கணவன் - மனைவி பெயரில் வீடு... விற்கும்போது வரி செலுத்த வேண்டுமா?

கேள்வி - பதில்

?ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்னுடைய பெயரிலும், என் மனைவியின் பெயரிலும்  வீடு வாங்கினோம். இதனை இப்போது விற்கப் போகிறோம். நாங்கள் இருவரும் வேலை பார்த்து வருகிறோம்.  மூலதன ஆதாய வரி எப்படி கணக்கிடப்படும்?

மகேஷ், நாகப்பட்டினம்


ஈ.எஸ்.முருகானந்தம், ஆடிட்டர், ஈரோடு

“நீங்கள் விற்பனை செய்யவிருக்கும் வீட்டுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். நீங்கள் வாங்கிய வீட்டின் அடக்கவிலை மற்றும் பணவீக்க அளவீடுகளைக் (Cost Inflation Index) கொண்டு மூலதன ஆதாயம் கணக்கிடப் படும். நீங்கள் இருவரும் பணியில் இருப்பதால், மொத்த மூலதன ஆதாயத்தில் சரிபாதி அவரவர் வருடாந்திர சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு மூலதன ஆதாயத்துக்கு 20.6% தனியாகவும், சம்பள வருமானத்துக்கு வருமான வரி விகிதாச்சார அடிப்படையில் தனியாகவும் வரிச் செலுத்த வேண்டும். மூலதன ஆதாயத்தில் பல அளவீடுகள் மற்றும் விலக்குகள் இருப்பதால் தகுந்த ஆலோசகரைக் கொண்டு ரிட்டர்ன் தாக்கல் செய்தல் நலம்.”

?நான் கடந்த ஆறு வருடங்களாக பஜாஜ் அலையன்ஸ் சூப்பர் சேவர் பிளானில் வருடத்துக்கு ரூ.21,751 பிரீமியம் செலுத்தி வருகிறேன். இன்னும் 24 வருடங்கள் கட்ட வேண்டும். இந்த பிளானைத் தொடரலாமா அல்லது பெய்ட் அப் செய்துவிட்டு மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டினைத் தொடங்கலாமா?

எஸ்.வித்யா, திருச்செந்தூர்

செந்தில், முதலீட்டு ஆலோசகர், பெங்குவின்

“பஜாஜ் சூப்பர் சேவர் ரிஸ்க் மற்றும் சேமிப்புத் தன்மை கொண்ட பாலிசி. சேமிப்புக்காக இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது நல்ல யோசனை அல்ல. அதுவும் இதுபோன்ற பாலிசியில் ரிட்டர்ன் என்பது மிகவும் குறைவு. நீங்கள் இப்போது 30 தவணைகளில் 6 தவணைக்கு பணம் செலுத்திவிட்டீர்கள். இதில் பெய்ட் அப் கவர் காப்பீட்டுத் தொகையில் 20 சதவிகிதம் என்பதாக இருக்கும். இப்போது உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, பாலிசியை பெய்ட்  அப் பாலிசியாக மாற்றுவது. இரண்டாவது, பாலிசியை சரண்டர் செய்வது. இந்த பாலிசியை பெய்ட்  அப் ஆக்கினால், அது அளிக்கும் ரிஸ்க் கவர் மிகவும் குறைவு. இந்த பாலிசியை சரண்டர் செய்வது நியாயமானது என்று நீங்கள் எண்ணினால், சரண்டர் வேல்யூ எவ்வளவு என்பதைத் தெரிந்துகொண்டு, பாலிசியை சரண்டர் செய்துவிட்டு, அதிக வருமானத்தைக் கொடுக்கும் மற்ற முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதற்குப் பதிலாக, நீங்கள் முழுமையான ரிஸ்க் கவர் கொண்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுங்கள். மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை மேற்கொள்ளும் உங்கள் யோசனை சரியானதுதான்.”

?எஸ்ஐபி முறையில் நீண்ட கால முதலீட்டுக்கு 5 சிறந்த ஃபண்டுகளை பரிந்துரைக்கவும்.

பாலாஜி முருகன், சென்னை -45

முருகன், மண்டல மேலாளர், புளூசிப் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேட் சென்டர்.

“பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி ஃபண்ட், டாடா ஈக்விட்டி பிஇ ஃபண்ட், டிஎஸ்பி ப்ளாக் ராக் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், எஸ்பிஐ மல்டிகேப் ஃபண்ட், எல் அண்ட் டி வேல்யூ ஃபண்ட் என ஐந்து ஃபண்டில் முதலீடுகளை மேற்கொள்ளலாம். இந்த ஃபண்டுகளில்  எஸ்ஐபி முறையில் முதலீடுகளை மேற்கொள்ளும்போது குறைந்தது 3-5 ஆண்டுகளுக்காவது முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.”

?நான் ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகளை ரூபாய் 255 என்ற விலையில் வாங்கியுள்ளேன். இது லாபகரமான முதலீடா?

மணிவண்ணன் எழில்,திருப்பூர்


ரெஜி தாமஸ்,  துணைத் தலைவர், கார்வி ஸ்டாக் புரோக்கிங்.

“ஹெக்சாவேர் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாகவே இருக்கிறது. 2016, பிப்ரவரி மாதத்திலிருந்து இந்த நிறுவனம் மூன்று முறை பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கியுள்ளது. தற்போது ஐடி துறையின் ஒட்டுமொத்த சரிவால் இந்த பங்கின் விலை குறைந்து வர்த்தகம் ஆகி வருகிறது. இதுமட்டுமின்றி முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் குறைந்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரிக்காமல் இருக்கிறது. எனினும் கேபிஐடி மற்றும் என்ஐஐடி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. டெக்னிக்கல்படி, இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ.195 என்று இருந்த நல்ல சப்போர்ட்டை உடைத்தெறிந்து, குறுகியகாலத்தில் 228 என்று ரெசிஸ்டன்ஸை தொடும் என்று எதிர்பார்க்கலாம். குறுகிய காலத்தில் இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ. 232 முதல் 173 இடையே வர்த்தகமாகலாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்