ஷேர்லக்: முதல் நாளன்றே சரிந்த ஐசிஐசிஐபுரூ லைஃப்!

‘சென்னையில் சாயந்திரமாகிவிட்டால்  வதந்திகள் கிளம்பிவிடுகின்றன. எனவே, இருட்டுவதற்குள் உம்மை வந்து சந்தித்துவிடுகிறேன்’ என்று வெள்ளிக்கிழமை காலையிலேயே நமக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி இருந்தார் ஷேர்லக். அவருக்காக ஐந்து மணிக்கு தூள் பஜ்ஜி, பில்டர் காபி சகிதமாகக் காத்திருந்தோம். நேரத்துக்கு வந்தவருக்கு முதலில் சாப்பிடக் கொடுக்க, தூள் பஜ்ஜியை கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டு நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘சந்தை இந்த வாரத்திலும் நன்றாக இறங்கி இருக்கிறதே!’’ என்றோம்.

‘‘சந்தை கொஞ்சம் சரியும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், கடந்த வியாழன் அன்று சென்செக்ஸ் 465 புள்ளிகள் வரை இறங்கியதற்குக் காரணம், எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி அல்ல. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்கள்தான் முக்கிய காரணம். இந்த செய்தி வந்ததைக் கரடிகள் நன்றாக பயன்படுத்திக்கொண்டு, சந்தையை இறக்கிவிட்டுவிட்டனர். ஆனால், எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரியில் ரோல்ஓவர்கள் பெரிய அளவில் நடக்கவில்லை. இதனை வைத்தே இந்தியா - பாகிஸ்தான் எல்லை மோதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று முதலீட்டாளர் சமூகம் நினைக்கிறது என்று சொல்லலாம்.

இப்போதுள்ள நிலையில், நிஃப்டி 8400 வரை இறங்கினால்கூட ஆச்சர்யம் வேண்டாம். அப்படி இறங்கினால் இது முதலீடு செய்வதற்கு சரியான நேரம் என்பதை மறந்துவிட வேண்டாம்’’ என்றவருக்கு பில்டர் காபி தந்தோம். அதையும் ரசித்துக் குடித்தவர், ‘‘கேள்விகளை சீக்கிரமாகக் கேளுங்கள்’’ என்றார்.

‘‘ஐசிஐசிஐ புரூ லைஃப் பங்கின் விலை முதல் நாளன்றே இறங்கிவிட்டதே!’’ என்றோம் ஆச்சர்யத்துடன்.

‘‘ஐசிஐசிஐ புரூ லைஃப் முதன்முதலில் ஐபிஓ வெளியிட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனம். அதனால் ஐபிஓவில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், கடந்த வியாழக்கிழமை அன்று இந்தப் பங்கு பட்டியலிடப்பட்ட சில நிமிடங்களில்  விலை திடீரென்று குறைந்தது. ஐபிஓ-வில் ரூ.334-க்கு விற்பனையான இந்த பங்கு, ஐபிஓ விலையைக் காட்டிலும் 10-12% குறைந்தது. வெள்ளிக்கிழமை அன்று வர்த்தக முடிவில் 4 சதவிகித உயர்வுடன் ரூ.310.25 என்ற நிலையில் முடிந்தது. முதல் நாளான்று இந்தப் பங்கின் விலை குறைந்ததால், பல சிறு முதலீட்டாளர்கள் பதறியடித்துக் கொண்டு அந்தப் பங்கை விற்றார்கள். ஆனால், இந்த பங்கை அவ்வளவு அவசரப்பட்டு விற்கத் தேவை இல்லை என்பதே நிபுணர்கள் கருத்தாக இருக்கிறது. 3-4 வருடங்கள் என்ற அடிப்படையில் தற்போதுள்ள விலையில் இந்தப் பங்கை வாங்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள்’’ என்றார்.

‘‘கோல் இந்தியா பைபேக் அறிவித்திருக்கிறதே?’’ என்று கேட்டோம்.

‘‘அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் அரசு வைத்துள்ள பங்குகளை விற்று முதலீட்டைத் திரும்பப் பெறுவதன் மூலம் இந்த நிதி ஆண்டில் ரூ.56,500 கோடியைத் திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இப்போது இந்த வழிமுறையைக் காட்டிலும் பைபேக் முறையில் உபரிப் பணத்தைப் பயனுள்ள வகையில் மாற்றுவது சிறந்த வழியாக இருக்கும் என்று நினைப்பதால்,  அரசு நிறுவனங்கள் பைபேக் அறிவிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, ‘கோல் இந்தியா’ வரும் அக்டோபர் 3-ம் தேதி பைபேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ரூ.10 முகமதிப்பு கொண்ட 10 கோடி பங்குகளை ரூ.335 என்ற விலையில் வாங்கிக்கொள்ள இருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,650 கோடி. கோல் இந்தியாவின் 52 வார அதிகபட்ச விலை ரூ.349. தற்போது ரூ.315-325 என்ற வரம்பில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, ரூ.335 என்பது சிறந்த விலை இல்லை என்றாலும் இப்போதைக்கு பைபேக்கில் விற்பதன் மூலம் நியாயமான லாபம் பார்க்கலாம்’’ என்றார்.

