உங்கள் பிள்ளைகளும் ஆக்ஸ்ஃபோர்டில் படிக்கவேண்டுமா?

கே.எல்.ரவீந்திரன், நிதி ஆலோசகர்.

யாருக்குத்தான் ஆசை இருக்காது, தங்கள் குழந்தையை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் படிக்க வைக்க? ஆனால், செலவு..? ஒரு மாதத்துக்கு 2 லட்சம் ரூபாய் வீதம் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 25 லட்சம் ரூபாய் செலவாகிவிடும். இந்த அபாரமான செலவுக்குப் பயந்துதான் பலரும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பத் தயங்குகிறார்கள்.

ஆனால், என் நண்பன் அஹ்மது என்னுடன் வேலை பார்க்கும் ஒரு சாதாரண ஸ்டாக் மார்க்கெட் ஆபரேட்டர்தான். அவன் தனது மகன் சல்மானை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் படிக்க அனுப்பப் போவதாக சொன்னவுடன், எனக்கு தூக்கிவாரிப் போட்டது. காரணம், அவனது வருமானம் குறைவுதான். அது அவன் குடும்பச் செலவுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இந்த நிலையில் அவன் எப்படி தன் மகனை ஆக்ஸ்ஃபோர்டுக்கு அனுப்புகிறான்?

நான் அதிர்ச்சியாகி நிற்பதைப் பார்த்த அஹ்மத் சிரித்துக்கொண்டே விளக்கத் தொடங்கினான். ‘‘நண்பா,  நான் ஆக்ஸ்ஃபோர்டில் சென்று படிக்க ஆசைப்பட்டேன், ஆனால், பணம் இல்லாததால் என் அப்பாவினால் என்னை ஆக்ஸ்ஃபோர்டுக்கு அனுப்ப முடியவில்லை. நான்தான் ஆக்ஸ்ஃபோர்டுக்கு போகவில்லை. என் மகனையாவது அனுப்பவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான வழிகளைப் பற்றி தீவிரமாக யோசித்தேன்.

என் மகன் பிறந்த சில மாதங்களில், லக்னோவில் மூன்று லட்சம் ரூபாய்க்கு ஒரு நிலம் வாங்கினேன். இந்த நிலத்தை என் மகனுடய மேல்படிப்பு செலவுக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

லக்னோ புறநகரில் இருந்த அந்த நிலம், இப்போது நகரத்தின் ஒரு முக்கியப் பாகமாக மாறிவிட்டது. இப்போது அந்த நிலத்தின் மதிப்பு 1.50 கோடி ரூபாய். சென்ற மாதம் இந்த நிலத்தை விற்று பேங்கில் டெபாசிட் செய்திருக்கிறேன். என் மகன் பட்டப்படிப்பும், பட்டமேற்படிப்பும் படிக்க, இந்தத் தொகை போதும்.  என் மகனின் படிப்புக்காக இதைவிட நான் வேறு என்ன செய்திருக்க முடியும்” என்று சொல்லி முடித்தான்.

அஹ்மத்தை நினைத்து எனக்குப் பெருமையாக இருந்தது. இன்று எல்லாமே நல்லபடியாக நடக்க, சல்மான் இன்றைக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, எம்.டெக்-ம் படித்து முடித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறான்.

இதுபோல, உங்களுக்குக்கூட நடந்திருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வாங்கிய நிலத்தின் மதிப்பு இன்றைக்கு கோடி ரூபாயாகப் பெருகி, அதன் பலனை அடையத் தயாராக இருப்பீர்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் 40 வருடங்களுக்கு முன் 5,000 ரூபாய்க்கு சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு கிரவுண்ட் நிலத்தை வாங்கினார். தற்போது அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 1.5 கோடி.

நிலத்தில் (ரியல் எஸ்டேட்) முதலீடு செய்வது நம் எல்லோருக்கும் தெரியும். நமக்குப் பிடித்த முதலீடும் அதுதான். என்றாலும் இதில் சில அசெளகரியங்கள் இருக்கவே செய்கின்றன. நிலம் வாங்க அதிக அளவில் பணம் தேவைப்படும். இந்தப் பணம் எல்லோரிடமும் இருக்கும் என்று சொல்ல முடியாது. தவிர, நிலத்தின் விலை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி உயர்ந்திருக்கிறது. மேலும், அதை நினைத்த நேரத்தில் எளிதாக விற்க முடியாது. பராமரிப்பதும் கடினம்.

ஆனால், அஹ்மத்துக்கு நிலத்தில் கிடைத்த வருமானத்தைவிட அதிக வருமானம் எல்லோருக்கும் கிடைக்க ஒரே வழி மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்வதுதான். ஒவ்வொரு மாதமும் சில ஆயிரம் ரூபாயை  முதலீடு செய்வதன் மூலம் பத்து, பதினைந்து ஆண்டுகளில் சிலபல லட்சங்களை யாரும் சேர்க்க முடியும். அப்படி சேமித்த பணத்தைக்கொண்டு, உங்கள் பிள்ளையை ஆக்ஸ்ஃபோர்டில் என்ன, கேம்பிரிட்ஜில்கூட படிக்க வைக்கலாமே! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்