வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க... தயாராகாமல் இருக்கும் தொழில் நிறுவனங்கள்!

இரா.கலைச்செல்வன்

டகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பெருவெள்ளம் வருமா, வராதா என்று சொல்ல முடியாது. என்றாலும், பெருவெள்ளம் வந்தால்  அதில் பாதிக்கப்படாமல் தப்பிக்க, சிறிய தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் தங்களைத் தயார் படுத்திக்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

கடந்த வருடம் பெய்த மழை, மனித உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய அதே சமயம், வாழ்வாதார அடிப்படையான தொழில் துறைக்கும் பெரும் இழப்பைத் தந்தது. கிட்டத்தட்ட 14,000 சிறு, குறு நிறுவனங்கள் மழையினால் பாதிக்கப்பட்டன. தோராயமாக 1,700 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. சுமார் 56,000 பேருக்கு வேலை பறிபோனது. 1,60,000 பேர் மறைமுகமாக பாதிக்கப் பட்டனர். இந்த இழப்புகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோமா, இதுபோன்ற இயற்கை பேரிடர்களை சமாளிக்கத் தயாரான நிலையில் நம் தொழில் துறை இருக்கிறதா என்கிற கேள்விகள் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி இருக்கும் இந்த சமயத்தில் அதிமுக்கியமானவை.

இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ.யும், பிரபல ஆடிட்டிங் நிறுவனமான கே.பி.எம்.ஜியும் இணைந்து சென்னையின் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வெள்ள அபாயத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஒரு சர்வே எடுத்துள்ளது. கடந்த கால பாதிப்புகளில் இருந்து நாம் சரியான பாடங்களைக் கற்கவில்லை என்பதையே இந்த சர்வே துல்லியமாக எடுத்துச் சொல்லி இருக்கிறது. 

அம்பத்தூர், மணலி, இருங்காட்டுக்கோட்டை, சிப்காட் உட்பட சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருக்கும் பல்வேறு இடங்களில் இருக்கும் தொழில் துறை நிறுவனங்களிடம் மேற்கொண்ட ஆய்வில், 19% நிறுவனங்கள் மட்டுமே மழை வெள்ள பாதிப்புகளைத் தாங்கும் வகையிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது. 38 சதவிகிதப் பணியாட்களுக்கு இன்னும் இன்ஷூரன்ஸ் வழங்கப்படவில்லை.

35 சதவிகித  நிறுவனங்கள், தங்களின் இயந்திரங்கள் மற்றும் யூனிட்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கவில்லை. 42 சதவிகித பேருக்கு இன்ஷூரன்ஸ் வரைமுறைகள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. மொத்த நிறுவனங்களில் 50 சதவிகிதம் மட்டுமே குறைந்தபட்ச பாதிப்புகளை யாவது தாங்கும் வகையில் இருக்கின்றன. இது பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

“இதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன’’ என்று ஆரம்பித்தார் கோபால். இவர் இந்திய சிறு, குறு நிறுவனங்களின் தமிழ்நாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர். ‘‘அரசாங்கம் அமைத்துத் தந்திருக்கும்  பெரும்பாலான தொழிற் பூங்காக்கள், எளிதில் நீர் உள்புகும்  கீழ் மட்டமான பகுதிகளிலேயே அமைந்திருக்கின்றன. அதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடங்கி இருந்தாலும், அது எந்தளவுக்கு முடிவடைந்துள்ளது என்பது முக்கியமான கேள்வி. 

அதுபோல, பல நிறுவனங் களும் சரியான முறையில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளாமலே இருக்கின்றன.  குறைந்தபட்சம் எலெக்ட்ரிக் சாதனங்கள் மற்றும் விலை உயர்ந்த இயந்திரங்கள் போன்றவற்றையாவது, நீர் புகாத மேல்மட்ட இடங்களில் வைக்கவேண்டும். இன்ஷூரன்ஸ் தொடர்பான விஷயங்களிலும், இதுபோன்ற மெத்தனத்தையே கடைப்பிடிக்கின்றனர். இன்ஷூரன்ஸ் செய்வதை வீண் விரயமாக நினைக்கும் மனநிலைதான் இன்னும் அதிகப் பேரிடம் இருக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் இன்ஷூரன்ஸ் என்பது ஓர் முதலீடுதான்” என்றவர், முக்கியமானதொரு விஷயத்தையும் சொன்னார்.