‘‘மதர்சன் சுமி பங்கில் வெளிநாட்டினர் முதலீட்டை ரிசர்வ் வங்கி அதிகரித்திருக்கிறதே?’’ என்றோம்.

‘‘ஆட்டோ ஆன்சிலரி நிறுவனமான மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் பங்கில் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 24% மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி தற்போது அதனை 30 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் திட்டங்கள் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இனி 30%  முதலீடு செய்யலாம். இந்தத் தகவல் வெளியான வுடன் இந்தப் பங்கின் விலை சிறிது குறைந்தாலும் பிற்பாடு உயர்ந்தது ஆறுதல் அளிக்கும் விஷயம்’’ என்று பதில் சொன்னார்.

‘‘ஆட்லேப்ஸ் உள்ளிட்ட 13 நிறுவனங்களின் சர்க்யூட் லிமிட்டை பிஎஸ்இ மாற்றியிருக்கிறதே?’’ என்று வினவினோம்.

‘‘முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பங்குச் சந்தையில் அதிக வாலட்டைலிட்டியைக் குறைக்க மும்பைப் பங்குச் சந்தை 14 நிறுவனங்களின் சர்க்யூட் லிமிட்டை மாற்றி அமைத்திருக்கிறது. அவற்றில் ஆட்லேப்ஸ், ஜிடிஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் போன்றவை உள்ளன’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘கமாடிட்டி சந்தையில் அதிரடி மாற்றங்களைச் செய்திருக்கிறதே செபி?’’ என்று கேட்டோம் நம் புருவத்தை உயர்த்தியபடி.

‘‘கமாடிட்டி சந்தையில் இதுவரை ஃப்யூச்சர்ஸ் மட்டுமே வர்த்தகம் செய்யப்பட்டு வந்தன. நீண்ட காலமாகவே ஆப்ஷன்களுக்கான அனுமதியைக் கேட்டுக்கொண்டிருந்தன எம்சிஎக்ஸ் மற்றும் என்சிடிஇஎக்ஸ் சந்தைகள். தற்போது சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி, கமாடிட்டியில் ஆப்ஷன் கான்ட்ராக்ட்டுகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பு வந்ததும் எம்சிஎக்ஸ் பங்குகள் நன்றாக ஏற்றம் கண்டன. கடந்த வாரத்தில் 20% வரை விலை உயர்ந்துள்ளன.

ஆப்ஷன்ஸ் கான்ட்ராக்ட் வர்த்தகத்துக்கான விதிமுறைகளைப் பட்டியலிட்டப்பிறகு வர்த்தகம் தொடங்கும். அதற்கான வேலைகளில் கமாடிட்டி சந்தைகள் தயாராகி வருகின்றன. ஆப்ஷன்ஸ் வரவிருப்பதால் கமாடிட்டி சந்தையில் புதிதாக முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதேசமயம், நிதி அமைச்சகம் கமாடிட்டி சந்தையில் கூடுதலாக 91 பொருட்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் நலம் அடைவார்கள். அவர்களுடைய பொருட்களின் விலை சந்தையில் குறைந்தாலும், கமாடிட்டி சந்தையில் அவர்கள் நியாயமான விலையைப் பெற முடியும்’’ என்றவர், மீண்டும் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். 

‘‘ஒரே நாளில் ஏழு எஸ்எம்இ-கள் ஐபிஓ வந்திருக்கிறது. அதைப் பற்றி சொல்லுங்களேன்?’’

‘‘பெரிய நிறுவனங்களே நிதி வேண்டுமென்றால் பொதுப் பங்கு வெளியிடுவதற்கான வேலையைத்தான் செய்கின்றன. அப்படி இருக்க எஸ்எம்இ-களுக்கு ஐபிஓ வரப்பிரசாதம்தான். டெக்ஸ்டைல், பார்மா, புரூவரிஸ், ரியல் எஸ்டேட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய துறைகளைச் சார்ந்த ஏழு எஸ்எம்இகள் இன்று ஐபிஓ வெளியிட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.3.86 கோடி முதல் ரூ. 14.80 கோடி வரை உள்ளது’’ என்றவர், கவனிக்க வேண்டிய பங்குகளைத் தந்துவிட்டுப் புறப்பட்டார். அவை: மணப்புரம் ஃபைனான்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், கேசிபி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், கோத்ரெஜ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (நீண்ட கால முதலீட்டுக்கு).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்