது இவர்களின் ஸ்டைல்.

‘‘முன்பு நாங்கள் வேலை பார்த்தபோது, யாராவது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வந்தால், உடனே அதை ஊக்குவிக்க மாட்டோம். அவர்களின் பணயிருப்பு, சொத்து விவரங்களைத் தெரிந்துகொண்ட பின்பே முதலீடு செய்ய உதவுவோம். காரணம், அவர்கள் முதலீடு செய்ய நினைக்கும் பணத்தினால், அவர்களது வாழ்க்கை முறை வீழ்ச்சி அடையக் கூடாது என்று உறுதியாகத் தெரிந்தபின் முதலீடு செய்ய உதவுவோம். 

பங்கு விலை நிலவரத்தைத் தினமும் பார்த்து, விலை ஏறிவிட்டால் மகிழ்ச்சியில் குதிப்பதும், விலை இறங்கிவிட்டால் கவலைப்படுவதும் கூடாது. ஏற்ற, இறக்கத்தை உணர்ச்சி வசப்படாமல் கவனித்து, அதற்கேற்ப மாற்றங்களைச் செய்தால், நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதை ஒரு யோகா மாதிரி செய்யவேண்டும்’’ என்கின்றனர்.

முதலீட்டு தகுதிகள்!


இன்றைய நிலையில், இவர்கள் அதிக அளவில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான். இதில்கூட ஒருவர் முதலீடு செய்யும்போது, அவரது  வயது, தேவை, இழப்பைத் தாங்கும் சக்தி என பல்வேறு முதலீட்டுத் தகுதிகளைக் கருத்தில் கொண்டுதான் முதலீட்டு ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

‘இந்தப் பணம் இப்போதைக்கு எங்களுக்குத் தேவையில்லை. ஒன்றிரண்டு ஆண்டுகளில் நாங்கள் அதை நிச்சயமாகத் திரும்ப எடுக்க மாட்டோம்’ என்கிறவர்களை மட்டுமே நாங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கிறோம். ‘குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை பணத்தைத் திரும்ப எடுக்கக் கூடாது’ என்கிற கண்டிஷனுடன் நாங்கள் முதலீடு செய்ய அனுமதிப்பதால், முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. அந்த லாபத்தை வாங்கித் தந்தோம் என்கிற நல்ல பெயரும் நமக்குக் கிடைக்கிறது’’ என்று சந்தோஷப்பட்டனர்.

 வெற்றியின் சூட்சுமம்!

கடந்த எட்டு ஆண்டுகளில் இவர்கள் வாடிக்கையாளர்களாக மாறியிருப்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல். வெறும் நூறு பேர்தானா என்று நினைக்காதீர்கள். அத்தனை பேரும் ஹெச்.என்.ஐ.கள் (High Network Individuals). இவர்களின் முதலீடு லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை நீள்கிறது. பெரும் பணக்காரர்களின் நம்பிக்கையை இவர்கள் எப்படிப் பெற்றார்கள்?

“மியூச்சுவல் ஃபண்டில் நிலைப்பதற்கான வழி மிக எளிது. எப்போது அடுத்தவர் நம்மை நம்பி அவரது பணத்தைக் கொடுத்தாரோ, அந்த கணத்தில் இருந்து அந்தப் பணத்தை நாமே முதலீடு செய்கிற மாதிரி நினைத்து முதலீடு செய்தால் போதும். சரியான புரிதலும், ஃபண்ட் பற்றி அனலைஸ் செய்தும் முதலீடு செய்து கொடுத்தாலே போதும், வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற்று விடலாம். அதுதான் நம்மை அடுத்தபடிக்குக் கொண்டு செல்லும்’’ என்று தங்கள் வெற்றி ரகசியத்தை எடுத்துச் சொன்னார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்