“இந்த விஷயத்தில் அரசாங்கத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்காமல், நாமும் தயாராக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடந்த ஆண்டு வெள்ளத்தில் பலரும் தங்களது ஆவணங்களைக் கூடப் பாதுகாக்க முடியாமல் பரிதவித்தார்கள். முக்கியமான ஆவணங்களை இனியாவது பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும். 

இன்ஷூரன்ஸ் போட்டவர்களுக்குக்கூட, தாங்கள் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் ஸ்கீம்கள் குறித்த விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை. வங்கியில் தொழில் கடன் வாங்கிய சிலர்,  வங்கியே இன்ஷூரன்ஸ் போட்டிருக்கும் என்று நினைக்கிறார்கள். வங்கி, தான் கொடுத்த கடன் அளவுக்கு மட்டுமே இன்ஷூரன்ஸ் செய்திருக்கும். ஒரு நிறுவனம் இன்ஷூரன்ஸ் செய்யும்போது, அதனால் தங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும். மத்திய,  மாநில அரசாங்கங்களின் நஷ்ட மதிப்பீடுகளும் சரிவர வரைமுறைப்படுத்தப் படவில்லை. இதுபோன்ற விஷயங்களை இந்த  ஆய்வில் நாங்கள் தெரிந்துகொண்டோம். எதிர்வரும் ஆபத்துக்கான ஒரு அபாய மணி போன்றது எங்களது இந்த சர்வே ரிப்போர்ட்’’ என்றார் அவர். 

தொழில் பூங்காக்களின் கட்டமைப்பு வசதிகள் திருத்தப்படவேண்டும்; நிறுவனங்கள் தங்களின் ஆவணங்களை ‘க்ளவுட் கம்ப்யூட்டிங்’ முறையில் பாதுகாக்க வேண்டும்; வங்கிச் சலுகைகள், இன்ஷூரன்ஸ் மற்றும் சட்ட வரையறைகள் குறித்து விழிப்பு உணர்வு கொள்ளவேண்டும் என்பதை மேற்கூறிய சர்வே வலியுறுத்துகிறது.

“நிறுவனங்களின் கூட்டமைப்புகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையே ஒரு தொடர்பே இல்லாமல் போய்விட்டது. நாங்கள் எங்கள் நிறுவனங்களை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும், அரசாங்கம் அடிப்படைக் கட்டமைப்புகளை உறுதிப்படுத்தினால்தான் எங்களால் தொடர்ந்து இயங்க முடியும். பிரச்னை வரும்போது கடமைக்கு ஏதோ சில விஷயங்களைச் செய்வதென்று இல்லாமல், இதற்கான நிரந்தரத் தீர்வைக் காண அரசு முன்வரவேண்டும்’’ என்கிறார் சி.ஐ.ஐ.யின் தமிழ்நாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியநாதன்.

இங்கிலாந்தின் ப்ரண்டன் பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதுண்டு. 2004-ல் ஏற்பட்ட வெள்ளம் அங்கிருந்த சிறு, குறு தொழில் நிறுவனங் களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து பாடம் படித்து சில முக்கிய மாற்றங்களைச் செய்ததன் மூலம், 2014-ல் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் எந்த நிறுவனத்துக்கும் பெரிய அளவில் பாதிப்பில்லை.

ப்ரண்டனில் செய்ததுபோல சென்னையிலும் நிச்சயம் செய்ய முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கு முதல் தேவை, சிறு, குறு தொழில்  நிறுவனங்களுக்கிடையே வெள்ளம் குறித்த போதுமான விழிப்பு உணர்வு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்