பில்டிங் அப்ரூவல் அவசியமா?

பட்டா நிலத்தில் வீடு...கேள்வி - பதில்

?நான் பட்டா நிலத்தில் சமீபத்தில் சொந்தமாக வீடு கட்டி முடித்துள்ளேன். கோவில்பட்டியை ஒட்டியுள்ள ஒரு கிராமப்புறத்தில் என் மனை இருப்பதால், நான் பில்டிங் அப்ரூவல் எதுவும் இதுவரை வாங்கவில்லை. இதனால் எதிர்காலத்தில் பிரச்னை ஏதாவது வரும் வாய்ப்பு உள்ளதா?

@ தினேஷ், கோவில்பட்டி

பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

“கோவில்பட்டி என்பது நகராட்சியில் வரும். ஆகையால் கட்டட வரைபடத்துக்கான அனுமதியைப் பெறுவது உகந்தது. தாங்கள் கட்டியுள்ள வீட்டைச் சுற்றி இருப்பவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிக்கவில்லை என்றால் பொதுவாக பிரச்னை இருக்காது.

 நீங்கள் உடனடியாக வீட்டு வரி செலுத்துங்கள். மேலும், நீங்கள் அங்கு உள்ள நகராட்சி உரிமம் பெற்ற அளவையர் ஒருவரை அணுகி, தாங்கள் கட்டிய வீட்டில் சிறிய மாற்றம் செய்யப் போவதாகவும், அதற்கு கட்டட அனுமதி பெற்று தரும்படியும் கேட்கலாம். அப்படி மாற்றம் செய்ய அனுமதி பெறும்போது, ஏற்கெனவே கட்டியுள்ள கட்டடமும் அனுமதி பெற்றதாகிவிடும்.

மொத்த கட்டடத்துக்கும் உரிய கட்டணத்தை கட்டும்படி நகராட்சி சார்பில் சொல்வார்கள். அதைக் கட்டிவிடுவது நல்லது.’’
 
?என் தந்தை பங்குச் சந்தையில் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தார். சமீபத்தில் அவர் இறந்துவிட்டார். அவர் நாமினியாக எனது பெயரை குறிப்பிட்டுள்ளார். அந்தத் தொகை எனக்கு மட்டும் சேருமா அல்லது திருமணமான என் தங்கைக்கும் அதில் உரிமை உண்டா?

@ சேகரன், மதுரை

என்.ரமேஷ், வழக்கறிஞர்

“சட்டப்படி, நாமினி என்பவர் இறந்தவரின் சொத்துக்கு ஒரு டிரஸ்டி அல்லது பாதுகாவலர் ஆவார். இறந்தவரின் சொத்துக்களில் நாமினிக்கு தனிப்பட்ட முறையில் எந்த உரிமையும் இல்லை. நாமினியாக எவரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். இறந்தவரின் சொத்துக்களைப் பெற்று வாரிசுகளுக்கு பிரித்தளிக்க வேண்டிய கடமை நாமினிக்கு உண்டு.

நாமினியும் ஒரு வாரிசுதாரர் எனில், மற்ற வாரிசுதாரர்களோடு சேர்ந்து அவருக்கு உரிய பங்கை எடுத்துக் கொள்ளலாம். அதன்படி, பங்குச் சந்தையில் தங்கள் தந்தை செய்துள்ள முதலீட்டை  நாமினியாக இருக்கும் நீங்கள் திரும்பப் பெற்று, அதன்பின் தந்தையின் வாரிசுகளான தாங்களும், திருமணமான தங்கள் தங்கையும் பங்கிட்டு கொள்ளலாம்.”

?எனக்கு வயது 29. என் ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்ய வேண்டும். நான் பிசினஸ் செய்து வருவதால், பிபிஎஃப் மூலம் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என நண்பன் சொல்கிறான். நான் என்ன செய்ய வேண்டும்?

@ மணிகண்டன், தஞ்சாவூர்

அபுபக்கர் சித்திக், நிதி ஆலோசகர், வெல்த் ட்ரைட்ஸ் பைனான்ஷியல் பிளானர்.

“உங்களுக்கு 29 வயதுதான் ஆகிறது. உங்கள் ஓய்வுக் காலத்துக்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது. பிபிஎஃப்-ல் முதலீட்டை மேற்கொள்வதால் வரிச் சலுகை கிடைக்கும்.ஆனால், வருமானம் 8.5% என்கிற அளவிலேயே திரும்பக் கிடைக்கும். ஆகையால், பிபிஎஃப்-ல் நீண்ட கால நோக்கில் முதலீடுகளை மேற்கொள்வது லாபகரமாக இருக்காது.
 
வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உங்களுக்கு உபரிப் பணம் கிடைக்கும் பட்சத்தில் அந்த பணத்தை பிபிஎஃப்-ல் முதலீடு செய்யலாம்.
 
மற்றபடி, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களான டாடா எத்திகல் ஃபண்டில் 40%, பிர்லா சன் லைஃப் எம்ஐபி வெல்த்-ல் 30%, ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் பிஇ ரேஷியோ ஃபண்டில் 30% என போர்ட்ஃபோலியோவாக பிரித்து முதலீடுகளை மேற்கொள்ளலாம்.”

?நான் இ-ஃபைலிங் செய்து படிவம் ITR-V-ஐ பெங்களூருவில் உள்ள வருமான வரித் துறைக்கு கூரியர் மூலம் அனுப்பி இருந்தேன். அந்தக் கடிதம் சில நாட்கள் கழித்து திரும்பி வந்துவிட்டது. என்ன காரணமாக இருக்கக்கூடும்?

@ கே. சுரேஷ், திருச்சி

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை

“பொதுவாக, எலெக்ட்ரானிக் முறையில் வருமான வரியைத் தாக்கல் செய்பவர்கள், டிஎஸ்சி (DSC - Digital Signature Certificate) பயன்படுத்தியும் அல்லது டிஎஸ்சி பயன்படுத்தாமலும் தாக்கல் செய்யலாம்.  டிஎஸ்சி மூலம் தாக்கல் செய்யும்போது, தாக்கல் செய்த ITR-V ஒப்புகையை சிபிசி
(CPC- Central Processing Centre) எனப்படும் பெங்களூக்கு அனுப்பத் தேவையில்லை.

டிஎஸ்சியை பயன்படுத்தாத நிலையில், வருமான வரி தாக்கல் செய்த நாளிலிருந்து 120 நாட்களுக்குள் ITR-V படிவத்தை அஞ்சல்/விரைவு அஞ்சல் மூலமாக சிபிசி பெங்களூருக்கு அனுப்ப வேண்டும்.ஆனால், நீங்கள் அந்தப் படிவத்தினை கூரியர் மூலம் அனுப்பியுள்ளீர். அதனால் அது உங்களுக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.

ஆகையால், நீங்கள் ITR-V ஒப்புகை படிவத்தினை விரைவு அஞ்சல்/பதிவு அஞ்சல்/சாதாரண அஞ்சல் மூலம் பெங்களூருக்கு அனுப்பினாலே போதும்.”

?தனியார் நிறுவனத்தில் 25 வருடமாக பணிபுரிந்து வருகிறேன். என் குடும்பத்துக்கு நிறுவனத்தின் சார்பில் குரூப் ஹெல்த் பாலிசி (ரூ.1.20 லட்சம் கவரேஜ் தொகை) உள்ளது. அதைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் எனது குடும்பத்துக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் ஃப்ளோட்டர் பாலிசி ரூ.3 லட்சத்துக்கு எடுத்துள்ளேன். இந்த பாலிசியானது 2012-ம் ஆண்டு டிசம்பர் முதல் தொடர்ந்து பிரிமீயம் செலுத்தி வருகிறேன். இதுவரை எந்த ஒரு க்ளெய்மும் பெறவில்லை. இதை வரும் டிசம்பர் 2016-ல் ரெனுவல் செய்ய வேண்டியுள்ளது. இந்த சமயத்தில் எனது நெருங்கிய நண்பர் தற்போதுள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்திலிருந்து, ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு மாறும்படி ஆலோசனை கூறுகிறார். அவர் சொல்கிறபடி மாறினால், எனக்கு நன்மை கிடைக்குமா?


@ ஆர்.ராஜா, அருப்புக்கோட்டை

எஸ் ஸ்ரீதரன்,  இயக்குநர், வெல்த் லேடர் நிதி ஆலோசனை நிறுவனம்.

“கம்பெனி பாலிசி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் பாலிசி எடுப்பது உங்களின் புத்திசாலித்தனத்தைக் குறிக்கிறது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசி ஒரு அரசு சார்ந்த நிறுவனத்தின் பாலிசி ஆகும்.

அரசு சார்ந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளில், நியூ இந்தியா பாலிசி மிகச் சிறந்த பாலிசி ஆகும். இந்த பாலிசியை வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்க முடியும்.

இந்த பாலிசியில் ஒரு சில துணைப் பிரிவுகளான அறை வாடகை, டாக்டரின் கட்டணங்கள் தவிர, இது ஒரு சிறந்த பாலிசி என்பதால் இந்த பாலிசியை தொடருவதே சிறந்தது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்