முதலீட்டுக்கேற்ற செக்டோரல் ஃபண்டுகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பங்கு சார்ந்தவை (ஈக்விட்டி) மற்றும் கடன் சார்ந்தவை (டெப்ட்) என இருவகையாக பிரிக்கலாம். இந்த இரண்டில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளை டைவர்சிஃபைடு மற்றும் செக்டோரல் எனப் பிரிக்கலாம். டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகள் அனைத்துத் துறை சார்ந்த பங்குகளிலும் முதலீடு செய்யும். ஆனால், செக்டோரல் ஃபண்டுகள் என்பவை ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டுமே முதலீடு செய்யும்.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் உலகில், டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளில்தான் முதலீடு அதிகமாக உள்ளது. உலகெங்கிலும் இதுவே உண்மை. ஏனென்றால் டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகள் அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஆனால், செக்டோரல் ஃபண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்தத் துறையும் நன்றாகச் செயல்பட வேண்டும். அவ்வாறு ஒரு துறை விழுந்தால் அது மேலெழுந்து வருவதற்கு பல வருடங்கள் ஆகலாம். இதற்கு  நேரெதிராக அத்துறை மேலெழுந்து வரும்போது, மிக விரைவாக வந்துவிடும்; நல்ல வருமானத்தையும் தரும். ஆகவே துறை சார்ந்த முதலீடுகள் ஹை ரிஸ்க் – ஹை ரிவார்டு கேட்டகிரியைச் சார்ந்தவை. 

ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு காலகட்டத்தில் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளன. உதாரணத்துக்கு, சில வருடங்கள் முன்பு நமது ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்தபோது டெக்னாலஜி (ஐ.டி) ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்தன. அதேபோல் 2008 உச்சத்துக்குப் பிறகு, எஃப்எம்சிஜி மற்றும் ஃபார்மா ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்தன. கடந்த சில வருடங்களில் டிரான்ஸ்போர்ட்டேஷன் ஃபண்ட் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது. கடந்த ஆறு மாதத்தில் பேங்கிங் ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளன. தற்போது பார்மா ஃபண்டுகள் சற்று மந்தமாக உள்ளன. அதேபோல், இன்ஃப்ரா, எனர்ஜி போன்ற துறை சார்ந்த ஃபண்டுகளில் கடந்த காலங்களில் முதலீடு செய்து பெரிய வருமானம் இல்லாமல் நஷ்டமடைந்தவர்களும் உண்டு. ஆகவே, துறை சார்ந்த முதலீடுகளில் உள்ளே நுழைவதும் வெளியேறுவதும் சரியான தருணங்களாக இருக்க வேண்டும்.

துறை சார்ந்த ஃபண்டுகளில் பல வகைகள் இருந்தாலும், அதிக சொத்துக்கள் நிர்வாகத்தில் இருக்கும் துறைகள் இன்ஃப்ரா, பேங்கிங் மற்றும் பார்மா ஃபண்டுகளே. முதன்முறை முதலீட்டாளர் செக்டோரல் ஃபண்டுகளில் நுழையாமல் இருப்பது நன்று. பல ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அனுபவமுள்ளவர் கள், தங்களது போர்ட்ஃபோலியோவில் ஒரு பகுதியை (10 சதவிகிதம் வரைக்கும்) செக்டோரல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அவ்வாறு செய்யும்போது, எதிர்பார்த்த அளவுக்கு அத்துறை மேலெழுந்து வந்தால் அந்த முதலீட்டை அறுவடை செய்யவும் தயங்கக்கூடாது. எஸ்ஐபி முறை முதலீட்டைவிட, மொத்த முதலீடே இவ்வகை ஃபண்டுகளில் சிறந்தது.

துறை சார்ந்த ஃபண்டுகளை நாம் ஒரு குறிக்கோளை அடைவதற்காகப் பயன்படுத்த முடியாது. உங்களின் மொத்த போர்ட்ஃபோலியோ வருமானத்தை சற்று அதிகரிக்க இவ்வகை ஃபண்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இன்றைய நிலையில் எந்தத் துறை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் மேலெழுந்து வரும்போது வங்கி மற்றும் நிதி சேவைத் துறையும், இன்ஃப்ரா துறையும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இத்துறை சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள், தங்களது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். 

சிறப்பாகச் செயல்பட்டு வரும் சில ஃபண்டுகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஐசிஐசிஐ புரூ பேங்கிங் & ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் ஃபண்ட்!

இந்த ஃபண்ட் வங்கி, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி சேவைத் துறைகளில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வருகிறது.
நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.1,124 கோடி ரூபாய் ஆகும். ஹெச்டிஎஃப்சி பேங்க் இதன் போர்ட்ஃபோலியோவில் 15.08% அளவில் டாப் ஹோல்டிங்காக உள்ளது. 2008-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்டின் தற்போதைய என்ஏவி ரூ.45.72 ஆகும். இதன் ஃபண்ட் மேனேஜர் வினய் ஷர்மா ஆவார்.

ரிலையன்ஸ் பேங்கிங் ஃபண்ட்!

இருக்கும் பேங்கிங் ஃபண்டுகளில் இதுதான் மிகப் பெரியது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ .2,342 கோடியாகும். 2003-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்டின் தற்போதைய என்.ஏ.வி ரூ.203.06 ஆகும். இதன் போர்ட்ஃபோலியோவில் ஹெச்டிஎஃப்சி பேங்க் 29.13 சதவிகிதமும், ஐசிஐசிஐ பேங்க் 14.13 சதவிகிதமும் உள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் சஞ்சை பரேக் மற்றும் ஷ்ரே லூங்கர் ஆவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்