ஆன்லைனில் டேர்ம் இன்ஷூரன்ஸ்... மருத்துவப் பரிசோதனை உண்டா?

கேள்வி - பதில்

?ஏஜென்ட் மூலம் டேர்ம் இன்ஷூரன்ஸ் பிளானை எடுப்பதைவிட ஆன்லைனில் குறைவாக இருக்கிறது. ஆன்லைனில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுமா? வழக்கமான கணக்கீடுகளைத் தவிர, மருத்துவ சோதனை முடிவுகளை அடிப்படையாக வைத்து பிரீமியம் தீர்மானிக்கப்படுகிறதா?

ராமலிங்கம், சேலம்.

வி.கிருஷ்ணதாசன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்.

“ஆன்லைனில் டேர்ம் பாலிசி யானது ரூ.50 லட்சத்துக்கு மேற்பட்ட தொகைக்கு காப்பீடு எடுக்கும்போது மட்டுமே பெரும்பாலான நிறுவனங்கள், மருத்துவப் பரிசோதனை செய்ய அறிவுறுத்துகின்றன. சில நிறுவனங்கள் ரூ.75 லட்சத்துக்கு மேல் மட்டுமே மருத்துவப் பரிசோதனை செய்ய வலியுறுத்துகின்றன.

பாலிசிதாரரைப் பொறுத்தமட்டில், மருத்துவ சோதனை செய்து பாலிசி எடுத்துக்கொண்டால், க்ளெய்ம் செய்யும் சூழல் வரும்போது க்ளெய்ம் நிராகரிக்கப்பட வாய்ப்பில்லை. மருத்துவ சோதனை செய்யாமல் எடுக்கும் பாலிசிகளில் பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகளுக்குள் க்ளெய்ம் செய்யப்படும்போது, ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் க்ளெய்ம் தொகையைப் பெறுவதில் சிக்கல் ஏற்படவோ, க்ளெய்ம் நிராகரிக்கப்படவோகூட வாய்ப்பு உண்டு.

மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் பிரீமியத் தொகையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சம வயதுடைய ஆரோக்கியமான நபரைவிட சர்க்கரை வியாதி, இதய நோய் போன்ற நோய்கள் உடைய ஒருவர் செலுத்தவேண்டிய பிரீமியத் தொகை அதிகமாக இருக்கும். சில சமயங்களில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஆரோக்கியமாக இல்லாத நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் காப்பீடு அளிப்பதில்லை.”

?அல்ட்ரா சார்ட் டேர்ம் ஃபண்டுகளில் யார் எல்லாம் முதலீடு செய்யலாம்? இந்த பிரிவில் சிறந்த ஃபண்டை பரிந்துரைக்க முடியுமா?

மோகன், கோவை.

அபுபக்கர் சித்திக், நிதி ஆலோசகர்.

“இதில் குறுகிய கால முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ளலாம். 3,  6,  9 மாதங்கள் போன்ற குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு இது நல்ல மாற்றுதான். அல்ட்ரா சார்ட் டேர்ம் ஃபண்டுகள் பெரும்பாலும் நிலையான வருமானம் தரும். லிக்யூட் மற்றும் குறுகிய கால முதிர்வு கொண்டவற்றில் மட்டுமே முதலீடுகள் இருக்கும். ஆகையால், இதில் ஃப்ராங்க்ளின் இந்தியா அல்ட்ரா சார்ட் பாண்ட் ஃபண்ட், பிரின்சிபல் ரீடெய்ல் மணி மேனேஜர் போன்ற ஃபண்டுகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.”

?என் தந்தைக்கு 65 வயதாகிறது. அவருக்கு ஆண்டுக்கு ரூ.3.96 லட்சம் ஓய்வூதியமாகக் கிடைக்கிறது. இது இல்லாமல் ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்து ரூ.5 லட்சம் வருமானம் வருகிறது. அவர் தனது வரியை குறைக்க என்ன செய்யவேண்டும்?

கணேசன், சென்னை.

சதீஷ் குமார், ஆடிட்டர் .

“உங்கள் தந்தை வரி விலக்குப் பெற  80சி-ன் படி, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.1.50 லட்சம் வரை முதலீடுகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு மேற்கொண்டால், ரூ.30,000 வரை வரி மிச்சமாகும்.

மகனோ அல்லது மகளோ வீட்டுக் கடன் வாங்கி இருந்தால், அவரை இணை விண்ணப்பதாரராக இணைத்துக் கொள்வதன் மூலம் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். இதில் 20%, அதாவது ரூ.40,000 வரை வரி மிச்சமாகும். 80டி-ன்படி, அங்கீகரிக்கப்பட்ட மெடிக்கல் இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் மெடிக்கல் இன்ஷூரன்ஸுக்கு ரூ.30,000 வரை க்ளெய்ம் பெற முடியும். இதுமட்டுமின்றி, 80EE-ன் படி, அவருடைய வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு கீழும், இந்த நிதி ஆண்டில் ரூ.35 லட்சத்துக்கு கடனும் வாங்கி இருந்தால், ரூ.50,000 வரை மிச்சப்படுத்தலாம்.”

?நான் சென்னையில், 2016 ஜனவரி மாதம்  ஃப்ளாட் ஒன்றை வாங்கினேன். அதை டிசம்பர் மாதம் விற்பனை செய்யத் திட்டமிட்டு இருக்கிறேன். நான் வாங்கிய ஃப்ளாட் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்தே கட்டுமானம் நிறைவு பெறும் என்கிறார்கள்.  கட்டுமானம் நடைபெறும் எனது ஃப்ளாட்டை விற்பனை செய்தால் கிடைக்கும் லாபத்துக்கு நான் எப்படி வரி கட்டவேண்டும்?”

முரளிதரன், சென்னை.

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை.

‘‘நீங்கள் வாங்கிய ஃப்ளாட்டை விற்பதன் மூலம் வரும் லாபத்துக்கு மூலதன லாப வரி கட்டவேண்டும். ஒரு சொத்தை மூன்று ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன லாபமாகக் கருதப்படும். அதற்கு லாபத்தில் 20% வருமான வரி செலுத்த வேண்டும். உங்கள் கட்டுமானத்தில் உள்ள ஃப்ளாட்டை மூன்று ஆண்டுகளுக்குள் விற்க உள்ளதால், அது குறுகிய கால லாபமாகக் கருதப்பட்டு, மற்ற வருமானத்தோடு சேர்க்கப்பட்டு, அதற்கான வரி செலுத்தப்பட வேண்டும். அது 30% வரை செல்ல வாய்ப்புள்ளது.’’

?எனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. என் கணவருடன் சேர்ந்து டேர்ம் இன்ஷூரன்ஸ் பிளானைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததா அல்லது தனியாக எடுப்பது சிறந்ததா? பாலிசி கவரேஜ் பணத்தைத் தீர்மானிப்பது எப்படி?
பிரீத்தி, ஓசூர்.

எஸ்.ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்.

“டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசியை கணவன் - மனைவியாக என இருவரும் சேர்ந்து எடுக்க இயலாது. ஆகவே, நீங்கள் தனியாகவும் உங்கள் கணவர் தனியாகவும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளவும்.

 உங்கள் வருடாந்திர வருமானத்தில் குறைந்தபட்சமாக 10 மடங்கு முதல் அதிகபட்சமாக 20 மடங்குக்குள் இருக்குமாறு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது மிகவும் நல்லது. உதாரணமாக, உங்கள் வருட வருமானம் ரூ.5 லட்சமாக இருந்தால், குறைந்தபட்சம் ரூ.50 லட்சத்துக்கு மிகாமல் டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்