செபியை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்!

பிஏசிஎல் ஃபாலோஅப்... ஜெ.சரவணன் - படம்: உ.கிரண்குமார்

டந்த வாரம் நாணயம் விகடனில் பிஏசிஎல் சொத்துக்கள் ஏலம்... முதலீட்டாளர்களின் பணம் திரும்பக் கிடைக்குமா என ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதைப் படித்த கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட பிஏசிஎல் முதலீட்டாளர் கள் சென்னை அண்ணா சாலையில் உள்ள செபி அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தினர்.  

போராட்டம் செய்தவர்களுடன் பேசினோம். ‘‘எங்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் பிஏசிஎல் நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக இருந்தவர்கள். அந்த நிறுவனத்தை நம்பி எங்களிடம் பணம் கொடுத்தோர் எங்களைத்தான் கேட்கிறார்கள். எங்களால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.

இதற்குமுன் செபி வெளியிட்ட அறிக்கையில் 2016 பிப்ரவரி 2-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் மக்களின் பணம் திருப்பி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை. நாங்கள் ஒவ்வொருவரும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம்  வரை முதலீடு செய்திருக்கிறோம். பிஏசிஎல் நிறுவன சொத்துக்கள் எப்போது ஏலம் விடப்படும், எங்கள் பணம் எப்போது திரும்பக் கிடைக்கும்  என்பதற்கான வெள்ளை அறிக்கையை செபி விரைவில் வெளியிடவேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும்” என்றனர்.

முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு செபி தரப்பில் என்ன பதில் என்று கேட்டோம். ‘‘வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. அனைத்தையும் வெளிப்படையாக அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். லோதா கமிட்டி எடுக்கும் முடிவைப் பொறுத்துதான் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த நிலையில், இப்படி அலுவலகத்தை முற்றுகையிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்றனர்.

இந்த விஷயத்தில் செபியின் நடவடிக்கைகளை எள்ளவும் குறை சொல்ல முடியாது. முடக்கப்பட்ட சொத்தினை விற்கத் தேவையான நடவடிக்கைகளை செபி வேகமாகத்தான் எடுத்து வருகிறது. முதலீட்டாளர்கள் கொஞ்சம் அமைதி காப்பதுடன், இனி இதுபோன்ற வலையில் சிக்காமல் இருப்பதே நல்லது!

படம்: உ.கிரண்குமார்


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்