போஸ்ட் ஆபீஸ் டு பேங்க்... செல்வ மகள் முதலீட்டை மாற்றுவது எப்படி?

சோ.கார்த்திகேயன்

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கான சேமிப்புத் திட்டமாக ‘சுகன்யா சம்ரிதி திட்டம்’ அமைந்துள்ளது. இதனை ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’ என்கிறார்கள். இதில் முதலீட்டுக்கு வரிச் சலுகை (80சி பிரிவு) இருக்கும் அதேநேரத்தில், இதிலிருந்து கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்டத் தேவையில்லை. 18 வயதில் கல்விச் செலவுக்காக 50% தொகையையும், மீதித் தொகையைத் திருமணத்தின்போதும் பெற்றுக்கொள்ளலாம்.

செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கை வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில்  தொடங்கலாம். ஆனால், அஞ்சல் அலுவலகத்தில் கணக்கைத் தொடங்கியவர்கள், ஒரு சில காரணங்களுக்காக அந்தக் கணக்கை எப்படி வங்கிக்கு மாற்றுவது என்பது தெரியாமல் விழிக்கிறார்கள்.

எதற்காக மாற்றவேண்டும்?

அஞ்சல் அலுவலகத்திலிருந்து வங்கிக்கு அல்லது ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்குச் செல்வ மகள் சேமிப்புத் திட்டக் கணக்கை மாற்றப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில், அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கி சரியான சேவையை உங்களுக்கு வழங்கவில்லை என்றால் கணக்கை மாற்றலாம்.

நீங்கள் கணக்குத் தொடங்கி இருக்கும் அஞ்சல் அலுவலகம் சிபிஎஸ் வசதியுடன் இணைக்கப்படாமல் இருக்கலாம். நீங்கள் ஆன்லைன் மூலமாக பணம் டெபாசிட் செய்வது மிகப் பெரிய தடையாக உங்களுக்கு இருக்கலாம். நீங்கள் வசிக்கும் ஒரு நகரத்திலிருந்து வேறொரு நகரத்துக்குச் சமீபத்தில் இடம் மாறி இருக்கலாம்; எனவே, நீங்கள் வசிக்கும் நகரத்திலேயோ அல்லது உங்களுக்கு மிக அருகில் உள்ள வங்கிக் கிளையிலோ உங்களுடைய மகளின் கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.

எந்தெந்த வங்கிகளில்?

இந்தக் கணக்கை நீங்கள் அஞ்சல் அலுவலகத்திலிருந்து வங்கிக்கு மாற்றும்முன், எந்தெந்த வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி என 28 வங்கிகளில் கணக்கை ஆரம்பிக்கலாம்.

எப்படி மாற்றுவது?

அஞ்சல் அலுவலகத்திலிருந்து, உங்களுக்கு அருகில் உள்ள அல்லது நீங்கள் விருப்பப்படும் வங்கிக் கிளைக்கு இந்தக் கணக்கை மாற்றவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கீழ்க்கண்ட ஐந்து வழிகளைப் பின்பற்றுவது அவசியம்.

ஸ்டெப் 1 : நீங்கள் இந்தக் கணக்கை எங்கு தொடங்கினீர்களோ, அந்த அலுவலகத்துக்கு உங்கள் மகளின் பாஸ்புக் மற்றும் கேஒய்சி சார்ந்த ஆவணங்களைக் கொண்டு செல்லுங்கள். அஞ்சல் அலுவலகத்துக்கு பெண் குழந்தைகள் வருகை புரியத் தேவையில்லை; எனினும், உங்கள் மகள் அவரே தனது கணக்கை நிர்வகித்து வருகிறார் என்றால், அவர் அஞ்சல் அலுவலகம் வருவது அவசியமாகும்.

ஸ்டெப் 2 : நீங்கள் எந்த வங்கிக்கு உங்களுடைய மகளின் கணக்கை மாற்றவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த வங்கிக் கிளையின் முழு முகவரியையும் குறிப்பிட்டு உங்கள் கோரிக்கையை அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். இதில் வங்கிக் கிளையின் முகவரியைச் சரியாக வழங்கவேண்டும் என்பது முக்கியம். இத்துடன் உங்கள் மகளின் பாஸ்புக்கையும் அஞ்சல் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.

ஸ்டெப் 3 : 
அஞ்சல் அலுவலர்கள் உங்களுடைய கையெழுத்து மற்றும் பிற ஆவணங்களைச் சரிபார்த்து ஒருவேளை உங்களிடமோ அல்லது எந்த வங்கிக் கிளை முகவரியை குறிப்பிட்டு உள்ளீர்களோ, அந்த முகவரிக்கோ ஆவணங்களை அனுப்பிவைப்பார்கள். இதில் கணக்கு சான்றளிக்கப்பட்ட நகல், கணக்கு ஆரம்பிக்கும் விண்ணப்பம், மாதிரி விண்ணப்ப கையெழுத்து போன்றவை இருக்கும். இதுமட்டுமின்றி, இந்தக் கணக்கின் நிலுவைத் தொகையை ஒரு காசோலையாகவோ அல்லது டிடி-ஆகவோ அதனுடன் அனுப்பி வைப்பார்கள்.

ஸ்டெப் 4 : இதன்பின் எங்கே இந்தக் கணக்கை தொடங்கவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அங்கே அஞ்சல் அலுவலர்கள் வழங்கிய அனைத்து ஆவணங்கள் மற்றும் உங்களுடைய கேஒய்சி ஆவணங்களையும் கொண்டுசெல்லுங்கள்.

ஸ்டெப் 5 : வங்கிக் கிளையில் இதற்கான புதிய கணக்குப் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். அதன்பின் கேஒய்சி ஆவணங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகத்திலிருந்து பெற்ற ஆவணங்களை வங்கியாளரிடம் வழங்குங்கள்.

அவ்வளவுதான், இந்த ஐந்து எளிய வழிகள் மூலம் எளிதாக அஞ்சல் அலுவலகத்திலிருந்து, நீங்கள் விருப்பப்படும் வங்கிக் கிளைக்கு உங்களுடைய மகளின் ‘செல்வ மகள் கணக்கை’ எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.

இதில் உங்களுடைய மகளின் காப்பாளராக யாருடைய பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறீர்களோ, அவர் வசிப்பிடத்தை மாற்றியதற்கான ஆதாரம் வழங்கினால், இந்தப் பரிமாற்ற வசதி இலவசமாகச் செய்து தரப்படும். ஆனால், நீங்கள் புதிய முகவரி சான்று வழங்கவில்லை என்றால், கணக்கைப் பரிமாற்றம் செய்ய ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டி இருக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்