கோபம் வேண்டாம்; குறைகளைத் திருத்திக் கொள்வோம்!

ஹலோ வாசகர்களே..!

டுத்தடுத்த வாரங்களில் இடி போன்ற இரண்டு செய்திகள் மோடி அரசாங்கத்தின் மீது விழுந்திருக்கின்றன. தொழில் செய்யும் சூழல் குறித்த பட்டியலில் நம் நாடு ஆமை வேகத்தில் முன்னேறுவது முதலில் விழுந்த இடி. இந்தியாவின் பொருளாதார நிலையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உயர்த்த முடியாது என தரச் சான்று நிறுவனமான எஸ் அண்ட் பி சொன்னது இரண்டாவது இடி. இந்த இரண்டு இடிகளையும் கண்டு மோடி அரசாங்கம் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது.

எஸ் அண்ட் பி-யின் அறிக்கையை உன்னிப்பாகக் கவனித்தால், பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் இப்படிச் சொல்லி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். உறுதியான நிலையில் இருக்கும் டாலர் கையிருப்பு (சுமார் 368 பில்லியன் டாலர்), நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருப்பது (1.4%), ஜனநாயக நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுவதுடன் ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது, வளர்ச்சிக்கான கொள்கைகளில் உறுதியாக இருப்பது போன்ற விஷயங்களில் நம் நாட்டு அரசாங்கத்தை அது பாராட்டவே செய்திருக்கிறது.

அதே சமயம், நமது தனிநபர் வருமானம் மிகவும் குறைவான அளவில் இருப்பதையும், பொது நிதியில் மிகவும் பலவீனமாக இருப்பதையும் எஸ் அண்ட் பி சுட்டிக் காட்டத் தவறவில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கும் இலங்கையில்கூட தனிநபரின் வருமானம் 3,637 டாலராக இருக்கிறது. ஆனால், நமது வருமானமோ வெறும் 1,700 டாலர்தான். பொதுத் துறை வங்கிகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 45 பில்லியன் டாலர் புதிய முதலீட்டைக் கொண்டுவர வேண்டும். ஆனால், நமது அரசாங்கமோ வெறும் 11 பில்லியன் டாலரை மட்டுமே தரத் தயாராக இருக்கிறது.

எஸ் அண்ட் பி-யின் இந்த விமர்சனங்களைக் கண்டு கொதித்துப் பேசியிருக்கிறார் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ். ‘இந்தியாவில் அடைந்துவரும் ஜிடிபி வளர்ச்சி போல, வேறு எந்த நாட்டிலும் இல்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எல்லாம் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருக்கும்போது, எஸ் அண்ட் பி இப்படிச் சொல்லி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று பொருமி இருக்கிறார் அவர்.  

இந்தியாவின் பொருளாதார நிலையை முன்னேற்ற மோடி அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் சீர்திருத்தங்களைக் குறை சொல்வதற்கில்லை. என்றாலும், மிகப் பெரிய தொழில் வளர்ச்சியும், அதனால் ஏற்படும் மாற்றங்களும் நம் கண்களுக்கு தெரியவில்லை. அந்த வளர்ச்சியையும், மாற்றங்களையும் கொண்டுவர என்ன செய்யவேண்டும் என்கிற கோணத்தில் இந்த அரசாங்கம் யோசித்து, நடவடிக்கை எடுப்பதன் மூலமே பொருளாதாரத்தை  முன்னேற்ற முடியும். மக்கள் மனதிலும் இடம்பிடிக்க முடியும். அதை விடுத்து தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் மீது வெறுமனே கோபப்பட்டு, எந்தப் பிரயோஜனமும் இல்லை!

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்