டாடாவின் அடுத்த தலைவர்... தமிழரா?

ஜெ.சரவணன்

டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து மிஸ்திரி நீக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலிருந்து ரத்தன் டாடாவுக்கும் மிஸ்திரிக்கும் இடையிலான மோதல் சூடு பிடித்தது. இந்த நிமிடம் வரை அது அணையாமல் எரிந்துகொண்டே இருக்கிறது.

மிஸ்திரி மீது டாடா குழும இயக்குநர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் பொய் என்றும், டாடாவின் நஷ்டத்துக்கும் தொழில் வளர்ச்சி குறைந்ததற்கும் ரத்தன் டாடாவின் முந்தைய முடிவுகள்தான் காரணம் என்றும் டாடாவின் தொழில் போக்கைத் தொடர்ந்து கவனித்து வந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

டாடா நிறுவனம் மிஸ்திரிக்கு டாட்டா காட்டியபின், அந்த நிறுவனத்தின் பல்வேறு பங்குகளின் விலை சிறிது இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. கடந்த 25 - 27 வரையிலான மூன்று நாட்களில் மட்டும் டாடா குழும பங்குகளின் மதிப்பு சுமாராக ரூ.26 ஆயிரம் கோடி வரை குறைந்திருக்கிறது. இந்த மோதலுக்கிடையே மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் வெளியாகி வருகின்றன.

சண்டைக்கு இவர்தான் காரணமா?


டாடா குழுமத்தில் ஏற்பட்டுள்ள சச்சரவுகளுக்கு ஒரு முக்கிய காரணம், டாடா குழும ட்ரஸ்ட்டை மேலாண்மை செய்துவரும் வெங்கட்ராமன் என்று சொல்லப்படுகிறது. வெங்கட் என சுருக்கமாக அழைக்கப்படும் இவர், ரத்தன் டாடாவின் நிழல் என்றே சொல்கிறார்கள். இவர் ஸ்ரீசத்திய சாய் பல்கலைக்கழகத்தில் எம்பிஏவும் மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டமும் படித்தவர். டாடா குழுமத்தின் தலைமைப் பதவியிலிருந்து ரத்தன் டாடா விலகியின்பின் இவர்தான் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமாக இருப்பவர். டாடா நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் டிரஸ்டி இவர்தான் என்பதால், இவர் மனது வைத்தால்தான் யாராக இருந்தாலும் ரத்தன் டாடாவையே சந்திக்க  முடியும். டாடாவை அண்ட முடியாமல் நந்தி போல இருந்தவர் இவர்தான். அவர்கள் அடிக்கடி சந்தித்திருந்தால், இவ்வளவு பெரிய பூகம்பம் வெடித்திருக்காது என்று பொருமுகிறது மிஸ்திரியின் தரப்பு. 

டாடாவில் மறைக்கப்படும் இரண்டு முக்கிய விவகாரங்களுக்கு இவரே காரணமாக இருந்துள்ளார் என்றும் இவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. சென்னை தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு ரூ.200 கோடி கடனை டாடா கேப்பிட்டல் நிறுவனம் அளித்தது. இந்தக் கடனுக்குப் பதிலாக டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்தின் பங்குகளை அடமானம் வைத்தார் சிவசங்கரன். ஆனால், அவர் பங்குகளை அடமானம் வைத்தபின் அந்தப் பங்கின் விலை ஏகத்துக்கும் குறைந்ததால், டாடா கேப்பிட்டலுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. சிவசங்கரனுக்கு இந்தக் கடனைக் கொடுக்கச் சொன்னதே இவர்தான் என்கிறார்கள்.

மேலும், ஏர் ஏசியாவிலிருந்து இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள அடையாளம் தெரியாத நபர்களுக்கு ரூ.22 கோடி வரை முறையற்ற பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் மிஸ்திரி தரப்பு குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக வெங்கட்ராமன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டாடா குழும இயக்குநர் குழுவுக்கு கடிதம் எழுதியும் எந்தப் பதிலும் இல்லை. மேலும், அவர் மீதான அனைத்துக் குற்றங்களையும் டாடா இயக்குநர் குழு மறுத்துவிட்டது.

தன்னை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத வெங்கட்ராமன், டாடாவின் முக்கிய பவர் சென்டராக இருந்து வந்திருக்கிறார். கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக ரத்தன் டாடா தனிப்பட்ட முறையில் செய்த முதலீடுகள் அனைத்தும் வெங்கட்ராமனின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறர்கள்.

தந்தை நிறுவனத்துக்கு ‘நோ’ சொன்ன மிஸ்திரி!

டாடாவின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் முன்னாள் தலைவர் மிஸ்திரி, 2013 அக்டோபரில் தனது தந்தை நிறுவனமான ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்துடனான தொழில்களை நிறுத்திவிடுமாறு டாடாவுக்கு அறிவுறுத்தினார். ஷபூர்ஜியின் இரண்டாவது மகனான மிஸ்திரி டாடா குழும தலைவரான பிறகு, தேவையற்ற சிக்கல்களையும், பிரச்னைகளையும் தவிர்க்கவேண்டும் என்பதற்காக புதிய தொழில் ஒப்பந்தங்கள் எதுவும் இரண்டு நிறுவனத்துக்குமிடையே போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார்.

டாடாவின் தலைமைப் பதவியிலிருந்து மிஸ்திரி  நீக்கப்பட்டபோது, தனது தந்தை குழுமத்துக்கே தொடர்ந்து தொழில் வாய்ப்புகளைக் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. டாடா குழுமத்தில் கணிசமான பங்கு வைத்திருக்கும் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம், ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் ஈட்டி வந்தது. மிஸ்திரியின் தந்தை இரண்டு குழுமத்திலும் வைத்திருந்த பங்கின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்பு 14.6 பில்லியன் டாலராக உள்ளது.

மிஸ்திரியின் சம்பள உயர்வு!


டாடா குழுமத்தினருக்கு ரத்தன் டாடா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “மிகச் சிக்கலான ஒரு முடிவை டாடா குழுமம் மிகக் கவனமாக எடுத்துள்ளது.  டாடா குழுமத்தின் வருங்கால வளர்ச்சிக்கு மிஸ்திரியின் நீக்கம் அவசியம். குழுமத்தின் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் நான் எப்போதும் பணியாற்றுவேன். இப்போது நிலவும் நிகழ்வுகளைப் பெரிதாக நினைக்காமல் தொழிலின் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” என்று சொல்லி இருக்கிறார் ரத்தன் டாடா.

ஆனால், நான்கு மாதங்களுக்கு முன்புதான் டாடா குழுமத்தை மிஸ்திரி சிறப்பாக நடத்தி வருவதாகப் பாராட்டிய டாடா சன்ஸ் இயக்குநர் குழு, அவருக்கு கணிசமான சம்பள உயர்வைத் தரத் தயாராக இருந்ததாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. என்றாலும், அந்த சம்பள உயர்வை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாராம் மிஸ்திரி. தனது குழும நிர்வாக கவுன்சில் (Group Executive Council) உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் 6 சதவிகித சம்பள உயர்வையே தனக்கும் அளித்தால் போதும் என்று சொல்லிவிட்டாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்