வீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி?

ஞா.சக்திவேல் முருகன்

‘அனைவரும் சொந்த வீட்டில் வசிக்கவேண்டும்’ என்ற நோக்கத்தில் பாரதப் பிரதமரின் எல்லோருக்கும் வீடு திட்டம் (பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா) விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் பெண்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர் அனைவரும் பயனடையலாம். வீட்டினைப் புதுப்பிக்கவும் இதன் மூலம் கடன் பெறலாம்.

இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் நகரம் மற்றும் சிறு நகரங்கள் என்ற வகையில் 721 பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. (முழு விவரம் : http://bit.ly/2ds6jLk)

இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும்போது       1 லட்சம் ரூபாயில் இருந்து 2.30 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஊரக வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் வீட்டுக் கடன் வாங்கினால் இந்த மானியம் கிடைக்கும். 

யாருக்கு மானியம் கிடைக்கும்?

ஏற்கெனவே சொந்த வீடு உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் பயனடைய முடியாது. முதல் வீடு வாங்குபவராக அல்லது முதல் வீடு கட்டுபவராக அல்லது ஏற்கெனவே உள்ள வீட்டினை இயற்கை பாதிக்காத வண்ணம் அனைத்து வசதிகளையும் கொண்ட வகையில் மாற்றி அமைப்பவராக இருக்கவேண்டும். சொந்த இடம் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 சதுர மீட்டர் (323 சதுர அடி) அளவுள்ள இடமாக இருக்க வேண்டும். கட்டும் வீடு, அறை, சமையல் அறை மற்றும் கழிப்பிட வசதி என அனைத்து வசதியினையும் உள்ளடக்கிய வகையில் இருக்கவேண்டும்.

கணவன், மனைவி மற்றும் திருமணம் ஆகாத பிள்ளைகள் அடங்கிய குடும்பமாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினராக இருந்தால் குடும்ப ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாயாகவும், குறைந்த வருமானம் உள்ள பிரிவினராக இருந்தால், குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய் வரையும் இருக்கலாம்.

வீட்டுக் கடன் பெறுபவர்கள் 15 ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்தவேண்டும். இந்தத் திட்டத்தில் பயனடைய சொந்த வீடு இல்லை என்பதற்கான சான்றிதழும், வருமானச் சான்றிதழும் இணைக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் 2022–ம் ஆண்டுக்குள் ஐந்து கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் வீடு கட்டவேண்டும். வங்கிக் கடன் பெற நினைப்பவர் கள், 70 வயதுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் வயது வரம்பு நிர்ணயக்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து பல பொதுத் துறை வங்கிகளிடம் விசாரித்தபோது, இது இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்குள் வரவில்லை என அறிந்துகொள்ள முடிந்தது. சென்னை, போரூர் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையின் மேலாளர் அழகப்பன் கிருஷ்ணன், “இந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கியவர்கள் அல்லது குறைந்த வருமானம் உள்ளவர்கள், வீட்டுக் கடன் வாங்கி மானியம் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகப்பட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் பெறலாம். எவ்வளவு கடன் பெறுகிறார் என்பதைப் பொறுத்தே மானியம் கிடைக்கும். அதிகபட்சமாக 2.30 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும்.

இது வீட்டுக் கடன் வாங்குவதுபோலதான். பட்டா இருக்கவேண்டும். திட்ட அனுமதி இருக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. குடும்பத் தலைவர் அல்லது குடும்பத் தலைவி அல்லது இருவர் பெயரில் மனை இருக்க வேண்டும். வீட்டின் மதிப்பும் கணக்கிடப்படும்” என்றார்.

தனியார் வங்கியான ஐசிஐசிஐ-ல் விசாரித்த போது, “எங்கள் வங்கியிலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இந்தத் தொகையினை தேசிய வீட்டுவசதி வங்கி (என்பிஹெச்) நேரடியாக வங்கிக்கு வழங்கிவிடும். இந்த தொகையினைக் கடன் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். மீதமுள்ள கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினால் போதும்’’  என்றார்கள்.

நீங்களும் இந்தக் கடன் பெற முயற்சிக்கலாமே!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்