மொபைல் சார்ஜ் குறையாமல் இருக்க முக்கிய 7 விஷயங்கள்! | 7 Rules For Keep your cellphone Charging - Nanayam Vikatan | நாணயம் விகடன்

மொபைல் சார்ஜ் குறையாமல் இருக்க முக்கிய 7 விஷயங்கள்!

ஞா.சுதாகர்

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரது முக்கியக் கவலைகளில் ஒன்று அதன் பேட்டரி. வீடியோ, கேம்ஸ் ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்தாவிட்டாலும்கூட, சார்ஜ் விரைவில் இறங்கிவிடும். ஆனால், இந்த 7 விஷயங்களைக் கவனத்தில்கொண்டு செயல்பட்டால் மொபைல் சார்ஜ் விரைவில் தீர்வதைத் தவிர்க்கலாம்.

1. குறுஞ்செய்தி, அழைப்புகள், அறிவிப்புகள் என அனைத்துக்கும் வைப்ரேட் ஆப்ஷனை தேர்வு செய்யாதீர்கள். இது ஒலியை விடவும் அதிக சக்தியை இழுக்கும். தவிர்க்க முடியாத சூழல்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் வைப்ரேஷன் ஆப்ஷனை எடுத்துவிடுங்கள்.

2. வைஃபை, ப்ளூடூத் பயன்படுத்திவிட்டு, தேவையற்ற சமயங்களில் ஆஃப் செய்யவும்.

3. இணையம் மூலமாக பிரவுசரில் ஏதேனும் தேடிக்கொண்டிருக்கும்போதோ, கேம்ஸ் விளையாடும்போதோ அந்த அப்ளிகேஷனை முழுமையாக குளோஸ் செய்யாமல், மொபைல் திரையை அணைக்கக்கூடாது. அப்படிச் செய்தால், திரைக்குப் பின்னால் அந்த அப்ளிகேஷன் இயங்கிக்கொண்டே இருக்கும்.

4. நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் இருக்கும்போது, உங்கள் மொபைல் ஆண்டனாக்கள் அதிக மின்சக்தியை செலவுசெய்து, நெட்வொர்க்கைத் தேடும். எனவே டவர் கிடைக்காத இடங்களில் ஏர் பிளேன் (Air Plane) மோட்-ஐ ஆன் செய்துவிடலாம். இதனால் எந்த இணையமும் இல்லாமல் போனில் இசை கேட்கலாம். கேம்ஸ், வீடியோ பார்க்கலாம்.

5. போனில் இருக்கும் ஒவ்வொரு ஆப்களையும் அடிக்கடி அப்டேட் செய்வது கொஞ்சம் சிக்கலான வேலைதான். ஆனால், இதன் மூலம் பேட்டரித் திறனை அதிகரிக்க முடியும். காரணம், ஒவ்வொரு ஆப் நிறுவனமும் தனது புதிய அப்டேட்டில், முன்பைவிட குறைவான மெமரி எடுக்கும்படியும், சார்ஜ் செலவாகும்படியும் வடிவமைப்பார்கள்.

6. ஆட்டோ சிங்க் ஆப்ஷனை அணைத்துவிடுவது மொபைல் டேட்டாவுக்கும், பேட்டரிக்கும் நல்லது. இல்லையெனில் மொபைல் டிஸ்ப்ளேவை ஆஃப் செய்து வைத்திருக்கும்போதும், மொபைல் பயன் படுத்தாதபோதும்கூட, இவை பின்னணியில் நமது டேட்டாவை தின்றுகொண்டே இருக்கும்.

7. உங்கள் மொபைல் பேட்டரி எவ்வளவு செலவாகி உள்ளது என எடுத்துப் பார்த்தால் அதில் அதிக பங்கு வகிப்பது மொபைல் திரைதான். இதன் வெளிச்ச அளவைக் குறைப்பதே சார்ஜ் குறைவதைத் தடுக்கும் முக்கிய வழி. ஆட்டோ ப்ரைட்னஸ் ஆப்ஷனைத் தேர்வு செய்வது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick