மோடியின் அச்சா தின்... சாத்தியமாக்கும் வழிகள்! - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மினி தொடர் மாணிக்கம் ராமஸ்வாமி, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், லாயல் டெக்ஸ்டைல்ஸ்.

டந்த 2015-ம் ஆண்டு வெளியான உலக மனிதவளக் குறியீடு (Human Development Index) குறித்த பட்டியலில் நம் இந்தியா 130-வது இடத்தைப் பிடித்தது. 

இந்தப் பட்டியலில் நம் நாடு தனக்கான இடத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கட்டாயத்தில் உள்ளது. மிகக் குறைவான தனிநபர் வருமானம் கொண்ட நாடுகள் எல்லாம் இந்தப் பட்டியலில் நம்மைத் தாண்டி வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

‘எல்லோருக்கும் மகிழ்ச்சியான எதிர்காலம் (அச்சா தின்)’ என்கிற வாக்குறுதியை பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டவுடனே தந்தார் நரேந்திர மோடி. நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல், ‘எல்லோருக்கும் மகிழ்ச்சியான எதிர்காலம்’ என்பது சாத்தியமில்லை என்பதை நன்கு தெரிந்துகொண்டுதான் பிரதமர்  மோடி  இந்த வாக்குறுதியைத் தந்திருக்கிறார்.

பிரதமரின் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமெனில், ஒவ்வொரு ஆண்டும் 1.5 கோடி எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். அப்படி இல்லையெனில், வேலை இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதாமாதம் குறைந்தபட்ச  தொகையை வரவு வைக்கவேண்டும்.

அப்படி ஒவ்வொரு மாதமும் வேலை இல்லாதவர்களின் கணக்குகளில் பணத்தைப் போடுவது என்பது முடியாத ஒன்று என்பதுடன், அவ்வாறு செய்வது சரியான வழியும் அல்ல. அதனால் நாம் ஒவ்வொரு ஆண்டும் 1.5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வழிகளைக் கண்டறியும் வேலைகளைச் செய்தாக வேண்டும்.

குறுகிய காலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி நன்கு உணர்ந்திருக்கிறார் என்றாலும்கூட, குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய வேலைவாய்ப்புகள் கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு உள்ளன. ஏன் நம்மால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை? இந்த முக்கியமான கேள்விக்கான பதிலை முதலில் நாம் கண்டறிந்தாக வேண்டும்.

இந்தக் கேள்விக்கான பலவிதமான காரணங்களை கார்ப்பரேட் உலகமும், பல முன்னணி தொழில் துறை அமைப்புகளும் முன்வைத்துள்ளன. பல தொழில் துறை அமைப்புகள் வேலைவாய்ப்புகளை உருவாவதற்கான முதலீட்டை அதிகரிக்க, அரசிடமிருந்து பலவகையான மானியங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன.

இன்னும் சிலர், உற்பத்தித் துறையில் இயந்திரங்களின் பங்கு (Automation) அதிகரித்து வருவதால்,  அந்தத் துறையினால் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கும் பிரச்னைக்கு தீர்வுகாண முடியாது. எனவே, சேவைத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு களை உருவாக்க உதவித் தொகை தர வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

 ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகமும் (Retail Trade), கட்டுமானத் துறையும்தான் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரமுடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். இவை தவிர, ஆரோக்கியம், மருத்துவம், சுற்றுலா போன்ற துறைகளும் புதிய வேலைவாய்ப்பு களைத் தரக்கூடியதாக உள்ளன. காரணம்,  இந்தத் துறைகள் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லக் கூடிய எந்திரங்களாக உள்ளன.

சீர்திருத்தங்களை மிக மெதுவாக நடைமுறைப் படுத்துவதுதான் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியாதற்கு காரணம் என்கிறார்கள் சிலர். சீர்திருத்தங்களை வேகப்படுத்தினால்தான் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்கிறார்கள் அவர்கள்.

 ஆனால், புதிய வேலைவாய்ப்புகளை மெதுவாக உருவாக்குவதற்கான காரணங்களை சரியாகக் கண்டுபிடிக்க வேண்டுமெனில், இந்தப் பிரச்னையை நாம் முழுமையாகப் பார்க்கவேண்டும். அதற்கு பின்வரும் விஷயங்களை நம்முடைய மனதில் மறக்காமல் வைத்திருக்கவேண்டும்.

1. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியும், வறுமைக் குறைப்பு விகிதமும் துரதிருஷ்டவசமாக கடந்த முப்பது வருடங்களாக எதிரெதிர் திசையில் சென்றுகொண்டிருக்கின்றன.அதேசமயம் பொருட்களுக்கான ஆதார விலையை அதிகரித்தல், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் மற்றும் மகாத்மா காந்தி கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் அடித்தட்டு மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கப்படும் போது வறுமை குறைந்திருக்கிறது. இப்படி செய்யப்படும்போது இந்தியா முழுக்க எல்லாத் துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியமானது அதிகரிக்கிறது.

 மகாத்மா காந்தி கிராமப்புற வளர்ச்சித் திட்டம் வருவதற்கு முன்பு குறைந்தபட்ச ஊதியமானது ரூ.60-ஆக இருந்தது. இந்தத் திட்டம் வந்தபிறகு குறைந்தபட்ச ஊதியம் ரூ.150/180-ஆக உயர்ந்தது.

இதன் மூலம் ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி முறைப்படுத்தப்படாத பணியாளர்களிடம்  சென்றடைந்திருக்கிறது.  

2. இந்தியாவில் சொத்துப் பரவல் என்பது, நுகர்வு மற்றும் வளர்ச்சி விகிதத்தை ஒரே மாதிரியாக வளர அனுமதிப்பதில்லை.

3. இங்கு 50 சதவிகித சொத்துக்கள் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதமே இருக்கும் பெரும் பணக்காரர்களிடம் உள்ளது. அவர்களின் சொத்து அதிகரித்தாலும் வருமானம் அதிகரித்தாலும் அதனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் நுகர்வானது ஒருபோதும் அதிகரிக்க பயன்படப் போவதில்லை. 

4. இந்தியாவின் 25 சதவிகித சொத்துக்கள் மக்கள்தொகையில் 15 சதவிகிதமுள்ள நடுத்தர மக்களிடம் உள்ளன. இவர்களின் வருமானத்தில் ஏற்படும் வளர்ச்சியானது அவர்கள் நுகரும் பொருட்கள் மற்றும் சேவை யில் பிரதிபலிக்கும்.

ஆனாலும், அவர்களுடைய நுகர்வானது பொருட்களின் மதிப்பில் உயர்கிற அளவுக்கு நுகரும் பொருட் களின் எண்ணிக்கையில் உயர்வ தில்லை. இவர்களுடைய நுகர்வு அல்லது செலவு முறைகளில் அதிக அளவிலான பொருட்களை வாங்குவதைக் காட்டிலும் குறைந்த விலை பொருட்களிலிருந்து விலை உயர்ந்த பொருட்களுக்கு மாறுவதுதான் அதிகமாக இருக்கிறது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று சொல்ல முடியாது. 

5. 84 சதவிகித இந்தியர்கள் மொத்த இந்திய சொத்து மதிப்பில் 25 சதவிகிதத்தை வைத்திருக்கின்றனர். இவர்களிடம் அதிகம் செலவு செய்யும் அளவுக்கு பணம் இருப்பதில்லை. இவர்களுடைய வருமானம், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பண வீக்கத்தைவிட அதிகமாக உயர்ந்தால் மட்டுமே செலவு செய்வதற்கு தேவையான பணம் இவர்களின் கையில் இருக்கும். இவர்கள் செலவு செய்தால் மட்டுமே பொருட்கள் மற்றும் சேவை களுக்கான தேவை அதிகரிக்கும்.

மேற்கண்ட இந்த விஷயங்களை நாம் கவனிக்கத் தவறினால், நம்முடைய ஜிடிபி வளர்ச்சிக்கேற்ப நமது உற்பத்தியும் நுகர்வும் அதிகரிக்கும் என்கிற தவறான முடிவுக்கே நாம் வருவோம்.   இரண்டாவதாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், அனைத்துத் துறைகளிலும் உள்ள உற்பத்தி வளர்ச்சி விகிதம். இயந்திரங்கள் அதிகம் ஆக்கிரமிக்காத துறையாக உள்ள வேளாண் துறை, நம்முடைய 50 சதவிகித மக்களுக்கு வேலைவாய்ப்பினைத் தருகிறது.

அதே சமயம், தானாக இயங்கும் இயந்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்படும் ஆட்டோமொபைல் துறையில் குறைவான ஆட்களுக்கும், அதைவிட சில மடங்கு அதிகமான  ஆட்களுக்கு ஆட்டோ துறைசார்ந்த சேவைத் துறையில் வேலை கிடைக்கிறது. 

ஆனால்  உள்கட்டமைப்பு, சில்லறை வர்த்தகம், ஜவுளி உற்பத்தி போன்ற பணியாளர்கள் அதிகம் உள்ள துறைகளும் வேகமாக இயந்திரமய மாகி வருகின்றன. அதிகம் இயந்திரமயமாகி இருக்கும் ஆட்டோ உற்பத்தித் துறையின்  வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கில் வளர்ந்தா லும், பணியாளர் தேவை என்பது குறைந்து வருகிறது.

இயந்திரமயமாக்கல் குறைவாக உள்ள துறைகளில் தொழிலாளர் உற்பத்தி அதிகமாகி வருகிறது. ஆகவே, விவசாயம் உள்பட உற்பத்தித் துறைகளில் உள்ள திறமையின்மையை மனதில் கொண்டு, உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியது அவசியம். 

அந்த வழிகளை நாளைக்கு விரிவாகச் சொல்கிறேன்!

(தொடரும்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick